குடியிருப்பு வீடுகள் கட்ட அரசாங்கத்தின்இரண்டு நிலப் பகுதிகள் விற்பனை

குடியிருப்பு வீடுகள் கட்ட அரசாங்கத்தின்இரண்டு நிலப் பகுதிகள் விற்பனை

2 mins read
4697ef19-0771-4939-a469-00a0ec96695b
கிளமெண்டி அவென்யூ 1ல் உள்ள நிலப்பகுதியில் 500 வீடுகள் கட்ட முடியும். - படம்: URA.GOV.SG

கிளமெண்டி அவென்யூ 1, உலு பாண்டானில் உள்ள பைன் குரோவ் ஆகிய இரண்டு இடங்களில் உள்ள இரண்டு அரசாங்க நிலப் பகுதிகள் 99 ஆண்டு குத்தகை காலத்திற்கு பொது குத்தகை மூலம் விற்கப்படுகின்றன.

இரு நிலப்பகுதிகளில் மொத்தம் 1,065 குடியிருப்பு வீடுகள் கட்ட முடியும்.

ஜிஎல்எஸ் எனும் அரசாங்க நில விற்பனை திட்டத்தின்கீழ் உறுதி செய்யப்பட்ட பட்டியலில் இடம்பெற்றுள்ள 5,160 வீடுகளில் இது ஒரு பகுதி.

குடியிருப்பு வீடுகளுக்கான தேவை கூடியுள்ளதால் 2023ஆம் ஆண்டின் இரண்டாவது பாதியில் வீடுகளுக்கான விநியோகத்தை அரசாங்கம் 26 விழுக்காடு அதிகரித்துள்ளது என்று நகரச் சீரமைப்பு ஆணையம் தெரிவித்தது.

2023ஆம் ஆண்டு முழுமைக்கும் உறுதி செய்யப்பட்ட பட்டியலில் 9,250 வீடுகள் கட்டுவதற்கான நிலப் பகுதிகள் இடம்பெற்றுள்ளன. இது, தனியார் வீடுகள், எக்சிகியூட்டிவ் கொண்டோமினிய வீடுகள் ஆகியவற்றை உள்ளடக்கிய கடந்த பத்து ஆண்டுகளில் இல்லாத புதிய உச்சமாகும்.

தற்போதைய இரண்டு இடங்களுக்கான ஏலக் குத்தகை நவம்பர் 7ஆம் தேதி நிறைவடையும்.

கிளமெண்டி அவென்யூ 1ல் உள்ள நிலப்பகுதியின் அளவு 13,451 சதுர மீட்டர். இந்த இடத்தில் ஏறக்குறைய 500 வீடுகள் கட்ட முடியும். ‘பார்சல் பி’ என்று பெயர் குறிப்பிடப்பட்டுள்ள பைன் குரோவ் நிலப்பகுதியின் அளவு 25,039 சதுர மீட்டர். இங்கு 565 வீடுகள் கட்ட முடியும்.

பைன் குரோவ் (பார்சல் பி) நிலப்பகுதி, இதற்கு முன்பு 2021ஆம் ஆண்டின் இரண்டாவது பாதியில் ஜிஎல்எஸ் கீழ் ஒதுக்கப்பட்ட பட்டியலிலிருந்து விற்பனைக்கு வெளியிடப்பட்டுள்ளது.

‘பார்சல் ஏ’ என்று குறிப்பிடப்படும் பைன் குரோவ் நிலப்பகுதி கடந்த 2022 ஜூனில் யுஓஎல் குழுமம் மற்றும் சிங்கப்பூர் நில குழுமத்துக்கு விற்கப்பட்டது.

ஒரு சதுர அடி 1,318 வெள்ளி அடிப்படையில் 671.5 மில்லியன் வெள்ளிக்கு அந்த நிலப்பகுதியை கூட்டாக இரண்டு நிறுவனங்களும் ஏலக்குத்தகையில் வாங்கியிருந்தன.

இந்நிலையில் ‘பைன்டிரி ஹில்’ வீடுகள் போட்டியாக இருப்பதால் பைன் குரோவ் (பார்சல் பி) நிலப் பகுதியை சொத்து மேம்பாட்டாளர்கள் கவனத்துடன் பரிசீலிப்பார்கள் என்று புரோப்நெக்ஸ் ரியாலிட்டியின் ஆய்வு, உள்ளடக்கப் பிரிவின் தலைவரான வோங் சியவ் யிங் தெரிவித்துள்ளார்.

அதே சமயத்தில், அப்பகுதியில் ஹென்றி பார்க் தொடக்கப்பள்ளி, பெய் தோங் தொடக்கப்பள்ளி போன்ற பள்ளிகள் இருப்பதால் இத்திட்டத்தில் கட்டப்படும் வீடுகளை குடும்பத்தினர் விரும்புவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

கிளமெண்டி அவென்யூ 1 நிலப்பகுதியின் திட்டம், வீவக வீட்டை மேம்படுத்த விரும்புவோரை ஈர்க்கும் என முதலீட்டாளர்கள் கருதுகின்றனர்.

முதிர்ச்சியடைந்த பேட்டையில் பள்ளிகள் உட்பட பல வசதிகள் இருப்பதே அதற்கு காரணம் என்று ஹட்டன்ஸ் ஏஷியா பகுப்பாய்வு பிரிவின் மூத்த இயக்குநர் லீ சே டெக் கூறியுள்ளார்.

இந்த நிலப்பகுதியில் கடலையும் நகரத்தையும் அகலப் பரப்புடன் ரசிக்கும் வகையில் 40 மாடிகள் வரை வீடுகள் கட்ட முடியும் என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

தோ பாயோ லோரோங் 1ல் உள்ள குடியிருப்புக்கான நிலப்பகுதி செப்டம்பரில் விற்பனைக்கு வெளியிடப்படும் என்று நகரச் சீரமைப்பு ஆணையம் கூறியது.

குறிப்புச் சொற்கள்