உத்தரவாதத் தொகுப்புத்திட்டத்தை மேம்படுத்தும் சாத்தியத்தை அரசாங்கம் ஆராயும்

உத்தரவாதத் தொகுப்புத்திட்டத்தை மேம்படுத்தும் சாத்தியத்தை அரசாங்கம் ஆராயும்

2 mins read
2805555e-abda-4058-b5ba-cc7450f56a0d
ஜிஎஸ்டி உயர்வின் தாக்கத்தைச் சமாளிக்கும் வகையில் திட்ட விரிவாக்கம் ஆராயப்படுவதாக பிரதமர் கூறினார். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

பொருள், சேவை வரி 2024ல் ஒன்பது விழுக்காடாக உயரவிருப்பதால், இந்த வரிக்கான உத்தரவாதத் தொகுப்புத்திட்டத்தை மேலும் மேம்படுத்தும் சாத்தியத்தை நிதி அமைச்சு கவனமாக ஆராயும் என்று பிரதமர் லீ சியன் லூங் ஞாயிற்றுக்கிழமை கூறினார்.

உத்தரவாதத் தொகுப்புத்திட்டம் திட்டமிட்டபடி தொடரும் என்று தேசிய தினக் கூட்டத்தில் மாண்டரின் மொழியில் ஆற்றிய உரையில் பிரதமர் லீ குறிப்பிட்டார். ஒரு விழுக்காடு பொருள், சேவை வரி உயர்வின் பாதிப்பை ஈடுசெய்ய அது பயன்படும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

“ஆனால் எல்லோருக்கும் சற்று கூடுதல் உதவி கிடைக்கும் வகையில், உத்தரவாதத் தொகுப்புத்திட்டத்தை மேலும் மேம்படுத்த முடியுமா என்று நீங்கள் யோசிப்பீர்கள்,” என்றார் அவர்.

இதை மனதில் கொண்டு, இதுபற்றி கவனமாக ஆராயும்படி துணைப் பிரதமரும் நிதி அமைச்சருமான லாரன்ஸ் வோங்கிடம் கேட்டுக் கொண்டிருப்பதாகப் பிரதமர் லீ தெரிவித்தார்.

“காத்திருந்து பார்ப்போம் – கண்டிப்பாக, நல்ல செய்தி கிடைக்குமென்று எதிர்பார்ப்போம்,” என்றும் அவர் கூறினார்.

பொருள், சேவை வரி உயர்வின் பாதிப்பைக் குறைப்பதற்காக, 2020ஆம் ஆண்டு வரவுசெலவுத் திட்டத்தில் உத்தரவாதத் தொகுப்புத்திட்டம் முதன்முதலில் அறிவிக்கப்பட்டது.

இத்திட்டத்திற்கான $6 பில்லியன் ஒதுக்கீடு, 2022 வரவுசெலவுத் திட்டத்தில் $6.6 பில்லியனாகவும், பின்னர் இவ்வாண்டு $9.6 பில்லியனாகவும் உயர்த்தப்பட்டது.

பொருள், சேவை வரி விகிதம் இவ்வாண்டு ஜனவரி முதல் எட்டு விழுக்காடானது. அடுத்த ஆண்டு ஜனவரி முதல் வரி விகிதம் மேலும் ஒரு விழுக்காடு அதிகரிக்கும்.

இந்நிலையில், செலவின அதிகரிப்பின் சுமையைக் குறைக்க ஏற்கனவே வழங்கப்பட்டுவரும் பல்வேறு நிதி உதவிகளைப் பிரதமர் லீ பட்டியலிட்டுக் காட்டினார்.

“சிங்கப்பூரர்களைக் கவனித்துக்கொள்வோம் என்ற வாக்குறுதியை நாங்கள் நிறைவேற்றுகிறோம்,” என்றார் அவர்.

சுகாதார அமைச்சு ஜூலை மாதம் தொடங்கிய மேலும் ஆரோக்கியமான எஸ்ஜி (Healthier SG) திட்டத்திற்குப் பதிவு செய்யும்படியும் பிரதமர் லீ தமது உரையில் வலியுறுத்தினார்.

மக்கள் தங்கள் ஆரோக்கியத்திற்குப் பொறுப்பெடுத்துக் கொள்ளவும், உடல்நலனைக் கட்டிக்காக்கவும் உதவுவது இத்திட்டத்தின் இலக்கு.

தானும் தமது மனைவி திருவாட்டி ஹோ சிங்கும் இத்திட்டத்தில் சேர்ந்துவிட்டதாகப் பிரதமர் தெரிவித்தார்.

சிங்கப்பூரர்கள் நலமாக மூப்படைய உதவுவதன்வழி, நீண்டகாலத்தில் மருத்துவச் செலவுகள் குறையும். இதன்வழி, நாட்டின் ஒட்டுமொத்த சுகாதாரப் பராமரிப்புச் செலவின் அதிகரிப்பும் மெதுவடையும் என்று எதிர்பார்ப்பதாக அவர் சொன்னார்.

ஒருசிலர் உடல்நலம் இல்லாதபோதும் மருத்துவரிடம் செல்லத் தயங்குகின்றனர் என்பதை அவர் சுட்டிக்காட்டினார். “உங்கள் மனதை மாற்றிக்கொள்வீர்கள் என்று நம்புகிறேன். மருத்துவரிடம் வழக்கமாகச் செல்லுங்கள், அவர்களின் அறிவுரையைக் கேளுங்கள், நல்ல பழக்கங்களை வளர்த்துக்கொண்டு ஆரோக்கியம் பேணுங்கள்,” என்று பிரதமர் லீ கூறினார்.

குறிப்புச் சொற்கள்