மறுமலர்ச்சி இசைக் குழு அதன் தோற்றுநர் திரு சதாசிவம் மாரிமுத்துவிற்கு நினைவஞ்சலியாக ஆகஸ்ட் 26, ஆர்இஎல்சி (RELC) அரங்கில் ஒரு பிரம்மாண்ட இசை நிகழ்ச்சியை நடத்தவுள்ளது. வசந்தம் ஸ்டார் பிரபலங்கள், புகழ்பெற்ற அக்கால மற்றும் இக்கால இசைக் கலைஞர்கள் இணைந்து இந்த இசை விருந்தைப் படைக்கவுள்ளனர். திரு சதாசிவம் மறுமலர்ச்சி இசைக் குழுவை 1972ல் அமைத்தார். அவர் கடந்த ஆண்டு ஜனவரி 25ஆம் தேதி காலமானார். திரு சதாசிவமின் மகன் திரு ரவிஷங்கர் சதாசிவம் 1996ல் இக்குழுவின் தலைமைப் பொறுப்பை ஏற்று நடத்தத் தொடங்கினார். அவர் இக்குழுவில் டிரம்மராக இருக்கிறார். இசை, குடும்பத்திலேயே வருவதற்குச் சான்றாக அவரது இரு மகள்களும் அக்கா மகனும் இக்குழுவில் முக்கிய உறுப்பினர்களாக உள்ளனர். அவரது இளைய மகள் ஸ்ரீயா, சொப்பிரானோ, சேக்சஃபோன் வாசிப்பவர். அவரது மூத்த மகள் திவ்யா, பர்கஷன்ஸ், டிரம்ஸ் ஆகிய அனைத்துத் தோல் வாத்தியக் கருவிகளையும் வாசிப்பவர். அவரது அக்கா மகன் திரிதரன் குழுவில் கிட்டார் வாசித்து வருகிறார். “சிறுவயதிலிருந்தே நான் என் அப்பா, தாத்தா இக்குழுவில் வாசிப்பதைப் பார்த்து வளர்ந்ததால் எனக்கும் இதில் நாட்டம் வந்தது. நான் என் உயர்நிலைப் பள்ளியில் பயிற்சி பெற்றேன். என் தந்தையும் எனக்கு நிறைய முக்கிய உத்திகளைச் சொல்லிக்கொடுத்தார். அப்படித்தான் என் இசைப் பயணம் தொடங்கியது,” என்றார் திவ்யா ரவிஷங்கர். “என் தாத்தா சேக்சஃபோன் வாசிப்பதைப் பார்த்திருக்கிறேன். அதனால் அவர் ஊக்கமளித்து, அவரது நற்பெயரைக் கட்டிக்காக்க நானும் கற்று வருகிறேன்,” என்றார் ஸ்ரீயா ரவிஷங்கர். திரு ரவிஷங்கர் செல்லமாக தன் “வலது கை” என்று அழைக்கும் திரு தனபால், 1986லிருந்து இக்குழுவில் தப்லா, டோலக் போன்ற அனைத்து தோல் வாத்தியக் கருவிகளையும் வாசித்து வருகிறார். தொடக்கப்பள்ளியில் வாசிக்கத் தொடங்கியவர் மறுமலர்ச்சி இசைக் குழுவிற்கு அறிமுகமானதும் இன்றுவரை அக்குழுவின் இணைபிரியா உறுப்பினராக இருக்கிறார். மறுமலர்ச்சி இசைக்குழுவின் தொடக்கத்திலிருந்து பல்லாண்டுகளாக தப்லா வாசித்துகொண்டிருந்த 77 வயது திரு நாகலிங்கம் வீரமுத்து, திரு ரவிஷங்கருக்கும் ஒரு குருவாக பல தருணங்களில் அவருக்கு வாசிக்கக் கற்றுக் கொடுத்துள்ளார். இன்றும் அவர் அக்குழுவிற்கு பெரும் துணையாக அவர்களது பயிற்சிகளுக்கும் நிகழ்ச்சிகளுக்கும் சென்று ஆதரிக்கிறார். திரு ரவிஷங்கரின் மற்றொரு குரு திரு ஃபிரான்சிஸ் சந்திரா. அவர் தப்லா, டிரம்ஸ், போன்ற அனைத்துத் தோல் வாத்தியக் கருவிகளையும் வாசிப்பதில் அவருக்கு வழிகாட்டியாக இருந்தவர். 12 இசைக் கலைஞர்களைக் கொண்டு முதன்முதலில் தொடங்கிய மறுமலர்ச்சி இசைக்குழுவில் இன்று 10 இசைக் கருவி கலைஞர்களும் 6 பாடகர்களும் நிரந்தரமாக உறுப்பினர்களாக உள்ளனர். அவற்றில் பலரும் இளையர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. வரும் ஆகஸ்ட் 26ஆம் தேதி ஒரு நல்ல, தரமான இசை விருந்தை மக்களுக்கு வழங்கவேண்டும் என்பதற்காக இசைக்குழுவினர் வாராவாரம் தீவிரமாக ஒத்திகை பார்த்து வருகின்றனர். இந்நிகழ்ச்சியின் சிறப்பு அம்சங்களாக அண்மைய வசந்தம் ஸ்டார் போட்டியில் வெற்றிகளைக் கொண்டாடிய யாக்கோப், பிரஜீத், இந்தியாவின் சரிகம போட்டி வெற்றியாளர் லாவண்யா சம்பத், யார் அந்த ஸ்டார் 2014 வெற்றியாளர் லாவண்யா இளங்கோவன், ஒலி 96.8 போட்டி 2008, 2010 வெற்றியாளர் சினேஹா முரளி, சிங்கப்பூர் ஹரிஹரன் என்று அழைக்கப்படும் சிவகுமார் பிள்ளை, பிரசித்தி பெற்ற பாடகர்கள் ஹரிதாஸ், மாலா தேவி, ஹஜ் போன்ற பல்வேறு கலைஞர்களும் பாடல்களைப் படைக்கவுள்ளனர்.
அதே சமயத்தில் மக்களை உற்சாகப்படுத்த சிங்கப்பூர் மைக்கல் ஜாக்சன் எம்.ஜே.குமாரும் புஷ்பார்ப்பணம் நடனக் குழுவினரும் சிறப்பு அங்கங்களைப் படைக்கவிருக்கின்றனர்.

