சிங்கப்பூரர்களிடையே பொதுத்தன்மை குறைந்துள்ள தற்போதைய காலகட்டத்தில் பிறர் மீதான மரியாதை அனைவருக்கும் தேவைப்படுகிறது என்று அதிபர் தேர்தல் வேட்பாளரும் முன்னாள் மூத்த அமைச்சருமான தர்மன் சண்முகரத்னம் கூறினார்.
“ஆரோக்கியமான மக்களாட்சி குறித்து மக்களிடையே கருத்து வேறுபாடுகள் இருக்கும். அனைத்து கருத்துகளுக்கும் மதிப்பளிக்க வேண்டும். எதில் அனைவரும் இணங்கியிருக்கிறோமோ அதை வேறுபாடுகளுக்கு இடையிலான பாலமாகப் பயன்படுத்தி இணைப்புகளை ஏற்படுத்தவேண்டும்,” என்றார் அவர்.
தமிழ் முரசு முதன்முறையாக ஏற்பாடு செய்த சமூகக் கருத்தரங்கான ‘தோசை பிரேக்ஃபஸ்ட் கிளப்’ நிகழ்ச்சியில், சனிக்கிழமை (ஆகஸ்ட் 19) ஏறத்தாழ 130 பார்வையாளர்கள் முன்னிலையில் உரையாற்றியபோது திரு தர்மன் இவ்வாறு கூறினார்.
தமிழ் முரசு அலுவலகத்தைப் பார்வையிட்டபின், நிகழ்ச்சி நடைபெற்ற அரங்கிற்கு வெளியே அவர் தோசையை ருசித்தார். பிறகு அவர் பங்கேற்பாளர் கேள்விகளுக்குப் பதிலளித்தார். நிகழ்ச்சியை தமிழ் முரசின் செய்தி ஆசிரியர் இர்ஷாத் முஹம்மது வழிநடத்தினார்.
சுதந்திர சிங்கப்பூரின் தொடக்கத்தில் மக்களில் பெரும்பாலானோர் எளியவர்களாக இருந்தனர். அவர்களில் பலர் கல்வியிலும் வேலை வாய்ப்புகளிலும் ஒட்டுமொத்தமாக முன்னேறியபோது அவர்களுக்கிடையே பொதுவான தன்மைகள் இருந்ததைத் திரு தர்மன், நிகழ்ச்சியின் தொடக்கத்தில் குறிப்பிட்டார்.
“ஆனால் இக்காலத்தில், பல்வேறு பொருளாதாரப் பிரிவுகள் உருவான நிலையில் மக்களிடையிலான பொதுத்தன்மை குறைந்துள்ளது. பணக்காரப் பிள்ளைகளின் வளர்ப்பு, சற்று வசதி குறைந்த வீட்டுப் பிள்ளைகளின் வளர்ப்புடன் ஒப்பிடுகையில் முற்றிலும் மாறுபட்டதாக உள்ளது,” என்று அவர் கூறினார்.
பிள்ளை பிறந்த முதல் ஆறு மாதங்களிலும் மூன்று ஆண்டுகளிலும் என்ன நடக்கிறது என்பதைக் கூர்ந்து கவனிக்க வேண்டும் என்றார் திரு தர்மன்.
“இது சிரமப்படும் பெற்றோர்களுக்கும் குடும்பங்களுக்குமான பாரம் மட்டுமன்று. இதற்கு சமூகச் செயல்பாடு, அரசாங்க ஆதரவு, மரியாதை தரும் கலாசாரம் ஆகியவை தேவைப்படுகின்றன,”என்றார் அவர். ‘அனைவருக்கும் மரியாதை’ என்ற சொற்றொடரை திரு தர்மன் தமிழில் கூறினார்.
தொடர்புடைய செய்திகள்
ஏறக்குறைய ஒன்றரை மணிநேரம் நடைபெற்ற கலந்துரையாடலில், அதிபர் பதவியின் சிறப்பு, அதன் முக்கியத்துவம் ஆகியவற்றுடன் இந்தியச் சமூக விவகாரங்கள், தொண்டூழியம், தனிப்பட்ட வாழ்க்கை போன்றவை குறித்த கேள்விகளுக்கு அவர் பதிலளித்தார்.
பலதரப்பட்ட பார்வைகளையும், மாறிவரும் அரசியல் சூழலையும் கொண்ட சமூகத்திற்கு ஒற்றுமையின் சின்னமாகவும் அனைவரையும் ஒன்றுபடுத்தக்கூடியவராகவும் ஓர் அதிபர் திகழ்வது முக்கியம் என்று திரு தர்மன் வலியுறுத்தினார்.
அமைச்சராக இருந்த காலகட்டத்தின்போதும் தாம் தனித்து முடிவெடுக்கும் திறன் மிக்கவராக இருந்ததாகக் குறிப்பிட்டார் திரு தர்மன்.

