சீர்திருத்தக் கட்சித் தலைவர் கென்னத் ஜெயரத்தினத்திற்கு மூன்றாவது முறையாக பொஃப்மா உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
அண்மையில் சிங்கப்பூரில் நடந்த மூன்று வெவ்வேறு நிகழ்வுகள் குறித்து திரு ஜெயரத்தினம் சமூக ஊடகங்களில் பதிவிட்டார்.
சட்டவிரோதப் பண விவகாரம் தொடர்பாக தீவு முழுவதும் நடத்தப்பட்ட சோதனையில் பத்து வெளிநாட்டவர்கள் கைது செய்யப்பட்டது, ஊழல் வழக்கு விசாரணையில் உள்ள அமைச்சர் எஸ். ஈஸ்வரன், ஆங் பெங் செங், ரிடவ்ட் ரோடு பங்களாக்களை இரு அமைச்சர்கள் வாடகைக்கு எடுத்த விவகாரம் ஆகியவை குறித்து அவர் பதிவிட்டிருந்தார்.
பொய்ச் செய்திக்கு எதிரான பொஃப்மா சட்டத்தின்கீழ், சட்ட இரண்டாம் அமைச்சர் எட்வின் டோங் உத்தரவு பிறப்பித்ததாக சட்ட அமைச்சு செவ்வாய்க்கிழமை தெரிவித்தது. திரு ஜெயரத்தினம் தமது பதிவுகளில் திருத்த அறிவிப்புகளைச் சேர்க்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டது.
சீனாவும் அதன் வெளியுறவு அமைச்சர் வாங் யீயும் சிங்கப்பூருக்கு நெருக்கடி கொடுத்ததால் தான் சட்டவிரோதப் பண விவகாரம் தொடர்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டதாக திரு ஜெயரத்தினம் குறிப்பிட்டார்.
வெளிநாட்டுத் தலையீடு இருப்பதால் தான் அமைச்சர் எஸ். ஈஸ்வரன், ஆங் பெங் செங்மீது விசாரணை நடத்தப்படுவதாகவும் அவர் கூறினார்.
நீண்ட நாள் புலன்விசாரணை, ரகசியத் தகவல்கள், சந்தேகத்திற்குரிய பணப்பரிமாற்றம் ஆகியவற்றை வைத்துத்தான் சந்தேகப் பேர்வழிகள் கைது செய்யப்பட்டதாக காவல்துறை ஆகஸ்ட் 16ஆம் தேதி அறிக்கை வெளியிட்டிருந்தது.
அமைச்சர் ஈஸ்வரன் குறித்து லஞ்ச ஊழல் ஒழிப்புப் பிரிவு விசாரணை நடத்தி வருகிறது.
தொடர்புடைய செய்திகள்
ரிடவ்ட் ரோடு பங்களாக்களை இரு அமைச்சர்கள் வாடகைக்கு எடுத்த விவகாரம் குறித்த அனைத்து விவரங்களும் உண்மைத்தன்மையைச் சரிபார்க்கும் ‘ஃபேக்சுவலி’ எனும் அரசாங்க இணையத்தளத்தில் இடம்பெற்றுள்ளது. இருப்பினும், திரு ஜெயரத்தினம் உண்மையில்லாத பதிவுகளை பதிவிட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.

