ஒற்றையர்கள் எல்லா வட்டாரங்களிலும் நீக்குப்போக்கான ஈரறை வீடு வாங்கலாம்

ஒற்றையர்கள் எல்லா வட்டாரங்களிலும் நீக்குப்போக்கான ஈரறை வீடு வாங்கலாம்

3 mins read
b0ca6499-0cdb-48e3-a847-0039049e6108
ஒற்றையர்கள் கூடிய விரையில் எல்லா வட்டாரங்களிலும் நீக்குப்போக்கான ஈரறை வீடுகளை வீவகவிடமிருந்த வாங்கலாம். - படம்: எஸ்பிஹெச்

ஒற்றையர்கள் கூடிய விரைவில் வீவகவிடமிருந்து எல்லா வட்டாரங்களிலும் தேவைக்கேற்பக் கட்டித் தரப்படும் நீக்குப்போக்கான (ஃபிளெக்ஸி) ஈரறை வீடுகளை வீடமைப்பு வளர்ச்சிக் கழகத்திடமிருந்து நேரடியாக வாங்கலாம்.

புதிய நடைமுறையின்கீழ் அடிப்படை, ஃபிளஸ், முதன்மை எனப் பகுக்கப்படும் ஈரறை வீடுகளுக்கு 2024 இரண்டாம் பாதியிலிருந்து ஒற்றையர்கள் விண்ணப்பம் செய்யலாமென பிரதமர் லீ சியன் லூங் ஞாயிற்றுக்கிழமை அறிவித்தார்.

தற்போது, 35 வயதுக்கு மேற்பட்ட தகுதிபெறும் ஒற்றையர்கள், சுவா சூ காங், ஜூரோங் ஈஸ்ட், உட்லண்ட்ஸ் போன்ற முதிர்ச்சி அடையாத 12 குடியிருப்புப் பேட்டைகளில் மட்டுமே நீக்குப்போக்கான புதிய ஈரறை வீடுகளுக்கு விண்ணப்பம் செய்ய முடியும். மத்திய வட்டாரம், பிடோக், காலாங்/வாம்போ, குவீன்ஸ்டவுன் உள்ளிட்ட முதிர்ச்சி அடைந்த பேட்டைகளில் அவர்கள் புதிய வீடு வாங்க முடியாது.

“சொந்த வீடு வாங்க கூடுதல் தெரிவுகள் கிடைப்பதையும், சிங்கப்பூரின் குடியிருப்புக் கதையில் தங்களுக்கென ஓர் இடத்தை அமைத்துக்கொள்வதையும் ஒற்றையர்கள் கண்டிப்பாக வரவேற்பார்கள்,” என்றார் பிரதமர் லீ.

ஒற்றையராக இருக்கும் சிங்கப்பூரர்கள் அதிகரித்து வருவதையும், குடியிருப்புத் தெரிவுகள் பற்றிய அவர்களின் அக்கறைகளையும் தமது தேசிய தினக் கூட்ட உரையில் பிரதமர் குறிப்பிட்டார். முதன்மை வட்டாரப் பொது குடியிருப்புத் திட்டம் 2021ல் அறிமுகமானபோது, இந்த வீடுகளை நேரடியாகவும் மறுவிற்பனைச் சந்தையிலும் வாங்க முடியாதது குறித்து ஒற்றையர்கள் அக்கறை தெரிவித்தனர்.

தகுதிபெறும் ஒற்றையர்களை எல்லா வட்டாரங்களிலும் நீக்குப்போக்கான புதிய ஈரறை வீடுகள் வாங்க அனுமதிப்பதோடு, அவர்கள் மறுவிற்பனைச் சந்தையில் ஈரறை முதன்மை வீடும், மூன்று தலைமுறை வீடுகள் தவிர மற்ற எந்த அளவிலான அடிப்படை அல்லது பிளஸ் வீடுகளும் வாங்கவும் அனுமதிக்கப்படுவார்கள் என்று தேசிய வளர்ச்சி அமைச்சும் வீடமைப்பு வளர்ச்சிக் கழகமும் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட கூட்டறிக்கை தெரிவித்தது. தற்போதைய வீடுகளின் பகுப்புமுறையில் எந்த மாற்றமும் இருக்காதென்பதால், பிளஸ் வீடுகள் மறுவிற்பனைச் சந்தையில் விற்பனைக்கு வர பத்தாண்டுகளுக்குமேல் ஆகும் என்று அறிக்கை குறிப்பிட்டது.

பிளஸ் வீடுகள், பெருவிரைவு ரயில் நிலையங்களுக்கு அல்லது நகர மையங்களுக்கு அருகில், அதிக கவர்ச்சியான இடங்களில் அமைந்திருக்கும். அவற்றை வாங்குவோர் குறைந்தது பத்தாண்டுகள் அதில் குடியிருக்க வேண்டும்.

மறுவிற்பனை வீடு வாங்குவோருக்கும் வருமான வரம்பு விதிக்கப்படும். முதல்முறையாக வீடு வாங்கும் ஒற்றையர்கள் இதற்குமுன் வீட்டு மானியம் எதுவும் பெறாதவர்களாகவும், $7,000க்கு மேற்போகாத மாத வருமானம் உள்ளவர்களாகவும் இருக்கவேண்டும். அதோடு, வீட்டுக்கு விண்ணப்பம் செய்வதற்கு முன்பான 30 மாதங்களில் தனியார் வீட்டின் உரிமையாளராக அல்லது பங்குதாரராக இருக்கக்கூடாது.

“மாறிவரும் வாழ்க்கைமுறையாலும் சமூக நாட்டங்களாலும், குடும்பத்துடன் சேர்ந்து வாழ்வதற்குப் பதிலாகச் சொந்தமாக வீடு வாங்கி அதில் வாழ விரும்பும் ஒற்றையர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. பொது குடியிருப்பின் தொடர்பில் நாங்கள் நடத்திய முன்னேறும் சிங்கப்பூர்த் திட்ட அங்கங்களில் கலந்துகொண்ட சில ஒற்றையர்கள், வயதான பெற்றோருக்கு அருகில் இருந்து பரஸ்பர பராமரிப்பும் ஆதரவும் வழங்குவதற்காக முதிர்ச்சி அடைந்த பேட்டைகளில் வீடு வாங்க விரும்புவதாகத் தெரிவித்தனர்,” என்று அறிக்கை குறிப்பிட்டது.

குறிப்புச் சொற்கள்