வீடமைப்பு வளர்ச்சிக் கழக வீடமைப்புத் திட்டத்தின்கீழ் பிளஸ் என்னும் புதிய வகை வீடமைப்புத் திட்டம் அறிமுகம் செய்யப்படுவதாக பிரதமர் லீ சியன் லூங் தமது தேசிய தினப் பேரணி உரையில் குறிப்பிட்டார்.
2024ஆம் ஆண்டு இரண்டாம் பாதியில் தொடங்கப்படும் பிடிஓ வீடுகள் பிளஸ் வகையையும் உட்படுத்தி மொத்தம் மூன்று வகைகளைக் கொண்டிருக்கும்.
அடிப்படை, முதன்மை மற்றும் பிளஸ் ஆகிய மூன்று வகைகள் அவை. மாறிவரும் வீடமைப்புத் தோற்றங்களை பிரதிபலிக்கும் வண்ணம் அவை பிரிக்கப்பட்டிருக்கும்.
வீவகவின் அடிப்படை மானியத்தையும் நிபந்தனைகளையும் கொண்டிருக்கும் வகையில் அடிப்படை வீடமைப்புத் திட்டம் தொடரும்.
முதன்மை வீடமைப்புத் திட்டம் என்பது குடியிருப்பாளர்கள் அதிகமாக விரும்பும் மத்திய வட்டாரங்களில் செயல்படும். இந்தத் திட்டத்தின்கீழ் உருவாகும் வீடுகளுக்கு அதிக மானியங்கள் வழங்கப்படும் அதேவேளை கட்டுப்பாடுகளும் அதிகமாக இருக்கும்.
புதிதாக உருவாக்கப்படும் பிளஸ் வீடமைப்புத் திட்டம் மக்களுக்கு விருப்பமான வட்டாரங்களில் அமையும். இந்தத் திட்டத்தின்கீழ் கட்டப்படும் வீடுகளுக்குக் கூடுதல் மானியங்கள் வழங்கப்படும். அத்துடன், இதற்கான விற்பனை நிபந்தனைகள் முதன்மை திட்டத்தைக் காட்டிலும் எளியதாகவும் அடிப்படைத் திட்டத்தைக் காட்டிலும் கடுமையாகவும் இருக்கும்.
எம்ஆர்டி நிலையம் அல்லது நகர மையத்தின் அருகே உள்ள வட்டாரங்களுக்கு உட்பட்ட, கண்ணைக்கவரும் இடங்களில் பிளஸ் திட்ட வீடுகள் கட்டப்படும். ஆனால், முதன்மை திட்டங்களைக் காட்டிலும் குறைவான மத்திய வட்டாரத்தை உள்ளடக்கி இருக்கும்.
பிளஸ் திட்டம் தற்போது, நடப்பில் இருக்கும் முதிர்ச்சியடைந்த, முதிர்ச்சியடையாத பேட்டைகளை வகைப்படுத்துவதற்கு மாற்றாக அமையும்.
தொடர்புடைய செய்திகள்
அத்துடன், முதன்மை திட்டத்தில் உள்ள குறைந்தபட்ச குடியிருப்புக் காலம் 10 ஆண்டு என்பது பிளஸ் திட்டத்திற்கும் விரிவுபடுத்தப்படுகிறது. அடிப்படைத் திட்டத்திற்கான குறைந்தபட்ச குடியிருப்புக் காலம் ஐந்தாண்டு என்பதில் மாற்றமில்லை.
வீட்டு விலை கட்டுப்படியாவதை உறுதி செய்யவும் குடியிருப்புப் பேட்டைகளில் சமூகக் கலவையை நிலைநாட்டவும் அனைவருக்கும் நியாயமாக இருக்கவும் பொது குடியிருப்புக்குப் புதிய பகுப்புமுறை தேவைப்படுவதாகப் பிரதமர் லீ கூறினார்.
தற்போதைய பகுப்புமுறையின்கீழ் முதிர்ச்சி அடைந்த பேட்டைகளுக்கும் முதிர்ச்சி அடையாத பேட்டைகளுக்கும் இடையிலான வேறுபாடு மங்கி வருகிறது. முதிர்ச்சி அடையாத பேட்டைகள் அதிகமாக மேம்பட்டு வருவது இதற்குக் காரணம். செலவைக் குறைக்கும் அதே வேளையில், குறைந்த-நடுத்தர வருமானக் குடும்பங்களுக்கு ஆக அதிகமான ஆதரவு வழங்க, அரசாங்கம் படிப்படியாகக் கூடுதல் வீட்டு மானியம் வழங்கும்.
ஆனால், வீடமைப்புச் சூழல் மாறி வருவதால், ‘விருப்பமான’ இடங்களில் கட்டப்படும் வீடுகளை மதிப்பிடுவது அதிகாரிகளுக்கு ஒரு பிரச்சினையாக நீடித்து வருவதாக அவர் கூறினார்.
இதற்கான தீர்வாக, பெருவிரைவு ரயில் நிலையங்கள், நகர மையங்கள் ஆகியவற்றுக்கு அருகில் கட்டப்படும் புதிய வீடுகள் புதிய இடைநிலை வீடமைப்புத் திட்டத்தின்கீழ் இடம்பெறும் என்று பிரதமர் லீ அறிவித்தார்.
பொங்கோலுக்குப் பிறகு புதிதாக உருவாகிவரும் முதல் வீடமைப்பு வளர்ச்சிக் கழகக் குடியிருப்புப் பேட்டை தெங்கா. இதற்கடுத்த குடியிருப்புப் பேட்டை உருவாவதற்கு சில காலமாகும்.
எனவே, புதிய வீடமைப்பு வளர்ச்சிக் கழக வீடுகளை ஏற்கெனவே இருக்கும் குடியிருப்புப் பேட்டைகளில் அல்லது அவற்றுக்கு அருகில் கட்டவேண்டிய அவசியம் அதிகரிக்கும். இதனால், தேவைக்கேற்ப கட்டித் தரப்படும் வீடுகளுக்கான குலுக்கல் ஒரு லாட்டரி குலுக்கல்போல் மாறிவிடக்கூடும் என்று அவர் எச்சரித்தார்.
அதிர்ஷ்டசாலிகள் பெரும் ஆதாயம் அடைவது மற்றவர்களுக்கு நியாயமல்ல. வீட்டு விலை உயர்த்தப்பட்டால், ஆதாயம் குறையும். ஆனால், பெரும்பாலான வீடுகளுக்கு விலை கட்டுப்படியாகாமல் போய்விடும்.
“வெற்றிகரமாக வீடு வாங்கி மகிழ்ச்சி அடையும் ஒவ்வொருவருக்கும், வெற்றிபெறாத 20 அல்லது அதைவிட அதிகமானோர் இருப்பார்கள். இது நியாயமில்லை,” என்று பிரதமர் லீ குறிப்பிட்டார்.