இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்கே திங்கட்கிழமை இஸ்தானாவில் அதிபர் ஹலிமா யாக்கோப்பைச் சந்தித்துப் பேசினார். திரு விக்ரமசிங்கேயின் இருநாள் சிங்கப்பூர் வருகையின் தொடக்கத்தில் இச்சந்திப்பு நிகழ்ந்தது.
பின்னர் இது குறித்து அதிபர் ஹலிமா தமது ஃபேஸ்புக்கில் பதிவு ஒன்றை வெளியிட்டார்.
“இலங்கை அதிபருடன் பயனுள்ள பேச்சு நடந்தது. உணவுப் பாதுகாப்பு, புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மற்றும் வட்டாரப் பொருளியல் ஒத்துழைப்பு பற்றி இருவரும் பேசினோம்.
“பல்வேறு துறைகளில் ஒத்துழைப்பு, மக்களுடன் மக்கள் கொண்டிருக்கும் உறவுகள் ஆகியவற்றின் மூலம் இரு நாடுகளின் தோழமை வலுவாகி உள்ளது,” என்று அந்தப் பதிவில் திருவாட்டி ஹலிமா குறிப்பிட்டிருந்தார்.
பின்னர் திரு விக்ரமசிங்கே தற்காப்பு அமைச்சர் இங் எங் ஹென்னைச் சந்தித்தார். புவிசார் அரசியல் நிலவரம், சிறிய கடல் துறை நாடுகளுக்கான வட்டார நிலைத்தன்மை ஆகியன குறித்து இருவரும் ஆலோசனை நடத்தினர்.