இங் கோக் சோங்: அதிகாரம், புகழ்பணத்திற்காக களம் இறங்கவில்லை

2 mins read
1eefafee-729d-4049-984a-ed55135a82ce
அதிபர் போட்டியில் களம் இறக்க தகுதி பெற்றுள்ள திரு இங் கோக் சோங், தனது வருங்கால மனைவி சிபெல் லா-வுடன் (இடது) கோவன் 209 சந்தை, உணவு நிலையத்தில் ஆகஸ்ட் 19ஆம் தேதி பலரோடும் படம் எடுத்துக்கொண்டார். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

அதிகாரம், பணம், புகழுக்காக தான் அதிபர் தேர்தலில் போட்டியிடவில்லை என்று ஜிஐசி நிதியத்தின் முதலீட்டுத் துறை முன்னாள் நிர்வாகி இங் கோக் சோங் தெரிவித்தார்.

நாட்டின் சேமிப்பைப் பாதுகாக்க முடியும் என்பதால் தேர்தலில் போட்டியிட முன்வந்துள்ளதாக அவர் கூறினார்.

வாக்களிக்க தங்களுக்குள்ள உரிமையைப் பயன்படுத்த மக்களுக்கு வாய்ப்பு அளிப்பதும் நோக்கம் என்றார் அவர்.

திரு இங், 75, சனிக்கிழமை கோவன் 209 சந்தை, உணவு நிலையத்தில் ஊடகத்திடம் பேசினார்.

சிங்கப்பூர் நாணய ஆணையம், ஜிஐசி நிதியம் ஆகியவற்றில் 45 ஆண்டுகள் சேவையாற்றி இருப்பதை நினைவுகூர்ந்த அவர், அதன் மூலம் தேசிய சேமிப்பை வலுப்படுத்த தன்னால் முடிந்தது என்றார்.

முதலீடுகளில் ஆழ்ந்த அனுபவமும் கிடைத்தது என்றும் அவர் கூறினார்.

நாட்டின் நிதிச் சேமிப்பு வீணடிக்கப்படுவதைக் காண தான் விரும்பவில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.

முன்னாள் மூத்த அமைச்சர் தர்மன் சண்முகரத்னம் போட்டியின்றி தேர்ந்து எடுக்கப்பட்டுவிடலாம் என்பதால் களத்தில் குதிக்க தான் விரும்பியதாகவும் திரு இங் தெரிவித்தார்.

சிங்கப்பூரர்கள் வாக்களிக்க தங்களுக்கு உள்ள உரிமையைப் பயன்படுத்த வாய்ப்பு இருக்க வேண்டும் என்று தான் விரும்புவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

சிங்கப்பூரின் அதிபராக தான் தேர்ந்து எடுக்கப்பட்டால் இளம் மக்களிடம் தனது ஒருமிக்க கவனம் திரும்பும் என்று கூறிய திரு இங், இளையருக்கு மூன்று அம்சங்களைப் போதிக்க தான் விரும் புவதாகத் தெரிவித்தார்.

மனஉளைச்சலை தியானம் மூலம் குறைப்பது, கூச்ச சுபாவத்தைக் கைவிட்டு விட்டு கருத்துகளை வெளிப்படையாக தெரிவிக்க முன்வருவது, பணத்தைச் சேமித்து முதலீடு செய்வது ஆகியவை அந்த மூன்று அம்சங்கள் என்று திரு இங் குறிப்பிட்டார்.

குறிப்புச் சொற்கள்