தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

$63,000 அரசாங்கப் பயிற்சி மானிய மோசடி: ஊழியர்மீது பழி சுமத்திய மாது

1 mins read
1abfc7bd-e4a7-4fbe-8f82-2f81591d7d92
மூன்று நிறுவனங்களின் உரிமையாளரான லியூ மெய்யிங்குக்கு 27 மாதச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

அழகுச் சேவையும் பயிற்சி வகுப்புகளும் வழங்கும் மூன்று நிறுவனங்களின் உரிமையாளரான லியூ மெய்யிங், ஊழியர் அணி மேம்பாட்டு அமைப்பை ஏமாற்றி கிட்டத்தட்ட $63,000 பயிற்சி மானியங்களை அபகரிக்கத் திட்டம் தீட்டினார். அதற்குத் துணைபோக தனது ஊழியரையும் தூண்டினார். 

ஆனால், மோசடித் திட்டத்தைத் தீட்டியது தனது ஊழியர் ஜோவிஸ் லாவ் பின் லின் என்றும், தன்மீது வீணாக பழி சுமத்தப்பட்டிருக்கிறது என்றும் நீதிமன்ற விசாரணையில் லியூ கூறினார். 

லியூவின் இந்த வாதத்தை ஏற்காத நீதிமன்றம், 27 குற்றச்சாட்டுகளில் அவர் குற்றவாளி எனத் தீர்ப்பளித்தது. மோசடி செய்வதற்காகப் போலி ரசீதுகளைத் தயாரிக்கவும், இணையம்வழி விண்ணப்பங்களைத் தாக்கல் செய்யவும் ஜோவிசைத் தூண்டியதற்கான குற்றச்சாட்டுகளும் இதில் உள்ளடங்கும். 

இந்தக் குற்றங்களுக்காக, வெள்ளிக்கிழமை அவருக்கு 27 மாதச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து லியூ மேல்முறையீடு செய்யவிருக்கிறார். 

டெர்மா ஃபுளோரல் குரூப் நிறுவனத்தின் உரிமையாளரான லியூ, 2011 முதல் 2013 வரை அழகுச் சேவை பயிற்சி வகுப்புகளை நடத்தினார். 

அந்தக் காலகட்டத்தில், ஊழியர்களைப் பயிற்சிக்கு அனுப்பிய முதலாளிகளுக்கும், பயிற்சியளித்த நிறுவனங்களுக்கும் நிதி வழங்கும் திட்டத்தை ஊழியர் அணி மேம்பாட்டு அமைப்பு நடத்தி வந்தது. இந்தப் பயிற்சி மானியங்களை வழங்க பொது நிதி பயன்படுத்தப்பட்டது. 

லியூ தனது ஊழியர் ஜோவிசை பயன்படுத்தி, அமைப்பை ஏமாற்றி $62,984 மானியம் பெற்றார். 

இந்த மோசடிக்குத் துணைபோன ஜோவிசுக்கு 2019ல் 12 வாரச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. 

குறிப்புச் சொற்கள்