சிங்கப்பூர்: தொழிலதிபர் ஜார்ஜ் கோ சிங்கப்பூர் அதிபர் தேர்தலில் போட்டியிடத் தகுதி பெற்றால், தாம் போட்டியிலிருந்து விலகிக்கொள்ளப் போவதாகத் திரு டான் கின் லியன் கூறியிருக்கிறார்.
“நான்கு-முனை போட்டிக்கு அதிபர் தேர்தல் குழு முடிவெடுத்தால், என்னுடைய வேட்புமனுவை நான் தாக்கல் செய்யமாட்டேன். ஜார்ஜ் கோவுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகளை வழங்குவேன்,” என்று திரு டான் வியாழக்கிழமை கூறினார்.
அதிபர் தேர்தலில் போட்டியிட இருவரும் தகுதி பெற்றால், இருவரில் யார் விலகிக்கொள்வது என்பதை இருவரும் முடிவெடுக்கப் போவதாகக் கடந்த சில தினங்களாகத் திரு டான் கூறி வந்தார். ஆனால், அப்படி எந்தவோர் ஏற்பாடும் இல்லை என்று கூறிய 63 வயது திரு கோ, தன்னுடைய தேர்தல் இயக்கத்தில் கவனம் செலுத்துமாறு திரு டானிடம் கேட்டுக் கொண்டார்.
இந்நிலையில், திரு டான் தாமே விலகிக்கொள்ளப் போவதாக வியாழக்கிழமை அறிவித்தார்.
அதிபர் தேர்தலில் போட்டியிட முடிவெடுத்தபோதே, நான்கு வேட்பாளர்களும் தகுதி பெறும் நிலையில் தான் விலகிக்கொள்ள ஏற்கனவே முடிவு செய்திருந்ததாக 75 வயது திரு டான் தெரிவித்தார்.
இதற்கிடையே, அதிபர் தேர்தலின் காலகட்டம் பற்றி முன்னதாகக் கூறிய கருத்துக்கு திரு டான் விளக்கமளித்தார்.
அதிபர் தேர்தலுக்கான தகுதிச் சான்றிதழுக்கு விண்ணப்பம் செய்யும் காலகட்டத்தில் தனக்கு எந்தப் பிரச்சனையும் இல்லை என்று அவர் கூறினார்.
“வேட்பாளர்களின் அறிவிப்புக்கும் வேட்புமனு தாக்கலுக்கும் ஒரு நாளுக்கும் குறைவான நேரமே இருப்பதுதான் என் பிரச்சினை,” என்றார் அவர்.
தேர்தல் பிரசார சுவரொட்டிகளும் பதாகைகளும் அச்சிடுவதற்கு குறைந்தது ஐந்து நாட்களும், பெரும் செலவும் ஆகும். அப்படி இருக்கையில், தகுதி பெறுகிறோமா இல்லையா என்பது தெரிவதற்குமுன் உத்தேச வேட்பாளர் பெரும் பணம் செலவு செய்யவேண்டுமென்று எதிர்பார்ப்பது நியாயமில்லை என்று அவர் குறிப்பிட்டார்.
இரண்டு மில்லியனுக்கு மேற்பட்ட வாக்காளர்களை எட்டுவதற்கு பிரசாரக் காலகட்டம் போதாது என்றும் அவர் மீண்டும் வலியுறுத்தினார்.

