கடந்த ஆண்டின் முதல் ஆறு மாதங்களுடன் ஒப்பிடுகையில், இவ்வாண்டின் முற்பாதியில் கூடுதலான தனிநபர் நடமாட்டச் சாதனங்களும் மின்சைக்கிள்களும் தீப்பிடித்துக்கொண்டன.
சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அரையாண்டு அறிக்கையில், 18 தனிநபர் நடமாட்டச் சாதனங்கள், ஒன்பது மின்சைக்கிள்கள் சம்பந்தப்பட்ட 27 தீச்சம்பவங்கள் ஏற்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.
ஒப்புநோக்க, கடந்த ஆண்டின் முற்பாதியில் அத்தகைய சாதனங்கள் சம்பந்தப்பட்ட 22 தீச்சம்பவங்கள் ஏற்பட்டன.
கடந்த மே மாதம் செங்காங்கில் உள்ள ஒரு வீட்டில் தீ மூண்டதை அடுத்து, மூவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். அந்த வீட்டின் வரவேற்பறையில் தனிநபர் நடமாட்டச் சாதனம் ஒன்று மின்னூட்டம் செய்யப்பட்டு இருந்தது.
இவ்வாண்டின் முற்பாதியில் 967 தீச்சம்பவங்களைக் குடிமைத் தற்காப்புப் படை கையாண்டது. கடந்த ஆண்டின் இதே காலகட்டத்தில் இந்த எண்ணிக்கை 918ஆக இருந்தது.
இவ்வாண்டின் முதல் ஆறு மாதங்களில் ஏற்பட்ட தீச்சம்பவங்களில் பாதிக்கும் அதிகமானவை, அதாவது 493 தீச்சம்பவங்கள் இல்லங்களில் ஏற்பட்டன. தனியார், பொது வீடமைப்புக் குடியிருப்புகள் அவற்றில் அடங்கும்.
இல்லங்களில் தீ விபத்துகள் ஏற்படுவதற்கு சமையல் நடவடிக்கைகளே முன்னணி காரணமாக விளங்கின என்று குடிமைத் தற்காப்புப் படை தெரிவித்தது. இவ்வாண்டின் முற்பாதியில் அத்தகைய 205 தீச்சம்பவங்கள் ஏற்பட்டன.
இவ்வாண்டின் முதல் ஆறு மாதங்களில் வீசப்பட்ட பொருள்கள், தாவரங்கள், வாகனங்கள் சம்பந்தப்பட்ட தீச்சம்பவங்களின் எண்ணிக்கை 40.5 விழுக்காடு கூடியது. இவ்வாண்டு அத்தகைய 281 தீச்சம்பவங்கள் ஏற்பட்டன. ஒப்புநோக்க, கடந்த ஆண்டின் முற்பாதியில் 200 தீச்சம்பவங்கள் ஏற்பட்டன.
தொடர்புடைய செய்திகள்
இதற்கிடையே, கடந்த ஆண்டின் முற்பாதியுடன் ஒப்புநோக்க, இவ்வாண்டின் அதே காலகட்டத்தில் சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படைக்கு குறைவான அவசர மருத்துவச் சேவை அழைப்புகள் வந்தன.
அத்தகைய அழைப்புகளின் எண்ணிக்கை 128,486லிருந்து 122,269ஆகக் குறைந்தது. இது 4.8 விழுக்காடு சரிவாகும்.
அனைத்து அவசர அழைப்புகளையும் மதிப்பிடும் 995 செயல்பாட்டு நிலையம், உண்மையான அவசர நிலையில் மட்டுமே ஆம்புலன்சுகளை அனுப்பும்.
சிங்கப்பூர் மக்கள்தொகை மூப்படைந்துவரும் வேளையில் கூடுதலான அவசர மருத்துவச் சேவை அழைப்புகள் வரும் என்பதைக் குடிமைத் தற்காப்புப் படை எதிர்பார்க்கிறது.
கடந்த ஆண்டு தினமும் அதற்கு சுமார் 700 அழைப்புகள் வந்தன. கொவிட்-19 பெருந்தொற்றுக்கு முன்பிருந்த நிலவரத்துடன் ஒப்புநோக்க இது 25 விழுக்காடு அதிகம்.
தீச்சம்பவங்களால் உயிரிழந்தோர் எண்ணிக்கை இல்லை என குடிமைத் தற்காப்புப் படையின் பேச்சாளர் ஒருவர் கூறினார். தீச்சம்பவங்களால் ஏற்படும் உயிருடற்சேதம், காயம் குறித்த தகவல் பொதுவாக குடிமைத் தற்காப்புப் படையின் ஆண்டு புள்ளிவிவர அறிக்கையில் வெளியிடப்படும்.