சிங்கப்பூர் அளவுக்கு அதிகமாகச் சேமிக்கவில்லை; பார்க்கப்போனால் பொருளியல் வளர்ச்சியுடன் கூடிய வேகத்தில் தேசிய சேமிப்பு அதிகரிக்கிறது என்று துணைப் பிரதமர் லாரன்ஸ் வோங் தெரிவித்தார்.
தேசிய ஒளிபரப்பு நிறுவனமான சிஎன்ஏவுக்கு ‘சிங்கப்பூர் சேமிப்பு வெளிப்பாடு’ என்ற புதிய தொடரையொட்டி திரு வோங் பேட்டி அளித்தார். அதில் அவர் இவ்வாறு தெரிவித்தார்.
சேமிப்பு முதலீடுகள் மூலம் கிடைக்கும் நிகர வருவாயில் இருந்து மேலும் அதிகத் தொகையை எடுத்துக்கொள்வதில் என்ன தவறு என்று சிலர் கேட்கக்கூடும்.
ஏற்கெனவே நம்மிடம் சேமிப்பு அதிகமாக இருக்கிறது என்ற தவறான எண்ணமும் சிலரிடம் இருக்கக்கூடும் என்பதை அவர் சுட்டினார்.
ஆனால், முதலீடுகள் மூலம் கிடைக்கக்கூடிய வருவாய் மீண்டும் தேசிய சேமிப்பில் சேர்க்கப்பட வேண்டியது முக்கியமான ஒன்று.
இந்த நடைமுறை மூலமாக நீண்டகாலப்போக்கில் சேமிப்பு அதிகரிக்கும் என்று திரு வோங் தெரிவித்தார்.
சேமிப்பில் திருப்பி தொகையைச் சேர்க்கவில்லை என்றால் சேமிப்பின் மதிப்பு காலப்போக்கில் குறைந்துவிடும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
சிங்கப்பூரின் சேமிப்பை நிர்வகிக்கவும் முதலீடு செய்யவும் மூன்று அமைப்புகளுக்குப் பொறுப்பு இருக்கிறது.
தொடர்புடைய செய்திகள்
ஜிஐசி குழுமம், சிங்கப்பூர் நாணய ஆணையம், தெமாசெக் ஆகிய அந்த மூன்று அமைப்புகளும் முதலீடு செய்திருக்கும் நிகர சொத்துகளில் இருந்து கிடைக்கக்கூடிய நிகர முதலீட்டு வருவாயில் அரசாங்கம் 50% வரை செலவிட முடியும்.

