S$1 பில்லியன் கள்ளப் பணத்தை நல்ல பணமாக மாற்றுவது தொடர்பாக சிங்கப்பூரில் கைது செய்யப்பட்ட 10 வெளிநாட்டவரில் இருவர் சீனாவின் காவல்துறையால் தேடப்படுபவர்கள் என்ற தகவல் வெளியாகி உள்ளது.
துருக்கியைச் சேர்ந்த வாங் ஷுயிமிங், 42, கம்போடிய நாட்டவரான சென் கின்குயுவான், 33, ஆகிய இருவர் அவர்கள்.
இவர்களில் வாங்கை கடந்த ஆண்டு முதலே சீனாவின் ஷாங்டோங் மாநிலத்தைச் சேர்ந்த ஸுபோ நகர காவல்துறை தேடி வருகிறது. சட்டவிரோத சூதாட்டக் கும்பல் நடவடிக்கை தொடர்பாக தன்னிடம் உடனடியாக சரணடையுமாறு கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் காவல்துறை அறிவித்திருந்தது.
மற்றொருவரான சென், சீனாவின் ஃபூஜியன் மாநிலத்தைச் சேர்ந்த ஆங்ஸி நகரப் பாதுகாப்புத் துறையால் 2019ஆம் ஆண்டு முதல் தேடப்பட்டு வருபவர். பல்வேறு குற்றங்கள் தொடர்பில் அவரை அந்தக் காவல்துறை தேடியது. அவர் ஈடுபட்ட குற்றங்களையும் அது பட்டியலிட்டு இருந்தது.
சிங்கப்பூரில் கைதான பத்துப் பேரில் ஒருவர் பெண். 31 வயதுக்கும் 44 வயதுக்கும் இடைப்பட்ட அவர்கள் அனைவரும் எம்ப்ளாய்மண்ட் பாஸ் மற்றும் டிபெண்டென்ட் பாஸ் வைத்திருந்தார்கள் என்று மனிதவள அமைச்சு கடந்த வெள்ளிக்கிழமை கூறியது.