உருமாறும் பொருளியலில் முக்கிய இடத்தைப் பிடிக்கும் படைப்பாற்றல்

கால ஓட்டத்துடன் பொருளியலும் மாறி வருகிறது. அதன் பன்முக நிலை இடைவிடாமல் விரிவடைந்துவருகிறது. மக்களின் வாழ்க்கை முறைகள், வாழ்க்கை பாணிகள் மாறிவருகின்றன.

அவர்களின் இலக்குகளும் நாட்டங்களும் தேவைகளும் விருப்பங்களும் மாறுகின்றன. அவற்றைப் புரிந்துகொள்வது பல வேளைகளில் சிரமமாகவும் இருக்கிறது.

இதற்கு ஈடுகொடுக்கும் வகையில் பொருளியல் அறிவார்ந்த ஒன்றாக பரிணமிக்கிறது. இந்தப் பரிணாம வளர்ச்சியில், படைப்பாற்றல் தொழில்துறை மிக முக்கிய இடத்தைப் பிடித்து வருகிறது.

பொருளாக இருந்தாலும் சேவையாக இருந்தாலும் அவற்றை மக்களின் விருப்பத்தை நிறைவேற்றும் வகையில் விளம்பரம் செய்து, அவற்றை மக்கள் நாடுமாறு சாதித்து அதனால் பொருளியலுக்கு வலு சேர்ப்பதில் இந்தத் துறை முக்கிய இடத்தைப் பிடித்துவருகிறது.

படைப்பாற்றல் என்பது பொருள், சேவை பாணிகளை உருவாக்கும் ஒவ்வொருவரின் தனிப்பட்ட ஆற்றலாகும். தேர்ச்சி, கெட்டிக்காரத்தனம், திறமை ஆகியவை ஒருசேரச் செயல்படும்போது புதிய வடிவில் அறிவுசார்ந்த பொருள்களும் சேவைகளும் உருவாக ஒருவரது ஆற்றல் ஆதாரமாக இருக்கிறது. அது பொருளியலுக்கு உரமாகிறது.

காலத்திற்கு ஏற்ப பரிணமிக்கின்ற பொளியலுக்கு ஏற்ற புதிய புதிய வேலைகளை இத்தகைய படைப்பாற்றல் நிபுணர்கள் உருவாக்குகிறார்கள்.

நிறுவனங்களுக்கு உதவி அவற்றை லாபகரமானவையாக, உலக அளவில் பிரபலமானவையாக ஆக்குகிறார்கள். செல்வத்தைப் பெருக்குகிறார்கள்.

படைப்பாற்றல் வல்லுநர்கள் சிந்தித்து சிந்தித்து புதிய புதிய பாணிகளை உருவாக்கி அவற்றைப் புத்தாக்க முறைகளில் மேம்படுத்துகிறார்கள். அவற்றைக் கவர்ச்சிகரமான முறைகளில் விளம்பரப்படுத்துகிறார்கள்.

வேகமாக மாறிவரும் சமூக ஊடகங்களின் தேவைகளை நிறைவேற்றும் வகையில் நிறுவனங்கள் விரைந்து தங்கள் விளம்பர உத்திகளைச் செம்மையான முறைகளில் திருத்தி அமைத்துக்கொள்ள இதனால் வழி பிறக்கிறது.

சிங்கப்பூரின் பொருளியல் விரிவடையும் ஒரு காலகட்டத்தில் இத்தகைய நிபுணர்களுக்குத் தேவை அதிகரிக்கிறது. அதே நேரத்தில் இவர்களின் எண்ணிக்கையும் போதிய அளவுக்கு இல்லை.

இந்த நிலவரங்களும் இதர பல வியப்பூட்டும் நிலவரங்களும் அண்மையில் நடத்தப்பட்ட ஓர் ஆய்வில் தெரியவந்தன.

படைப்பாற்றலைப் பயன்படுத்தி புதிய புதிய பாணிகளில் விளம்பரங்களை உருவாக்கும் நிபுணர்கள்; ஒரு பொருளைக் கடைகளில் பார்க்கும்போதே அதை வாங்கிவிட வேண்டும் என்ற விருப்பத்தை ஏற்படுத்தும் வகையில், கண்களைக் கவரும் வகையில் பொருள்களை, சேவைகளை வடிவமைப்பவர்கள்; வாடிக்கையாளர்களின் கணக்குகள் தொடர்பான சேவைகளை வழங்கும் மேலாளர்கள்; நூலகர்கள், வேதிப் பொறியியல் நிபுணர்கள் ஆகியோர்தான் 2021ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில், சென்ற ஆண்டில் ஆக அதிக மொத்த சராசரி ஊதியம் பெற்றனர் என்பது மனிதவள அமைச்சின் வருடாந்திர வேலை சம்பள ஆய்வு முடிவுகள் மூலம் தெரியவந்துள்ளது.

இந்த தொழில்துறை நிபுணர்களுக்கு மின்னிலக்க ஞானம் மிக முக்கியம் என்பதைச் சொல்லித் தெரியவேண்டியதில்லை.

விளம்பரங்களுக்கு மட்டும் என்று இல்லை. படைப்பாற்றல் என்பது பொருளியல் வளர்ச்சிக்கு முன்னோடியான ஒன்று என்றும் அங்கீகரிக்கப்பட்டு உள்ளது.

உலகப் பொருளியல் அரங்கம் அமைப்பு இந்த ஆண்டு மே மாதம் அறிக்கை ஒன்றை வெளியிட்டது. தொழிலதிபர்கள் தெரிவித்த கருத்துகள் அதில் இருந்தன.

நிறுவனங்கள் தங்கள் பயிற்சி செயல்திட்டங்களை வடிவமைத்து மேம்படுத்தும் வேகத்தை விஞ்சி தொழில்நுட்பம் அதிவேகமாக முன்னேறிச் செல்கிறது.

இதன் காரணமாக 2027ஆம் ஆண்டுக்குள் ஊழியர்களில் 44 விழுக்காட்டினரின் மூலாதார தேர்ச்சிகள் காலத்திற்குப் பொருந்தாதவையாக போய்விடக்கூடும் என்று தொழிலதிபர்கள் சொல்வதாக அந்த அறிக்கை குறிப்பிடுகிறது.

இப்படிப்பட்ட ஒரு காலகட்டத்தில் படைப்பாற்றல், புத்தாக்கத் தேர்ச்சிகள் முக்கிய இடத்தைப் பிடிக்கின்றன.

வேறு எந்த ஒரு தேர்ச்சியையும்விட பகுப்பாய்வு சிந்தனைத் திறன் என்பது ஊழியர் கொண்டிருக்க வேண்டிய மூலாதார தேர்ச்சிகளில் ஒன்று என்று கருதும் நிறுவனங்கள் இப்போது அதிகமாக இருக்கின்றன.

இதில் படைப்பாற்றல் சிந்தனை அடுத்த இடத்தைப் பிடித்துள்ளது.

இவற்றோடு, மீள்திறன், நீக்குப்போக்கு, வேகமாக முன்னேறும் திறன்; மனஊக்கம், சுய புரிந்துணர்வு; நாட்டம், வாழ்நாள் கல்வி ஆகிய திறன்களும் ஊழியர்களிடம் இருக்க வேண்டும் என்று நிறுவனங்கள் எதிர்பார்க்கின்றன.

இவை இருந்தால் கால ஓட்டத்திற்கு, மாற்றங்களுக்கு ஈடு கொடுத்துத் தொடர்ந்து ஊழியர்கள் வேலையில் நிலைக்க இயலும், பொருளியல் உருமாற்றத்திற்கு ஏற்றபடி பொருத்தமாகத் திகழ முடியும் என்பது அங்கீகரிக்கப்படும் ஒரு நிலவரமாக உள்ளது.

பகுப்பாய்வு சிந்தனைத் திறனைவிட படைப்பாற்றல் திறனுக்கான தேவை அடுத்த ஐந்து ஆண்டுகளில் வேகமாக அதிகரிக்கும் என்றும் நிறுவனங்கள் ஆய்வில் குறிப்பிட்டுள்ளன.

அரைத்த மாவையே அரைக்க முடியாது. செக்கு மாடு போல் ஒரே இடத்தில் ஒரே மாதிரி சுற்றி சுற்றிவர இனி இயலாது. காலம் வேகமாக மாறுகிறது. நிறுவனங்களைப் பொறுத்தவரை படைப்பாற்றல்தான் வெற்றியின் ரகசியம் என்று அடையாளம் காணப்படுகிறது.

இந்த ஆற்றலுடன் கூடிய முன்னோடிகள் மாற்றங்களை வெற்றிகரமான முறையில் எதிர்கொள்ளத் தயாராக இருக்கிறார்கள்.

அதோடு, எந்த அளவுக்குத் தொழில்துறை உருமாற்றம் இடம்பெற்றாலும் அவற்றுக்கெல்லாம் அஞ்சாமல் அவற்றுக்குச் சவால் விடுத்து, போட்டிகளை எல்லாம் சமாளித்து நிறுவனம் முன்னணியில் திகழ அவர்கள் உதவுகிறார்கள்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!