தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

கரிமப் புள்ளித் திட்டம் தொடர்பில் சிங்கப்பூர்-இலங்கை பங்காளித்துவம்

2 mins read
6e3c7ce6-4aa3-48e6-accc-1c34333af36a
இலங்கை அதிபர் ரணில் விக்கிரமசிங்கே, சிங்கப்பூர் பிரதமர் லீ சியன் லூங் முன்னிலையில், சிங்கப்பூருக்கான இலங்கைத் தூதர் சஷிகலா பிரேமவர்தனேயும் சிங்கப்பூர் வர்த்தக, தொழில் அமைச்சின் (மேம்பாடு) நிரந்தரச் செயலாளர் டாக்டர் பே சுவான் கின்னும் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டு, பரிமாறிக்கொள்கின்றனர். - படம்: தொடர்பு, தகவல் அமைச்சு

பிரதமர் லீ சியன் லூங் செவ்வாய்க்கிழமையன்று இஸ்தானாவில் இலங்கை அதிபர் ரணில் விக்கிரமசிங்கேயைச் சந்தித்தார்.

இருவர் முன்னிலையிலும் பாரிஸ் ஒப்பந்தத்தின்படி, கரிமப் புள்ளித் திட்டம் தொடர்பில் இரு நாடுகளும் இணைந்து செயல்படுவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்று கையெழுத்தானது.

இந்த பங்காளித்துவத்தின் வழி சிங்கப்பூரும் இலங்கையும் கரிமப் புள்ளிகள் தொடர்பான தங்களின் தலைசிறந்த நடைமுறைகளைப் பரிமாறிக்கொள்ள முடியும் என்று வர்த்தக, தொழில் அமைச்சு அறிக்கை விடுத்தது.

தேசிய கட்டுப்பாட்டுச் சட்டமைப்புகளுடன் பசுமை இல்ல வாயுத் தணிப்புக்கான நடவடிக்கைகளையும் வளங்களையும் நிர்வகித்தல், உருவாக்குதல் தொடர்பான கொள்கைகளும் இந்த நடைமுறைகளில் அடங்கும்.

ஒப்பந்தப்படி இரண்டு நாடுகளும் சட்டரீதியாக, இருதரப்பு கட்டமைப்பு ஒன்றை உருவாக்கி அதன்வழியாக பாரிஸ் ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டதுபோல் கரியமில கழிப்புப் புள்ளிகளை அனைத்துலக அளவில் பரிமாற்றம் செய்துகொள்ள முடியும்.

ஒப்பந்தத்தில் பாரிஸ் ஒப்பந்தத்துக்கு ஏற்ப கரியமில கழிப்புப் புள்ளிகளுக்கான நிபந்தனைகளும் செயல்முறைகளும் குறிப்பிடப்பட்டிருக்கும் என்று அமைச்சு தெரிவித்தது.

இது நிறைவடைந்ததும் கரிம வரி செலுத்தக்கூடிய சிங்கப்பூர் நிறுவனங்கள், வரி விதிக்கத்தக்க அவற்றின் வெளியேற்றத்தில் ஐந்து விழுக்காடு வரை ஈடுசெய்ய முடியும். தகுதிபெறும் திட்டங்களிலிருந்து நிறுவனங்கள் கரிமப் புள்ளிகளை வாங்குவதன் மூலம் இது சாத்தியமாகும்.

இருதரப்புக்கும் பலனளிக்கக்கூடிய திட்டங்களை சிங்கப்பூரும் இலங்கையும் அடையாளம் காண்பதுடன் மூன்றாம் உலகநாடுகளின் கரிமச் சந்தைகளுடன் ஒத்துழைப்பதில் உள்ள வாய்ப்புகளையும் அவை ஆராயும்.

புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் சிங்கப்பூருக்கான இலங்கைத் தூதர் சஷிகலா பிரேமவர்தனேயும் சிங்கப்பூர் வர்த்தக, தொழில் அமைச்சின் (மேம்பாடு) நிரந்தரச் செயலாளர் டாக்டர் பே சுவான் கின்னும் கையெழுத்திட்டனர்.

பருவநிலைச் செயல்பாடுகளை முன்னெடுப்பதற்கு சிங்கப்பூர்-இலங்கை கரிமப் புள்ளித் திட்ட ஒத்துழைப்பு உதவும் என்று டாக்டர் பே குறிப்பிட்டார். அத்துடன், சுற்றுச்சூழல் சார்ந்த ஒரு பொருளியலில் புதிய வேலைகள் உருவாக்குவதிலும் பல்லுயிர்ப் பாதுகாப்பை மேம்படுத்துவதிலும் இருதரப்பும் பலன் காணலாம் என்றார் அவர்.

திரு விக்கிரமசிங்கே சிங்கப்பூருக்கு இரண்டு நாள் அதிகாரத்துவப் பயணம் மேற்கொண்டுள்ளார்.

குறிப்புச் சொற்கள்