தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

கேலாங் சிராய் சந்தை, ஜூ சியாட் வளாக மேம்பாட்டுப் பணிகள் விரைவில்

2 mins read
56d95a01-737c-4a3e-92be-8b2d3adaa807
ஜூ சியாட் வணிக வளாகம் (இடது), கேலாங் சிராய் சந்தை (வலது). - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

சிங்கப்பூரின் கலாசார மரபுடைமையைப் பாதுகாக்கும் முயற்சியின் ஒரு பகுதியாக, கேலாங் சிராய் சந்தையிலும் ஜூ சியாட் வணிக வளாகத்திலும் மேம்பாட்டுப் பணிகள் விரைவில் தொடங்கவிருப்பதாகப் பிரதமர் லீ சியன் லூங் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தார்.

மேம்பாட்டுப் பணியின்போது கேலாங் சிராய் சந்தையில் புதிய கட்டட முகப்பு அமைக்கப்படும். அப்பகுதியில் உள்ள நடைபாதைகளும் பொது இடங்களும் மேம்படுத்தப்படும். இந்தப் பணிகள் 2024ல் நிறைவடையும் என்று தேசிய தினப் பேரணி மலாய் உரையில் பிரதமர் அறிவித்தார்.

சந்தையின் எதிர்ப்பக்கத்தில் அமைந்துள்ள ஜூ சியாட் வணிக வளாகமும் புதுப்பொலிவு பெறவிருக்கிறது. புதிய கண்ணாடி விதானம், முன்வாசலில் நிகழ்ச்சிகள் நடத்துமிடம் போன்றவை அதில் உள்ளடங்கும். இந்த 38 ஆண்டு கட்டடத்தைச் சுற்றிலுமுள்ள பொது இடங்களும் புதுப்பிக்கப்படும்.

சென்ற 2018ஆம் ஆண்டு முதன்முதலில் அறிவிக்கப்பட்ட கேலாங் சிராய் கலாசாரத் திட்டப்பணியில் இந்த மேம்பாடுகள் இடம்பெற்றிருந்தன. திட்டப்பணியின் மற்ற பகுதிகளான விஸ்மா கேலாங் சிராய், கூரையுள்ள கட்டாந்திடல் போன்றவை ஏற்கெனவே பூர்த்தி அடைந்துவிட்டன.

“கேலாங் சிராய் ஒரு முக்கியமான கலாசார மையம், மலாய் சமூகத்திற்கு மட்டுமன்றி, சிங்கப்பூரர்கள் அனைவருக்கும் சுற்றுப்பயணிகளுக்கும் கூட,” என்று பிரதமர் லீ தமது உரையில் குறிப்பிட்டார்.

சிங்கப்பூரில் நிலவும் மலாய் கலாசார மரபுடைமையின் அழகையும் வளப்பத்தையும் எடுத்துக்காட்டவே அப்பகுதி புதுப்பிக்கப்படுவதாகவும் அவர் கூறினார்.

நிச்சயமற்ற பொருளியல் சூழலையும் எதிர்காலச் சவால்களையும் சமூகங்கள் எவ்வாறு எதிர்கொள்ள முடியும் என்பதையும் பிரதமர் லீ தமது உரையில் விவரித்தார்.

குறிப்பாக, மின்னிலக்கப் பொருளியலில் உள்ள வேலை வாய்ப்புகளையும், வேலையை இழந்துவிட்டு அடுத்த வேலைக்காகத் திறன் பயிற்சி பெறும் ஊழியர்களுக்கான புதிய தற்காலிக உதவித் திட்டத்தையும் பற்றி அவர் பேசினார்.

“மின்னிலக்கத் தளத்தில் பலதரப்பட்ட வேலை வாய்ப்புகள் உள்ளன. நீங்கள் யூடியூபராக, தரவு விஞ்ஞானியாக அல்லது பயன்பாட்டுத் திரை வடிவமைப்பாளராக இருக்கலாம்,” என்றார் அவர்.

இணைய விளையாட்டாளராக, பயிற்றுவிப்பாளராக அல்லது கருத்துரைப்பாளராகவும் இருக்கலாம் என்றார் பிரதமர் லீ. “இணைய விளையாட்டுகள் விளையாடி வாழ்க்கை நடத்த முடியாதென்று யார் சொன்னது?”

இதுபோன்ற வாய்ப்புகள் இருந்தாலும், தானியக்கமயம் அல்லது செயற்கை நுண்ணறிவு போன்றவற்றால் வேலைகள் இழக்கப்படலாம் என்பதை அவர் சுட்டிக்காட்டினார்.

“நாம் மேலும் பல வேலை இடையூறுகளை எதிர்பார்க்கலாம். நமது ஊழியர்களில் இன்னும் பலர் இந்த இடையூறுகளால் பாதிக்கப்படுவார்கள். அவர்கள் தங்களது வாழ்க்கைத்தொழில் முழுவதும் பல்வேறு முறை வேலைகளையும் இழக்க நேரிடலாம்,” என்று பிரதமர் கூறினார்.

இதற்காகவே, ஆட்குறைப்பு செய்யப்படும் ஊழியர்கள் திறன் பயிற்சி பெறுகையில் தற்காலிக நிதி ஆதரவு வழங்க புதிய திட்டம் தயாரிக்கப்படுவதாக அவர் தெரிவித்தார். முன்னேறும் சிங்கப்பூர்த் திட்டம் பூர்த்தி அடைந்தவுடன் மேல்விவரங்கள் வெளியிடப்படும்.

குறிப்புச் சொற்கள்
கட்டுமானம்