அதிபர் தேர்தலில் போட்டியிட அறுவர் விண்ணப்பம்: தேர்தல் துறை

2 mins read
ddd0d1b0-8738-4c2f-a93a-3013fbbc61b1
-

எதிர்வரும் அதிபர் தேர்தலில் போட்டியிட அறுவர் விண்ணப்பம் செய்திருப்பதாகத் தேர்தல் துறை வியாழக்கிழமை உறுதிப்படுத்தியது.

விண்ணப்பம் செய்வதற்கான காலக்கெடு வியாழக்கிழமை மாலை 5.30 மணிக்கு முடிவடைந்தது.

விண்ணப்பம் செய்தவர்களில் யாரெல்லாம் தேர்தலில் போட்டியிடத் தகுதி பெறுகின்றனர் என்பதை வேட்புமனு தாக்கல் செய்யும் நாளுக்கு முன்தினமான ஆகஸ்ட் 21ஆம் தேதிக்குள் அதிபர் தேர்தல் குழு அறிவிக்கவேண்டும்.

ஒன்றுக்கும் மேற்பட்டவர்கள் தகுதி பெற்றால், செப்டம்பர் முதல் தேதி தேர்தல் நடைபெறும்.

சமூகச் சான்றிதழ்களுக்கு 16 விண்ணப்பங்கள் கிடைத்ததாகவும் தேர்தல் துறை தெரிவித்தது.

எதிர்வரும் அதிபர் தேர்தல் குறிப்பிட்ட எந்த இனத்திற்கும் ஒதுக்கப்படவில்லை என்றாலும், அடுத்த ஒதுக்கப்பட்ட தேர்தல் எப்போது நடத்தப்படவேண்டும் என்பதை நிர்ணயிக்க வேட்பாளர்கள் சமூகச் சான்றிதழ் பெறவேண்டும்.

இதுவரை நால்வர் அதிபர் தேர்தலில் போட்டியிட முன்வந்துள்ளனர். முன்னாள் மூத்த அமைச்சரான 66 வயது தர்மன் சண்முகரத்தினம், தொழிலதிபரான 63 வயது ஜார்ஜ் கோ, ‘ஜிஐசி’ முதலீட்டு நிறுவன முன்னாள் தலைவரான 75 இங் கொக் சோங், என்டியுசி இன்கமின் முன்னாள் தலைவரான 75 வயது டான் கின் லியன் ஆகியோர் அவர்கள்.

இவர்களில் திரு தர்மன் மட்டும்தான் தாமாகவே தகுதிபெறுகிறார். மீதி மூவரும் தகுதி நிபந்தனைகளை நிறைவேற்றுகின்றனரா என்பதை அதிபர் தேர்தல் குழு தீர்மானிக்கும்.

தனியார் துறை வேட்பாளர்கள் சிங்கப்பூரில் ஒருங்கிணைக்கப்பட்ட அல்லது பதிவு செய்யப்பட்ட நிறுவனங்களில் தலைமைப் பொறுப்புகளை ஏற்றிருந்திருக்க வேண்டும்.

குறிப்புச் சொற்கள்