வீடுகளில் குறைபாடு கண்டறியும் பரிசோதகர்களை கண்காணிக்க கோரிக்கை

வீடுகளில் குறைபாடு கண்டறியும் பரிசோதகர்களை கண்காணிக்க கோரிக்கை

2 mins read
741947a3-0561-40dd-b1a1-fefad8489d1d
-
Google News Preferred Icon

புக்கிட் தீமா கூட்டுரிமை குடியிருப்பு ஒன்றில் புது வீடு வாங்கிய திரு ஜானதன் லிம்மும் அவரது மனைவியும், குறைபாடுகளைக் கண்டறிய ஒரு பரிசோதகரை நியமிக்க முடிவெடுத்தனர்.

வீட்டின் அளவைப் பொறுத்து, இதற்கு $300 முதல் $1,000 வரை செலவாகும். ஆனால், “நாங்கள் சிக்கனமாகச் செலவு செய்ய விரும்பியதால், கெரோசலில் $100 கட்டணத்திற்கு இந்தச் சேவையை விளம்பரப்படுத்திய ஒரு நிறுவனத்தை என் மனைவி கண்டுபிடித்தார்,” என்றார் 39 வயது திரு லிம்.

ஆனால், அந்தப் பரிசோதகர் பல முறை கடைசி நேரத்தில் வராமல் தேதியை மாற்றியதாகத் திரு லிம் தெரிவித்தார். முடிவில் பரிசோதகர் வந்தபோதிலும், தங்களுக்குத் தெரிந்த குறைபாடுகளைக்கூடப் பரிசோதகர் கண்டுபிடிக்கவில்லை என்றார் திரு லிம்.

தரையில் பதிக்கப்பட்டிருந்த பளிங்குக்கற்களில் சில தெறித்திருந்தன. நிலைப்பேழை கதவுகள் சரியாக மூடவில்லை. இதையெல்லாம் பரிசோதகர் தவறவிட்டுவிட்டார். பின்னர், அண்டைவீட்டார் பரிந்துரைத்த இன்னொரு பரிசோதகரை அமர்த்தி பணியை முடித்தார் திரு லிம். இந்தத் தாமதத்தால், மார்ச் மாதம் வீட்டுச்சாவி கிடைத்தும், ஜூலை மாதத்தில்தான் திரு லிம்மும் அவரது மனைவியும் வீட்டில் குடியேறினார்கள்.

“நாங்கள் ஆரம்பத்திலேயே முறையான நிறுவனத்தை அமர்த்தியிருந்தால், முன்கூட்டியே குடியேறியிருக்க முடியும்,” என்றார் அவர்.

குறைபாடுகளைக் கண்டறியும் சேவைக்கான தேவை வீடு வாங்குவோரிடையில் அதிகரித்து வருவதால், “முறையான” பரிசோதகரை அடையாளம் காட்ட விதிமுறைகள் தேவைப்படலாம் என்று அந்தத் துறையைச் சேர்ந்தவர்கள் கூறுகின்றனர்.

“எங்களுக்குத் தெரிந்தவரை, வீடுகளில் குறைபாடுகளைக் கண்டறியும் பரிசோதகர்களுக்கு உள்ளூர் சான்றளிப்பு, உரிமம் அல்லது விதிமுறைகள் எதுவும் இல்லை,” என்று ஆப்சலூட் இன்ஸ்பெக்‌ஷன் நிறுவனத்தின் இயக்குநர் திரு டான் வீ குவாங், ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் செய்தித்தாளிடம் கூறினார். அதனால் யார் வேண்டுமானாலும் கடை திறந்து, குறைபாடுகளைக் கண்டறியும் சேவைகளை வழங்கலாம் என்றார் அவர்.

எஸ்ஜி டிஃபெக்ட்ஸ்கேன் நிறுவனத்தை நடத்தும் திரு முகமது இஸ்மாயில், “பயிற்சிபெறாத ஒருவர் வீட்டைப் பரிசோதிக்கும்போது, குத்தகையாளர், வீட்டுரிமையாளர் இருவருமே பாதிக்கப்படுகின்றனர். குத்தகையாளருக்கு வளங்கள் வீணாகலாம் அல்லது வீட்டுரிமையாளர் குடிபுகும் தேதி தள்ளிப்போகலாம்,” என்று கூறினார்.

இதற்கிடையே, குறைபாடுகளைப் பரிசோதிக்கும் நிறுவனங்களை கட்டட, கட்டுமான ஆணையம் ஒழுங்குமுறைப்படுத்தவில்லை என்று ஆணையத்தின் பேச்சாளர் தெரிவித்தார். இத்தகைய நிறுவனங்களைப் பற்றி கடந்த ஓராண்டில் எந்தப் புகாரும் கிடைக்கவில்லை என்று சிங்கப்பூர் பயனீட்டாளர் சங்கப் பேச்சாளர் தெரிவித்தார்.

குறிப்புச் சொற்கள்
வீடுகள்