அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டால், சிங்கப்பூரைத் தனித்துவம் வாய்ந்ததாக வரையறுக்கும் நாட்டின் மூன்று அரிய சொத்துகளான சேமிப்பு, சிறந்த பொதுநிர்வாகம், சமூக நிலைத்தன்மை ஆகியவற்றைப் பாதுகாக்க திரு இங் கொக் சொங் இலக்குக் கொண்டுள்ளார்.
சிங்கப்பூர் நாணய ஆணையம், ஜிஐசி நிதியம் ஆகியவற்றில் தமது ஒட்டுமொத்த பணிக்காலத்தையும் செலவிட்டதால், சிங்கப்பூரின் சேமிப்பைப் பாதுகாப்பதில் தாம் சிறந்தவர் என்று 75 வயதான திரு இங் செவ்வாய்க்கிழமை கூறினார்.
மக்கள் கழகத் தலைமையகத்தில் அதிபர் தேர்தலில் போட்டியிடுவதற்கு வேட்புமனுவைத் தாக்கல் செய்த பின்னர், அவர் இரண்டு நிமிட உரை நிகழ்த்தினார்.
அதிபர் தேர்தலில் முன்னாள் மூத்த அமைச்சர் தர்மன் சண்முகரத்தினம், 66, என்டியுசி முன்னாள் தலைவர் டான் கின் லியான், 75 ஆகியோரை எதிர்த்து திரு இங் போட்டியிடுகிறார்.
சிங்கப்பூரின் இரண்டாவது தேசிய சொத்து, அதன் சிறந்த பொது நிர்வாகம் என்றார் அவர்.
“நான் 45 ஆண்டுகள் பொதுச் சேவையில் பணியாற்றியுள்ளேன். பொதுச் சேவை நியமனங்களின் நேர்மையை நிலைநிறுத்துவதற்குத் தேவையான தகுதி என்னிடம் உள்ளது,” என்று அவர் சொன்னார்.
வருங்கால மனைவி சிபில் லாவ் மற்றும் ஆதரவாளர்களுடன் வந்திருந்த திரு இங், மாண்டரின், மலாய், தமிழ் மொழிகளில் தமக்கு வாக்களிக்குமாறு கேட்டுக்கொண்டார்.
நாட்டின் மூன்றாவது சொத்து அதன் சமூக நிலைத்தன்மை. சிங்கப்பூரர்கள் இனம், சமயம், அரசியல் சார்புகளைப் பொருட்படுத்தாமல் அமைதியுடனும் நல்லிணக்கத்துடனும் வாழ்கின்றனர்.
தொடர்புடைய செய்திகள்
“நான் எந்த அரசியல் கட்சியையும் சேர்ந்தவன் அல்லன். எனவே, நிச்சயமற்ற எதிர்காலத்தை எதிர்கொள்ள சிங்கப்பூர் மக்களை ஒன்றிணைக்க நான் தகுந்தவன்,” என்றார் திரு இங்.
“இந்த மூன்று காரணங்களுக்காக, என்னை உங்கள் அதிபராகத் தேர்ந்தெடுக்கும்படி தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்,” என்று அவர் கூறினார்.
கடந்த வெள்ளிக்கிழமை திரு இங் அதிபர் பதவிக்கு போட்டியிடுவதற்கான தகுதிச் சான்றிதழைப் பெற்றார். ஜூலை 19ஆம் தேதி அதிபர் தேர்தலில் போட்டியிடும் விருப்பத்தை அவர் அறிவித்தார்.
நாட்டின் சேமிப்பைப் பாதுகாப்பதன் முக்கியத்துவத்தை அவர் முன்னர் வலியுறுத்தினார், அதில் அவருக்கு தனிப்பட்ட ஆர்வம் உள்ளது.
“நமது எதிர்காலத்திற்காக ஒன்றுபடுவோம்” என்பது அவரது பிரசார முழக்கம், அவர் தேர்ந்தெடுத்துள்ள சின்னம் உள்ளங்கை.
பிரசாரம் அதிகாரபூர்வமாக தொடங்கப்பட்டுவிட்டது. ஆகஸ்ட் 30ஆம் தேதி நிறைவுபெறும்.
சிங்கப்பூரில் செப்டம்பர் 1ஆம் தேதி அதிபர் தேர்தல் நடைபெறும். 2.7 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர்.

