சிங்கப்பூரின் ஒற்றுமையைப் பாராட்டும் தருமபுரம் ஆதீனம்

சிங்கப்பூரின் ஒற்றுமையைப் பாராட்டும் தருமபுரம் ஆதீனம்

2 mins read
278f1c27-2c3d-492c-b620-12e347eb5346
அருள்மிகு தெண்டாயுதபாணி கோயிலின் நிர்வாகக் குழுவினர் மற்றும் பக்தர்களுடன் தருமபுரம் ஆதீனம் (நடுவில்). - படம்: அருள்மிகு தெண்டாயுதபாணி ஆலயம்
Google News Preferred Icon

கட்டுக்கோப்பிலும் ஒற்றுமையிலும் சிங்கப்பூர் உலகத்திற்கு நல்ல முன்னுதாரணமாகத் திகழ்கிறது. ஆலயங்களில் கட்டொழுங்கைக் கட்டிக்காப்பதில் சிங்கப்பூரின் நிர்வாகங்களும் பொதுமக்களும் சிறந்த முறையில் பங்களிக்கின்றனர்.

தமிழ் மண்ணில் பல நூற்றாண்டுகளாக மொழிப்புலமையையும் சைவ முறைமையும் செழிக்கவைத்த தருமபுர ஆதீனத்தின் குருமுதல்வர் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த சுவாமிகள் இவ்வாறு சிங்கப்பூரைக் கண்டு பாராட்டுகிறார்.

“பல வண்ணங்களில் மாலை தொடுப்பது ஒற்றுமை. குடும்பம், வேலையிடம், பள்ளிக்கூடம் என எதுவும் செம்மையாக இயங்குவதற்கு ஒற்றுமை அவசியம்,” என்றார். இந்த ஒற்றுமைக்கு உதாரணமாக சிங்கப்பூரில் தமது தேவார மாணவரான தெண்டாயுதபாணி கோயில் ஓதுவார் நாதன், சீன மாது ஒருவருக்குத் தேவாரப் பாடல்களைத் தனித்திறமையுடன் கற்பித்திருப்பதைச் சுட்டினார்.

2010ல் சிங்கப்பூரின் திருமுறை மாநாட்டில தம்பிரானாக இருந்து வருகை அளித்ததுடன் வேறு சில நிகழ்வுகளுக்கும் வந்துள்ள இவர், ஆதீனமான பிறகு இங்கு வந்திருப்பது இதுவே முதன்முறை.

2016ஆம் ஆண்டில் பதவியேற்ற பிறகு கடல்கடந்து செல்லும் முதல் பயணம் என்று குறிப்பிடும் தருமை ஆதீனம் இவர், ஜூன் 1 ஆம் தேதியன்று தேங் ரோடு ஸ்ரீ தெண்டாயுதபாணி கோயிலில் நடந்தேறிய திருக்குடமுழுக்கு விழாவை ஒட்டிய மண்டலாபிஷேக நிகழ்ச்சிக்காகச் சிங்கப்பூருக்கு வந்திருந்தார்.

ஜூலை 14ஆம் தேதியன்று ஆலயத்தில் தருமபுர ஆதீனம், சிங்கப்பூரைச் சேர்ந்த தம் சீடர்களையும் பொதுமக்களையும் சந்தித்தார்.

வணிகச் சமூகத்தினர் தமிழகத்திலிருந்து மலேசியா, சிங்கப்பூர், பர்மா உள்ளிட்ட நாடுகளுக்குச் சென்று அங்கு ஆலயங்களை அமைத்ததுடன் அவர்கள் ஈட்டிய செல்வத்தை வைத்தீஸ்வரன் கோயில், திருவையாறு போன்ற தமிழகத் திருத்தலங்களைச் சீர்செய்ய பயன்படுத்தியதையும் குறிப்பிட்டார்.

குமரகுருபரர், அருணாசலக் கவிராயர், கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை உள்ளிட்ட எண்ணற்றப் புலவர்களை ஆதரித்து வளர்த்த கல்வி நிலையமாகத் திகழ்ந்த ஆதீன மடம், தமிழ்க் கல்வியாளர்களையும் இசைக்கலைஞர்களையும் மானியங்களின்மூலம் தொடர்ந்து ஆதரித்து வருகிறது.

ஓலைச்சுவடிகளையும் செப்பேடுகளையும் பாதுகாப்பது முதல் மின்னம்பலம் என்ற இணையத்தளம் வரை பல்வேறு ஊடகங்களின் மூலம் பண்டைய சைவ இலக்கியங்களும் வளர்க்கப்பட்டு வருகின்றன.

இந்திய நாடாளுமன்றத்தில் வைக்கப்பட்ட செங்கோல் குறித்து கேட்கப்பட்டபோது, இதற்கு முன்னதாகவே தருமபுர ஆதீனம் வடக்கிலுள்ள காசியில் சுமார் 300 ஆண்டுகளுக்கு முன்பு மடம் நிறுவி தமிழுக்கு நிலையமாக இருந்ததைச் சுட்டினார்.

தமிழக, இந்திய அரசியல் தரப்பிலிருந்து கிளம்பும் நெருக்கடிகளை எப்படிச் சமாளிக்கிறீர்கள் என்பது குறித்த கேள்விக்கு ஆதீனம், ஆக்கல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல் என்ற ஐந்தொழில்களையும் செய்துவரும் இறைவன், ஒரு நாடக மேடையாக உலகை வைத்திருக்கிறார் என பதிலளித்தார். உலகியலில் இருந்தும் அதில் மயங்காதிருக்க மக்களுக்கு நினைவுபடுத்துவதே கோயில்கள் உலகெங்கும் அமைக்கப்பட்டதன் நோக்கம் என்றும் அவர் கூறினார்.

குறிப்புச் சொற்கள்