இரண்டாவது முறை அதிபர் தேர்தல் வேட்பாளராகத் தகுதிபெற்றிருக்கும் டான் கின் லியான் தமக்கு ஆதரவு தருமாறு சிங்கப்பூரர்களிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.
அதிபர் அலுவலகத்தின் அதிகாரத்தைப் பயன்படுத்தி மக்களின் வாழ்க்கையை மேம்படுத்துவேன் என்றும் அவர் தெரிவித்தார்.
செவ்வாய்க்கிழமை மக்கள் கழகத்தின் தலைமையகத்தில் தமது வேட்புமனுத் தாக்கல் வெற்றிகரமாக நிறைவேறியதை அடுத்து இரண்டு நிமிட நன்றியுரையை நிகழ்த்தினார் அவர்.
“ஆட்சி செய்யும் அரசாங்கத்தைச் சாராத ‘உண்மையான சுயேச்சை’ அதிபர் ஒருவருக்கு வாக்களிக்கும் வாய்ப்பை நான் சிங்கப்பூர் மக்களுக்கு வழங்க விரும்புகிறேன்,” என்றார் திரு டான்.
“நான் தேர்ந்தெடுக்கப்பட்டால், அரசியலமைப்பின்படி என் பொறுப்புகளை அயராது, நேர்மை தவறாது, என் ஆற்றல் அனைத்தையும் திரட்டியவாறு நிறைவேற்றுவேன்,” என்று குறிப்பிட்டார்.
இந்தப் பொறுப்புகள், நாட்டின் இருப்புநிதிகளைத் தற்காக்கவும் பொதுச் சேவைத் துறையின் நேர்மையைக் கட்டிக்காக்கவும் உதவும் என்று குறிப்பிட்டார் முன்னாள் என்டியுசி இன்கம் தலைமை நிர்வாகியான திரு டான்.
உரை நிகழ்த்தியதை அடுத்து செய்தியாளர்களைச் சந்தித்த திரு டான், ‘அழகான இளம்பெண்கள்’ குறித்து அவரது ஃபேஸ்புக் பதிவுகள் தொடர்பில் பேசினார். பெரும்பாலானோர் அப்பதிவுகளை மேம்போக்காக எடுத்துக்கொண்டாலும் அண்மையில் அதே பதிவுகள் விமர்சிக்கப்படும் ஒரு விவகாரமாகிவிட்டதாக அவர் குறிப்பிட்டார்.
தமக்கு எதிராகக் களங்கம் ஏற்படுத்தும் இந்த இயக்கம், ஒரு குறிப்பிட்ட அரசியல் கட்சி கிளப்பியது என்று அவர் கூறினார்.
தொடர்புடைய செய்திகள்
“நீங்கள் ஆட்சியில் இருப்பவர்கள். மக்களிடம் ஒற்றுமையைக் கட்டிக்காக்கச் சொல்கிறீர்கள். அரசாங்கத்தில் நம்பிக்கை வைக்குமாறு கேட்கிறீர்கள். இதுதான் நீங்கள் நடந்துகொள்ளும் விதமா? மக்களை ஈடுபடுத்த வேறு சிறந்த வழி ஏதும் இல்லையா?” என்று தாம் அந்த அரசியல் கட்சியைக் கேட்க விரும்புவதாகச் செய்தியாளர்களிடம் திரு டான் கூறினார்.

