கிட்டத்தட்ட 68 விழுக்காட்டு சிங்கப்பூர் பயனீட்டாளர்கள் அடுத்த ஆறு முதல் 12 மாதங்களுக்குள் பொருளியல் சரிவு ஏற்படலாம் என முன்னுரைத்ததாக திங்கட்கிழமை யூஓபி வங்கி வெளியிட்ட ஆய்வறிக்கை தெரிவித்தது.
கடந்த ஆண்டில் வெளியிடப்பட்ட யூஓபி வங்கி ஆய்வறிக்கையிலும் கிட்டத்தட்ட இதே அளவு, அதாவது 70 விழுக்காட்டினர் பொருளியல் மந்தம் வரும் என்று கூறினர். பயனீட்டாளரின் மனப்போக்கு மாறாமல் நீடிப்பதையே இது காட்டுகிறது.
வாழ்க்கைச் செலவினமே சிங்கப்பூரர்களின் பெருத்த கவலையாக நீடிப்பதும் இந்த ஆய்வறிக்கையில் காணமுடிந்தது. குறிப்பாக, இந்த வட்டார மக்களைக் காட்டிலும் சிங்கப்பூரர்களிடம் இது அதிகமாக இருப்பதை யூஒபியின் வருடாந்திர ‘ஆசியான் பயனீட்டாளர் உணர்வுபூர்வ ஆய்வு’ சுட்டியது.
பணவீக்க உயர்வு குறித்து கவலைகொள்வதாக 71 விழுக்காட்டினரும் குடும்பச் செலவுகள் அதிகரிப்பு குறித்து வருந்துவதாக 64 விழுக்காட்டினரும் தெரிவித்து உள்ளனர்.
ஆசியான் மக்களைக் காட்டிலும் இது அதிகம். பணவீக்க கவலை 63 விழுக்காடாகவும் குடும்பச் செலவு கவலை 57 விழுக்காடாகவும் ஆசியான் மக்கள் மத்தியில் இருப்பதை ஆய்வு கண்டறிந்தது.
இருப்பினும் இந்த இரு அம்சங்கள் குறித்து கவலைப்படும் சிங்கப்பூரர்களின் விகிதம் கடந்த ஆண்டைக் காட்டிலும் குறைவாக உள்ளது.
நீண்டகால நிதிக் கடப்பாடு சிங்கப்பூரர்களின் கவலைக்குரிய மூன்றாவது அம்சமாகும். சேமிப்பு அல்லது சொத்து அல்லது செல்வம் கரைவது குறித்த கவலை அடுத்ததாக உள்ளது. இந்த இரு அம்சங்களிலும் 59 விழுக்காட்டினர் கவலை தெரிவித்தனர்.
அதேநேரம் சேமிக்கும் பழக்கம் சிங்கப்பூரர்களிடம் அதிகரித்துள்ளதை ஆய்வு கண்டறிந்தது. கிட்டத்தட்ட நான்கில் ஒரு சிங்கப்பூரர் (26 விழுக்காடு) அன்றாடச் செலவுகளுக்காக பணத்தை ஒதுக்கி வைப்பது தெரியவந்தது. இந்த விகிதம் கடந்த ஆண்டு 20 விழுக்காடாக இருந்தது.
தொடர்புடைய செய்திகள்
கடந்த ஜூன் மாதம் ஆசியான் நாடுகளில் நடத்தப்பட்ட ஆய்வில் 3,400 பேர் கலந்துகொண்டு கருத்து தெரிவித்தனர். அவர்களில் 1,000 பேர் சிங்கப்பூரர்கள். எஞ்சியவர்கள் இந்தோனீசியா, மலேசியா, தாய்லாந்து மற்றும் வியட்னாமைச் சேர்ந்தவர்கள்.

