தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

புதிய வகை ‘பிளஸ்’ வீடு; மேலும் உதவி பெறும் ‘முதிய இளையோர்’

3 mins read
சிறப்புமிக்க தாயகம், ஒளிமயமிக்க எதிர்காலம்: பிரதமர் அறைகூவல்
0e950d0f-c783-4a98-9fd6-d15e2c7361e6
முதியோருக்கான புதிய ஓய்வுக்கால ஆதரவு உதவித்திட்டங்கள் குறித்தும் பிரதமர் லீ சியன் லூங் தேசிய தினப் பேரணி உரையில் அறிவித்து இருக்கிறார். - படம்: தொடர்பு, தகவல் அமைச்சு

உலகளாவிய சவால்கள், வீடு, வேலை, வாழ்க்கைச் செலவினங்கள் தொடர்பான கவலைகளை நாடு எதிர்நோக்கும் ஒரு நேரத்தில், சிங்கப்பூர் மக்களின் தேவைகளை அரசாங்கம் தொடர்ந்து நிறைவேற்றி வரும் என்று பிரதமர் லீ சியன் லூங் மறுஉறுதிகூறி இருக்கிறார்.

திரு லீ, ஞாயிற்றுக்கிழமை அங் மோ கியோ மத்திய தொழில்நுட்பக் கல்விக் கழகத்தில் தமது 19வது தேசிய தினப் பேரணி உரையை நிகழ்த்தினார்.

‘மேலும் நலமான நாடு, வளமான எதிர்காலம்’ என்ற தலைப்பின்கீழ் உரையாற்றிய திரு லீ, அரசாங்கத்தின் முன்னுரிமைகளை பட்டியலிட்டார்.

சிங்கப்பூரர்களுக்கு ஆதரவு அளிக்கும் பல்வேறு திட்டங்களையும் செயல்திட்டங்களையும் அவர் அறிவித்தார்.

அவற்றில் மாஜுலா தொகுப்புத் திட்டம் என்பது முக்கியமானதாகும். அது 50 வயதும் அதற்கு மேற்பட்ட ஏறக்குறைய 1.4 மில்லியன் சிங்கப்பூரர்களுக்குப் பலன் அளிக்கக்கூடிய $7 பில்லியன் மதிப்புள்ள திட்டமாகும். இந்தப் பிரிவினரை திரு லீ ‘இளைய முதியோர்’ என்று வகைப்படுத்தினார்.

புதிய மாஜுலா தொகுப்புத் திட்டம் 1973ல் அல்லது அதற்குமுன் பிறந்தவர்களுக்கு, அவர்களின் ஓய்வுக்காலத் தேவைகளை நிறைவேற்ற உதவும்.

அதன்படி, அத்தகைய சிங்கப்பூரர்களின் மத்திய சேம நிதிக் கணக்கில் ஆண்டுக்கு $1,000 வரை போடப்படும். அத்துடன், ஒருநேரத் தொகையாக மசேநிதி ஓய்வுக்கால கணக்கில் $1,500 வரை சேர்க்கப்படும்.

மெடிசேவ் எனப்படும் மருத்துவ சேமிப்புக் கணக்கில் ஒருநேரத் தொகையாக $1,000 வரை போடப்படும். இதன் தொடர்பில் மேல் விவரங்கள் அடுத்த ஆண்டு வெளியிடப்படும் என்று திரு லீ குறிப்பிட்டார்.

வீடமைப்பு பற்றி குறிப்பிட்ட திரு லீ, வீவக வீடுகள் மக்களுக்குக் கட்டுப்படியாகக்கூடியதாக இருக்கும் என்றார். ஒவ்வொரு நகரிலும் மக்கள் கலந்து வாழ்வார்கள். ஒவ்வொருவருக்கும் நியாயமான ஏற்பாட்டு முறை நடப்பில் இருக்கும் என்று அவர் உறுதியளித்தார்.

வீவக வீடுகள் கட்டுப்படியாகக்கூடிய அளவில் இருப்பதை உறுதிப்படுத்தும் வகையாக அடிப்படை, பிளஸ், முதன்மை என்று அமைவிடத்தைப் பொறுத்து மூன்றுவிதமாக புதிய பிடிஓ திட்டங்கள் வகைப்படுத்தப்படும் என்று அவர் அறிவித்தார்.

பேரணி உரையில் மொத்தம் எட்டு அம்சங்கள் பற்றி திரு லீ குறிப்பிட்டார்.

வேலையிழந்த பிறகு தேர்ச்சிகளை மேம்படுத்திக்கொள்ளும் ஊழியர்களுக்கு நிதி ஆதரவு;

ஜிஎஸ்டி வரி அதிகரிப்பதால் ஏற்படக்கூடிய தாக்கத்தைக் குறைக்க மேலும் ஆதரவு தேவைப்படுமா என்பது பற்றி அரசாங்கம் மேற்கொண்டு வரும் பரிசீலனை;

வீவக வீடுகளிலும் அக்கம்பக்கங்களிலும் முதியோருக்கு உகந்த மேலும் பல வசதிகள்;

துடிப்பாக மூப்படைதல் நிலையங்களின் கட்டமைப்பு விரிவாக்கம்;

தலைமைத்துவப் புதுப்பிப்புக் கால அட்டவணையில் தாமதம் இல்லை என்ற அறிவிப்பு;

நேர்மையும், ஊழலற்ற நிலையும் சிங்கப்பூருக்கு மிக முக்கியமான நன்னெறிகள் ஆகியவை திரு லீ குறிப்பிட்ட இதர ஆறு அம்சங்கள் ஆகும்.

முன்னதாக சீன மொழியில் உரையாற்றிய பிரதமர், வாழ்க்கைச் செலவு, ஜிஎஸ்டி வரி ஆகியவற்றைச் சமாளிக்க சிங்கப்பூரர்களுக்குத் தொடர்ந்து அரசாங்கம் ஆதரவு அளிக்கும் என்று உறுதி கூறினார்.

கிட்டத்தட்ட மாதாமாதம் அரசாங்கம் தொடர்ந்து பல்வேறு மானியங்களை வழங்கும் என்று கூறிய அவர், உத்தரவாதத் தொகுப்புத் திட்டத்தை மேம்படுத்துவது பற்றி துணைப் பிரதமரும் நிதி அமைச்சருமான லாரன்ஸ் வோங் ஆராய்ந்து வருவதாகத் தெரிவித்தார்.

சிங்கப்பூர் கொவிட்-19 தொற்றை வெற்றிகரமான முறையில் சமாளித்து மீண்டுவிட்டது. என்றாலும் இப்போது அது மறுசோதனைக்கு உள்ளாகி இருக்கிறது என்று திரு லீ விளக்கினார்.

அனைத்துலக அளவிலான நிலவரங்களால் ஏற்படுகின்ற பதற்றம், பொருளியல் நிச்சயமில்லாத நிலை, உலக அளவில் வெப்பநிலை அதிகரித்து வருவது ஆகிய சவால்களைச் சிங்கப்பூர் சமாளிக்க வேண்டி இருக்கிறது என்றாரவர்.

இந்தச் சவால்களை ஒன்றாகச் சேர்ந்து சமாளிப்போம் என்று அவர் அறைகூவல் விடுத்தார்.

பொருளியல் ரீதியில் சிங்கப்பூர் மேம்படுவதாகத் தெரிவித்த திரு லீ, இந்த ஆண்டில் ஆக்ககரமான வளர்ச்சியை எதிர்பார்ப்பதாகவும் கூறினார்.

திரு லீ தனது பேரணி உரையை மலாய் மொழியில் தொடங்கினார். சிங்கப்பூரின் கலாசார மரபைக் கட்டிக்காக்கும் முயற்சிகளின் ஒரு பகுதியாக கேலாங் சிராய் சந்தையும் அதற்கு எதிரே இருக்கும் ஜூ சியாட் வளாகமும் புதுப்பொலிவு பெறும் என்றும் திரு லீ அறிவித்தார்.

குறிப்புச் சொற்கள்