வரும் ஆகஸ்ட் 28ஆம் தேதி முதல் மூன்று இடங்களில், நான்கு குறிப்பிட்ட நேரங்களில் மின்னியல் சாலைக் கட்டணம் (இஆர்பி) S$1 வரை உயரும் என நிலப் போக்குவரத்து ஆணையம் அறிவித்துள்ளது.
கடந்த ஜூலை மாதம் போக்குவரத்து நிலைமைகளை ஆணையம் மதிப்பாய்வு செய்தது. குறிப்பிட்ட நேரத்தில் விரைவுச்சாலைகளில் போக்குவரத்து நெரிசல் அதிகமாக இருப்பதை அப்போது அது கண்டது. அதனைத் தொடர்ந்து, இந்தத் திருத்தப்பட்ட மின்னியல் சாலைக் கட்டணத்தை அது செவ்வாய்க்கிழமை வெளியிட்டது.
ஆடம் ரோடுக்கும் மவுன்ட் பிளசென்ட் ரோடுக்கும் இடையேயுள்ள மத்திய விரைவுச்சாலையில் இருக்கும் இரண்டு நுழைவுவாயில்கள் வழியாகக் காலை 9 மணி முதல் 9.30 மணி வரை பயன்படுத்தும் வாகன ஓட்டிகளிடம் மின்னியல் சாலைக் கட்டணமாக $1 வசூலிக்கப்படும்.
டெஃபு மேம்பாலத்தை அடுத்துள்ள காலாங்-பாய லேபார் விரைவுச்சாலையைக் காலை 8.30 மணி முதல் 9 மணி வரை பயன்படுத்தும் வாகன ஓட்டிகளிடம் $1 மின்னியல் சாலைக் கட்டணமாக வசூலிக்கப்படும்.
யூனோசுக்கு முன்பாக, மேற்கு நோக்கிய மத்திய விரைவுச்சாலையை காலை 8.30 மணி முதல் 9 மணி வரை பயன்படுத்தும் வாகன ஓட்டிகளிடம் $2ஆம் காலை 9 மணி முதல் 9.30 மணி வரை பயன்படுத்தும் வாகன ஓட்டிகளிடம் $1ம் மின்னியல் சாலைக் கட்டணமாக வசூலிக்கப்படும்.
இந்த இடங்களைத் தவிர்த்து, மற்ற இடங்களில் தற்போது நடப்பிலுள்ள கட்டண முறையே தொடரும் என ஆணையம் தெரிவித்தது.

