சிங்கப்பூரின் இந்து ஆலயங்களுக்குச் சிறப்பான முறையில் தொண்டாற்றிய திரு எம்.எம். பரமானந்தம், தமது 72வது வயதில் காலமானார். நீரிழிவு மற்றும் இதயம் தொடர்பான உபாதைகளால் பாதிக்கப்பட்ட இவர், கிட்டத்தட்ட ஒரு வாரமாக உடல்நலம் மோசமானபின், வியாழக்கிழமை (ஆகஸ்ட் 17) காலை உயிர்நீத்ததாகக் குடும்ப நண்பர்கள் தெரிவித்தனர்.
அரசாங்கத் துறையில் பணியாற்றிய திரு பரமானந்தம், 1979ஆம் ஆண்டு முதல் இந்து அறக்கட்டளை வாரியம் (எச்இபி) மற்றும் இந்து ஆலோசனை மன்றத்தின் உறுப்பினராகப் பல்வேறு பொறுப்புகளில் செயல்பட்டார். பிறகு அவர், வாரியத்தின் துணைத் தலைவராக 2005ஆம் ஆண்டு முதல் 2014 ஆம் ஆண்டு வரை பதவி வகித்தார். அத்துடன் லிட்டில் இந்தியா வர்த்தகர்கள், மரபுடைமைச் சங்கத்தின் (லிஷா) முதல் தலைவராக 2000 முதல் 2005 வரையிலும் அதன் மூத்த ஆலோசகராக 2005 முதல் 2018 வரையிலும் செயல்பட்டார்.
திரு பரமானந்தம் 1989ல் அரசாங்கத்தின் பொதுச்சேவைப் பதக்கத்தையும் 1998ல் பொதுச்சேவை நட்சத்திரப் பதக்கத்தையும் பெற்றார்.
சிங்கப்பூரின் ஆலய நிர்வாகங்களை நெறிப்படுத்தியதுடன் பிற சமயங்களுடனான நல்லுறவைப் பேணுவதிலும் அவர் முனைப்பு காட்டினார். திரு பரமானந்தத்தை 46 ஆண்டுகளாகத் தெரியும் என்று கூறும் இந்து அறக்கட்டளை வாரியத்தின் தலைவர் ராஜன் கிருஷ்ணன், 72, ஆலய விவகாரங்களில் அவருடன் அணுக்கமாகப் பணியாற்றியதை நினைவுகூர்ந்தார். “ஆலய விவகாரங்களில் பழுத்த அனுபவமிக்கவராகத் திகழ்ந்த திரு பரம், பிரச்சினைகள் என வரும்போது நாடப்படும் முதல் நபராக இருப்பார்,” என்று திரு ராஜன் கூறினார்.
‘எச்இபி பரம்’ என அடைமொழியுடன் அழைக்கப்படும் அளவிற்கு வாரியத்தின் மீதான திரு பரமானந்தத்தின் ஈடுபாடு முழுமையாக இருந்ததை திரு ராஜன் சுட்டினார். பிறருடனான உறவுகளை நல்ல முறையில் வளர்த்த திரு பரம், சமரசம் செய்துவைப்பதில் வல்லவர் என்றார் திரு ராஜன்.
சுயேச்சையாக இயங்கி வந்த மூன்று சின்னக் கோயில்களை அருள்மிகு வேல்முருகன் ஞானமுனீஸ்வரர் ஆலயமாக இணைத்து, அக்கோயில்களின் நிர்வாக செயற்குழுக்களுக்கிடையே நிலவியிருந்த கருத்து வேறுபாடுகளுக்கு சுமுகமான முடிவை ஏற்படுத்தியது திரு பரமின் சாதனையாகக் கருதப்பட்டது என்றும் திரு ராஜன் குறிப்பிட்டார்.
“திரு பரம் எங்களுக்கெல்லாம் சிறந்த முன்னுதாரணமாகத் திகழ்ந்தவர். இந்த இழப்பு என்னால் வருணிக்க இயலாத ஒன்று,” என்று அவர் கூறினார்.
திரு பரமானந்தம் விளம்பரத்தையோ தற்புகழ்ச்சியையோ விரும்பாதவர் என்றும் அவர் தாத்தாவும் அப்பாவும் மேற்கொண்ட ஆலயத் திருத்தொண்டுகளை உண்மையுடன் தொடர்ந்து செய்தவர் என்றும் அவரது நெருங்கிய நண்பரும் சக தொண்டருமான ஓய்வுபெற்ற கட்டடப் பொறியாளர் கிருஷ்ணா வீரப்பன், 87, தமிழ் முரசிடம் தெரிவித்தார்.
தொடர்புடைய செய்திகள்
“அப்போதெல்லாம் ஆலயங்கள் பொதுவாகவே நல்ல முறையில் இயங்கியதில்லை. அந்நிலையைத் திருத்தி ஆலயப் பராமரிப்பையும் பக்தர்கள் அளித்த நன்கொடைப் பணத்தின் நிர்வாகத்தையும் சீரமைக்க என்னுடன் திரு பரம் மிகவும் உழைத்தார். காலப்போக்கில் நாங்கள் இருவரும் மிகவும் நெருங்கிய நண்பர்களானோம்,” என்று அவர் கூறினார்
கிட்டத்தட்ட 1985 முதல் திரு பரமானந்தத்துடனும் அவர் குடும்பத்துடனும் நெருங்கிய தொடர்பு வைத்திருந்ததாகக் கூறும் லிஷாவின் ஆலோசகரும் ஜோதி ஸ்டோர் புஷ்பக் கடை உரிமையாளருமான திரு ராஜ்குமார் சந்திரா, அவர் அமைதியாக ஆனால் செம்மையாகச் செயல்பட்டவர் என்றார். அடக்கமானவரும் பிறருடனும் நல்ல முறையில் பழகுபவருமான திரு பரமானந்தம், பற்பல தொண்டூழியர்களை இந்திய அமைப்புகளில் சேர்த்திருப்பதாக அவர் கூறினார்.
திரு பரமானந்தத்தின் நல்லுடல் வெள்ளிக்கிழமை மாலை 4.30 மணிக்கு அவரது இல்லத்திலிருந்து எடுத்துச் செல்லப்பட்டு, மண்டாய் தகனச்சாலையில் மாலை 6 மணிக்கு எரியூட்டப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.

