சிறுநீர்ப் பாதை நோய்த்தொற்று சிகிச்சைமுறை மேம்படவேண்டும்: சிங்கப்பூர் ஆய்வு

சிறுநீர்ப் பாதை நோய்த்தொற்று சிகிச்சைமுறை மேம்படவேண்டும்: சிங்கப்பூர் ஆய்வு

3 mins read
ee495f1f-ab4c-4fe7-ab44-b930b22b0c70
-

சிங்கப்பூர்: சிறுநீர்ப் பாதை நோய்த்தொற்றுக்கு சிகிச்சையளிக்க நோய் எதிர்ப்பு மருந்துகள் பயன்படுத்தப்படுவது வழக்கம். ஆனால், எல்லா வகையான நோய் எதிர்ப்பு மருந்துகளும் பொருத்தமானவை அல்ல என்பதைப் பலதுறை மருந்தக நோயாளிகளிடையே நடத்தப்பட்ட உள்ளூர் ஆய்வு கண்டறிந்துள்ளது.

சிக்கல் இல்லாத தொற்றுக்கு வழக்கமாகத் தரப்படும் நான்கு வகையான நோய் எதிர்ப்பு மருந்துகளில் இருவகை மருந்துகள் மேலானவை எனக் கண்டறியப்பட்டது.

அவற்றைப் பயன்படுத்தும் நோயாளிகளுக்கு சிகிச்சை பலனளிக்காமல் போகக்கூடிய சாத்தியம் குறைவாக இருந்தது. அறிகுறிகள் நீடிப்பதால் நோயாளிகள் மருந்தகத்திற்குத் திரும்பிச்செல்ல அல்லது சிக்கல்களால் அவசர சிகிச்சைப் பிரிவுக்குச் செல்லக்கூடிய சாத்தியமும் குறைவாக இருந்தது.

சிறுநீர்ப் பாதை நோய்த்தொற்று பாக்டீரியா கிருமியால் ஏற்படுகிறது. சிறுநீர் கழிக்கும்போது வலித்தல், அடிக்கடி சிறுநீர் கழித்தல், சிறுநீர் கலங்கலாக இருத்தல் போன்றவை அறிகுறிகளில் உள்ளடங்கும். பெண்களில் கிட்டத்தட்ட பாதி பேருக்கு அவர்களது ஆயுட்காலத்தில் குறைந்தது ஒரு முறையாவது இந்தத் தொற்று ஏற்படுவதாகப் புள்ளிவிவரங்கள் காட்டுகின்றன.

தேசியப் பல்கலைக்கழகக் குழுமத்தின் ஆறு பலதுறை மருந்தகங்களில், சிக்கல் இல்லாத தொற்றுக்கு சிகிச்சை பெற்ற 18 முதல் 50 வயதுடைய 3,194 பெண்கள், 2019 முதல் 2021 வரை ஆய்வு செய்யப்பட்டனர்.

இம்மாதம் வெளியிடப்பட்ட ஆய்வறிக்கை, சிக்கல் இல்லாத சிறுநீர்ப் பாதை நோய்த்தொற்று சிங்கப்பூரில் அமொக்சிசிலின்-கிலாவுலனேட் (ஆக்மண்டீன் எனப் பொதுவாக அறியப்படும்) அல்லது நைட்ரோஃபுரண்டோய்ன் பயன்படுத்துமாறு பரிந்துரைக்கிறது.

இவ்விரு மருந்துகளுக்கும், மற்ற இரு மருந்துகளான சைப்ரோஃபுளொக்சசின், கோ-ட்ரிமொக்சசோல் ஆகியவற்றுடன் ஒப்பிடுகையில், பாக்டீரியா எதிர்ப்பாற்றலும் சிகிச்சை தோல்வியடையும் விகிதமும் குறைவாக இருந்ததாக ஆய்வின் முதல் ஆசிரியரும் புக்கிட் பாத்தோக் பலதுறை மருந்தக மருத்துவருமான டாக்டர் ஸ்கை கோ தெரிவித்தார்.

இவ்விரு மருந்துகளில் ஒன்றை உட்கொண்ட நோயாளிகளுக்கு, மற்ற இரு மருந்துகளுடன் ஒப்பிடுகையில், சிகிச்சை தோல்வியடையக்கூடிய சாத்தியம் 33 விழுக்காடு குறைவாக இருந்ததாகவும் அவர் சொன்னார்.

இந்த ஆய்வின் மற்றொரு முக்கிய கண்டுபிடிப்பையும் டாக்டர் கோ விவரித்தார்.

அனைத்துலக வழிகாட்டிகளின்படி, அறிகுறிகளின் அடிப்படையில் சிறுநீர்ப் பாதை நோய்த்தொற்றை மருத்துவர்கள் கண்டறியலாம். ஆனால், மருத்துவர்கள் இன்னமும் சிறுநீர்ப் பரிசோதனைகள் செய்கின்றனர். இந்த ஆய்வில் 26 விழுக்காடு தொற்றுகள் மட்டுமே அறிகுறிகளின் அடிப்படையில் கண்டறியப்பட்டன.

சிக்கல் இல்லாத தொற்றுகளுக்கு ஆராய்ச்சிக்கூடப் பரிசோதனைகள் தேவையில்லை என்றும் வழிகாட்டிகள் பரிந்துரைக்கின்றன. ஆனால், உள்ளூர் மருத்துவர்கள் மூன்றில் ஒரு பகுதியினரின் சிறுநீரை ஆராய்ச்சிக்கூடப் பரிசோதனைக்கு இன்னமும் அனுப்புகின்றனர்.

சிறுநீர்ப் பரிசோதனை தொற்று இருக்கிறதா என்பதைக் கண்டறியப் பயன்படுகிறது. ஆராய்ச்சிக்கூடப் பரிசோதனை பாக்டீரியா கிருமி வகையை அடையாளம் காணப் பயன்படுகிறது.

“இந்தத் தொற்று மிகவும் பரவலானது. அறிகுறிகளைக் கொண்டே இதனைக் கண்டறியலாம்,” என்றார் டாக்டர் கோ.

“எப்போது சிறுநீர்ப் பரிசோதனை செய்யவேண்டும் என்பதற்கான வழிகாட்டிகளை நாம் பின்பற்றி, ஆகப் பொருத்தமான நோய் எதிர்ப்பு மருந்தைக் கொடுத்தால், செலவைக் குறைத்து, விளைவை மேம்படுத்தலாம்,” என்றார் அவர்.

இதற்கிடையே, சிறுநீர்ப் பாதை நோய்த்தொற்றைக் கண்டறிவதற்கான புதுப்பிக்கப்பட்ட வழிகாட்டிகள் இவ்வாண்டு இறுதிக்குள் வெளிவரும் என்று எதிபார்க்கப்படுவதாக அவர் தெரிவித்தார்.