தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

வீவக வீடுகளில் முதியோருக்கு மேலும் வசதிகள்

2 mins read
2b085f38-75d5-4ea6-a171-f0f3bd660342
முதியோருக்குத் தோதாக சிங்கப்பூரின் வசிப்பிடங்களை ஆக்கும் முயற்சிகள் அவர்கள் அதிகமாக வாழ்கின்ற நகர்களில் இருந்து தொடங்கும். - படம்: தொடர்பு தகவல் அமைச்சு 

முதியோர், சக்கர நாற்காலியில் நடமாடுவோரின் வீவக வீடுகளில் அவர்களுக்குத் தோதாக மேலும் வசதிகள் இடம்பெறவிருக்கின்றன.

கழிவறை வாயில் அகலமாக இருக்கும். மடக்கக்கூடிய குளியல் இருக்கைகளும் பொருத்தப்படும்.

சுறுசுறுப்பான மூத்தோருக்கான மேம்பாட்டுத் திட்டம் 2.0ன்கீழ் வீவக வீடுகளில் இந்த வசதிகள் விரைவில் இடம்பெறும் என்று பிரதமர் லீ சியன் லூங் தேசிய தினப் பேரணி உரையில் ஞாயிற்றுக்கிழமை அறிவித்தார்.

சிங்கப்பூரின் மக்கள்தொகை வேகமாக முதிர்ச்சியடைந்து வருகிறது. அதற்கு ஆயத்தமாகும் வகையில் பரந்த அளவிலான ‘நலமாக மூப்படைதல் எஸ்ஜி’ என்ற புதிய ஒரு செயல்திட்டம் இடம்பெறுகிறது. அதன் ஒரு பகுதியாக இந்த வசதிகள் அமைக்கப்படும்.

முதியோரின் உடல்நலனை மேம்படுத்தும் நோக்கத்தில் மேலும் ஆரோக்கியமான எஸ்ஜி என்ற இயக்கம் ஏற்கெனவே இடம்பெற்று வருகிறது.

அதற்கு இந்தப் புதிய செயல்திட்டம் உறுதுணையாக இருக்கும்.

முதியோருக்கு உகந்த வாழ்க்கை இடங்களை உருவாக்கும் முயற்சிகள், முதியோர் அதிகமாக வசிக்கின்ற அங் மோ கியோ, புக்கிட் மேரா போன்ற நகர்களில் தொடங்கும். பிறகு நாடு முழுவதும் அவை நீட்டிக்கப்படும்.

இவை ஒருபுறம் இருக்க, வீதிகளிலும் இணைப்புப் பாதைகளிலும் முதியோருக்குத் தோதாக பல ஏற்பாடுகளும் இடம்பெறும்.

உடற்பயிற்சி இடங்களும் இருக்கும். சாலை கடப்பிடங்களில் பச்சை விளக்குகள் நீண்ட நேரம் எரியும். சக்கர நாற்காலிப் பயனர்களுக்காக தடுப்பில்லாச் சாய்தளங்கள், உயர்த்தப்பட்ட சாலைக் கடப்பிடங்கள், மூத்தோர் தங்களது குடியிருப்புகளை நினைவிற்கொள்ள வண்ணமிகு சின்னங்கள், நன்கு அறிமுகமான குறியீடுகள் இடம்பெறும் என்றும் பிரதமர் தெரிவித்து இருக்கிறார்.

குறிப்புச் சொற்கள்