அதிபர் தேர்தலில் போட்டியிட சான்றிதழ் பெற்றிருக்கும் ஜிஐசி குழுமத்தின் முன்னாள் முதலீட்டுத் துறைத் தலைவர் இங் கோக் சோங்கை தான் மதிப்பதாக அத்தேர்தலில் போட்டியிடத் தகுதி பெற்றுள்ள டான் கின் லியன் தெரிவித்து இருக்கிறார்.
இருந்தாலும் அதிபர் தேர்தலில் தனது முக்கியமான எதிர் வேட்பாளர் தர்மன் சண்முகரத்னம்தான் என்று அவர் தெரிவித்தார்.
திரு தர்மன் அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டால் அவர் ஒரு தலைசிறந்த அதிபராகச் செயலாற்றும் வாய்ப்பு இருக்கிறது. அதே நேரத்தில் அவர் சுதந்திரமான ஒருவராக இருக்கக்கூடிய வாய்ப்புகள் இல்லை என்று திரு டான் குறிப்பிட்டார்.
முன்னாள் மூத்த அமைச்சரான திரு தர்மன் மக்கள் செயல் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினராக 22 ஆண்டு காலம் சேவையாற்றி இருப்பதைச் சுட்டிக்காட்டிய திரு டான், திரு தர்மனால் மாற்றங்களை உருவாக்க முடியுமா, முடியாதா என்பதன் தொடர்பில் தனக்குச் சந்தேகம் இருப்பதாகக் கூறினார்.
சிங்கப்பூர் மக்களைப் பொறுத்தவரை இப்போதைய அரசாங்கத்தில் தொடர்பு இல்லாமல் சுதந்திரமாகச் செயல்படக்கூடிய அதிபர் ஒருவரைத் தேர்ந்தெடுப்பதே சிறந்தது என்று தான் கருதுவதாக திரு டான் குறிப்பிட்டார்.
என்டியுசி இன்கம் நிறுவனத்தின் முன்னாள் தலைமை நிர்வாகியான திரு டான், சனிக்கிழமை கம்போங் அட்மிரால்டி உணவங்காடி நிலையத்திற்குச் சென்றார். அப்போது அவர் செய்தியாளர்களிடம் பேசினார்.
திரு தர்மன் பொருளியல், அனைத்துலக விவகாரங்களில் தனக்குள்ள பின்னணிகள் பற்றி பேசி இருக்கிறார்.
என்றாலும் அத்தகைய விவகாரங்களில் அதிபர் ஒருவரை வழிநடத்த ஆலோசகர்கள் இருப்பார்கள் என்பதைத் திரு டான் சுட்டிக்காட்டினார்.
தொடர்புடைய செய்திகள்
‘‘உங்கள் எதிர்காலத்தை மாற்றக்கூடிய அதிபருக்கு வாக்களியுங்கள்,’’ என்பதே இளம் மக்களுக்குத் தான் தெரிவிக்கும் செய்தி என்றும் அவர் குறிப்பிட்டார்.
நேரடி தேர்தல் பிரசாரப் பேரணி ஒன்றை ஆகஸ்ட் 25ஆம் தேதி நடத்தலாம் என்று தான் திட்டமிடுவதாகவும் அதற்கான இடம் பின்னொரு தேதியில் உறுதிப்படுத்தப்பட உள்ளதாகவும் திரு டான் மேலும் தெரிவித்தார்.
அதிபர் தேர்தல் வேட்பாளராக தம்மை முன்மொழிந்த டான் ஜி சே, அதை வழிமொழிந்த லிம் தியன் ஆகியோர் அந்தப் பேரணியில் உரையாற்ற வாய்ப்பு இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
திரு டான் ஜி சே இப்போது செயல்படாத, ‘சிங்கப்பூரர்களே முதன்மை’ என்ற ஓர் அரசியல் கட்சியை ஏற்படுத்தியவர். அவர் சென்ற பொதுத் தேர்தலில் சிங்கப்பூர் ஜனநாயக கட்சியின் உறுப்பினராக போட்டியிட்டார்.
திரு லிம் தியன் ‘மக்கள் குரல்’ என்ற அரசியல் கட்சியை ஏற்படுத்தியவர்.
இந்த இருவரும் எதிர்த்தரப்பு அரசியல் கட்சிகளின் வாக்குகளைத் திரட்டும் நோக்கத்தில் அந்தப் பேரணியில் உரையாற்ற இருக்கிறார்களா என்று கேட்டபோது, அத்தகைய வாக்காளர்கள் ஏற்கெனவே தம் பக்கம் இருப்பதாக திரு டான் குறிப்பிட்டார்.
‘‘நடுத்தர மக்களின் ஆதரவைத் திரட்டுவதே தமது இலக்கு என்றும் அவர் கூறினார். இவர்கள் அரசியல் சாராதவர்கள். ஒளிமயமான எதிர்காலத்தை விரும்புபவர்கள். வாழ்க்கைச் செலவு உள்ளிட்ட பல பிரச்சினைகளால் இவர்களும் பாதிக்கப்படுகிறார்கள்.
‘‘இந்தப் பிரிவினரை எட்டவே நான் முயல்கிறேன்,’’ என்று திரு டான் குறிப்பிட்டார்.

