சிங்கப்பூரர்களை ஒன்றிணைக்கும் ‘கண்ணியமான’ போட்டியைக் காண விரும்பும் அதிபர் வேட்பாளர் தர்மன்

2 mins read
216f8a47-b6ce-42ce-bf92-2d81c60c94db
வேட்புமனுத் தாக்கல் தினத்தன்று மக்கள் கழகத் தலைமையகத்தில் உரையாற்றினார் திரு தர்மன் சண்முகரத்னம். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்
multi-img1 of 2

எதிர்வரும் அதிபர் தேர்தல் கண்ணியம் மிக்க, மரியாதைக்குரிய ஒரு போட்டியாக நடைபெறுவதைத் தாம் எதிர்பார்த்திருப்பதாக முன்னாள் மூத்த அமைச்சர் தர்மன் சண்முகரத்னம், 66, தெரிவித்துள்ளார்.

அதிபர் தேர்தல் வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் சிங்கப்பூரர்களுக்கும் சிங்கப்பூரின் எதிர்காலத்திற்கும் எவ்வாறு பங்காற்ற உள்ளனர் என்பதைக் காட்டும் ஒன்றாக இந்தத் தேர்தல் அமையும்.

மக்கள் கழகத் தலைமையகத்தில் தமது வேட்புமனுத் தாக்கல் வெற்றிகரமாகக் கைகூடியதை அடுத்து சிங்கப்பூரர்களுக்கு நாட்டின் நான்கு அதிகாரத்துவ மொழிகளிலும் வணக்கம் தெரிவித்து தமது இரண்டு நிமிட நன்றியுரையைத் துவங்கினார் திரு தர்மன்.

அதிபர் தேர்தலில் இவருடன் அரசாங்க முதலீட்டு நிறுவனத்தின் (ஜிஐசி) முன்னாள் முதலீட்டுத் தலைமை அதிகாரி இங் கொக் சொங், முன்னாள் என்டியுசி இன்கம் தலைமை நிர்வாகி டான் கின் லியான் ஆகியோர் போட்டியிடத் தகுதிபெற்றுள்ளனர்.

செப்டம்பர் 1ஆம் தேதியன்று அதிபர் தேர்தல் நடைறெ உள்ளது.

“புதிய பதவிகள், புதிய அறிக்கைகள் ஆகியவற்றின் அடிப்படையில் நான் தேர்தலில் நிற்கவில்லை. என் வாழ்க்கையின் நீண்டகால நோக்கத்தின் அடிப்படையில்தான் நிற்கிறேன்.

“ஒரு நியாயமான, கருணைமிக்க, அனைவரையும் உள்ளடக்கிய ஒரு சமுதாயத்தில் நான் நம்பிக்கை கொண்டுள்ளேன். அதை அடைய என் வாழ்க்கையை அர்ப்பணம் செய்வேன்,” என்று செய்தியாளர்களிடம் கூறினார் திரு தர்மன்.

“நம் எதிர்காலம் குறித்துத்தான் நாம் கவலைப்படுகிறோம். அது மாறுபட்ட ஓர் எதிர்காலமாக இருக்கும். சிரமங்களும் சவால்களும் மிகுந்த ஓர் எதிர்காலத்தை நாம் சந்திக்க உள்ளோம். நான் அதிபர் தேர்தலில் நிற்பதற்கு இதுவே காரணம். நாடளவிலும் அனைத்துலக அளவிலும் எனது அனுபவங்களையும் ஆற்றல்களையும் வரும் ஆண்டுகளில் வழங்க விரும்புகிறேன்,” என்றார் அவர்.

தேர்ந்தெடுக்கப்படும் அதிபரிடம் எதிர்பார்க்கப்படும் தேவைகளும் அதிகரிப்பது உறுதி என்று ஊடகங்களிடம் தெரிவித்த திரு தர்மன், சிங்கப்பூர் சிக்கல் நிறைந்த, சவால் மிக்க ஓர் எதிர்காலத்திற்குள் அடியெடுத்து வைப்பதாகச் சுட்டினார்.

தம் மீது களங்கத்தை ஏற்படுத்தும் இயக்கம் ஒன்றிற்கு திரு தர்மனும் அவரின் ஆதரவாளர்களும் காரணம் என்று முன்னதாக திரு டான் மறைமுகமாகக் குறிப்பிட்டு பின்னர் அதை மீட்டுக்கொண்டார். இது தொடர்பாக திரு தர்மனிடம் கேட்கப்பட்டபோது, திரு டான் அக்கருத்தை மீட்டுக்கொண்டதில் தாம் மகிழ்ச்சி கொள்வதாகத் தெரிவித்தார்.

“நான் பிரதிநிதிக்கும் அனைத்திற்கும் புறம்பாக இது உள்ளது. சிங்கப்பூருக்குப் பங்காற்றும் வேட்பாளர்களின் ஆற்றலில் கவனம் செலுத்த வேண்டும். களங்கம் ஏற்படுத்தும் இயக்கங்களைத் தவிர்க்க வேண்டும்,” என்றார் அவர்.

அதிபர் தேர்தல் வேட்பாளர் தர்மன் சண்முகரத்னம் தம் ஆதரவாளர்கள் முன்னிலையில் தமது இயக்கத்தின் சின்னமான அன்னாசிப்பழம் ஒன்றைக் காட்டினார்.
அதிபர் தேர்தல் வேட்பாளர் தர்மன் சண்முகரத்னம் தம் ஆதரவாளர்கள் முன்னிலையில் தமது இயக்கத்தின் சின்னமான அன்னாசிப்பழம் ஒன்றைக் காட்டினார். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

அன்னாசிப்பழத்தைத் தமது இயக்கத்தின் சின்னமாகத் தேர்ந்தெடுத்ததன் காரணம் குறித்து கேட்கப்பட்டபோது, சிங்கப்பூரின் வெவ்வேறு சமூகங்களுக்குப் பொருள் மிகுந்த ஒரு சின்னம் அது என்று விளக்கம் அளித்தார்.

தமது பிரசாரத் திட்டங்கள் தொடர்பில் பேசிய திரு தர்மன், 20 ஆண்டுகளுக்கும் மேலாகத் தாம் மக்களைச் சந்தித்து அவர்களுடன் உறவாடுவதைத் தொடரப் போவதாகப் பதிலளித்தார்.

குறிப்புச் சொற்கள்