வெளிநாடுகளில் 185,000 பேருக்கும் மேற்பட்ட சிஙகப்பூரர்கள் வசிக்கிறார்கள். அவர்களில் 6,649 பேர், வருகின்ற அதிபர் தேர்தலில் வாக்களிக்க பதிவு பெற்றுள்ள வெளிநாட்டு வாக்காளர்கள் ஆவர். அந்த வாக்காளர்களில் 3,432 பேர் அஞ்சல் மூலம் வாக்களிக்க முயற்சி செய்து பார்க்கலாம் என்று முடிவு செய்து இருக்கிறார்கள்.
சிங்கப்பூரில் முதன்முதலாக அஞ்சல் வாக்குகள் வரும் தேர்தலில் பயன்படுத்தப்பட இருக்கின்றன.
இதர 3,217 பேர், வெளிநாடுகளில் அமைந்து இருக்கக்கூடிய 10 வாக்குச் சாவடிகளில் ஏதேனும் ஒன்றில் வாக்கு அளிப்பார்கள். சிங்கப்பூரில் நடக்க இருக்கும் அதிபர் தேர்தலில் வாக்களிக்க பதிவு பெற்ற வாக்காளர்கள் 2,709,407 பேர். இவர்களில் வெளிநாட்டு வாக்குகள் விகிதம் சுமார் 0.25% ஆகும்.
இதனிடையே, அஞ்சல் வாக்காளர்களுக்குப் பல தகவல்கள் ஏற்கெனவே தெரிவிக்கப்பட்டு இருப்பதாக தேர்தல் துறை புதன்கிழமை குறிப்பிட்டது. அவர்கள் தங்கள் சிங்பாஸைப் பயன்படுத்தி தேர்தல்துறையின் இணையத்தளத்தின் உள்ளே வாக்காளர் சேவைப் பிரிவுக்குச் சென்று அஞ்சல் வாக்குச்சீட்டையும் அதை வைத்து அனுப்பும் உறையையும் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் என்று தேர்தல் துறை அவர்களிடத்தில் தெரிவித்து இருக்கிறது.
வாக்குச்சீட்டுடன் கூடிய உறையை கூடுமானவரை முன்னதாகவே அஞ்சலில் அனுப்பும்படி அஞ்சல் வாக்காளர்கள் கேட்டுக்கொள்ளப்பட்டு இருக்கிறார்கள். வாக்கு போடப்பட்ட அஞ்சல் வாக்குச்சீட்டைக் கொண்ட உறை செப்டம்பர் 1ஆம் தேதிக்கு முன்னதாகவே அஞ்சலில் சேர்க்கப்பட்டு இருக்க வேண்டும். இதற்கான முத்திரை அதில் இருக்க வேண்டும்.
அது வாக்கு எண்ணிக்கையில் ஏற்றுக்கொள்ளப்பட தோதாக செப்டம்பர் 11ஆம் தேதிக்கு முன்னதாக சிங்கப்பூரில் தேர்தல் அதிகாரி வசம் சேர்ந்துவிட வேண்டும். வெளிநாடுகளில் செயல்படும் வாக்குச் சாவடிகளில் வாக்கு அளிக்க பதிவு செய்துகொண்டு இருப்போருக்கு அவர்களுக்கான சாவடியில் வாக்கு அளிக்கும் தேதி, மணி உள்ளிட்ட விவரங்களுடன் கடிதம் அனுப்பப்பட்டு இருக்கிறது.
அந்தக் கடிதத்தின் நகலை சிங்பாஸ் மூலம் தேர்தல் துறையின் இணையத்தளத்தில் பெறலாம்.
பெய்ஜிங், கேன்பெர்ரா, துபாய், ஹாங்காங், லண்டன், நியூயார்க், சான் பிரான்சிஸ்கோ, ஷங்காய், தோக்கியோ, வாஷிங்டன் டிசி ஆகிய நகர்களில் 10 வெளிநாட்டு வாக்குச்சாவடிகள் அமைந்திருக்கும்.
தொடர்புடைய செய்திகள்
வாக்களிப்பு நாளன்று சிங்கப்பூருக்குத் திரும்பி வரும் வெளிநாட்டு வாக்காளர்கள் இங்கு அவர்களுக்கான வாக்குச் சாவடியில் வாக்களிக்கலாம்.
இதன் விவரங்கள், சிங்கப்பூர் அடையாள அட்டையில் இருக்கும் அவர்களின் முகவரிக்கு அனுப்பப்படும் வாக்கு அட்டையில் இருக்கும்.
சிங்கப்பூரில் 2011 ஆம் ஆண்டில் நடந்த அதிபர் தேர்தலின்போது வாக்களிக்க பதிவு பெற்றிருந்த வெளிநாட்டு வாக்காளர்கள் எண்ணிக்கை 5,504 ஆக இருந்தது. அவர்களில் 3,375 பேர் ஒன்பது நகர்களில் செயல்பட்ட வாக்குச்சாவடிகளில் வாக்கு அளித்தனர்.

