சிங்கப்பூரில் இந்த ஆண்டு நடக்கவிருக்கும் அதிபர் தேர்தலையொட்டி முதன்முறையாக 31 தாதிமை இல்லங்களில் சிறப்பு வாக்குச்சாவடிகள் அமைக்கப்படும்.
முதியோர் வாக்களிக்க ஏதுவாக இடம்பெறக்கூடிய ஒரு முன்னோடி திட்டத்தையொட்டி அந்தச் சாவடிகள் அமையும்.
தாதிமை இல்லங்களில் உள்ள முதியோர் எளிதாக வாக்களிக்கத் தோதாக கடந்த மார்ச் மாதம் புதிய தேர்தல் சட்டங்கள் நிறைவேற்றப்பட்டன.
அதையடுத்து இந்த ஏற்பாடுகள் இடம்பெறுகின்றன. இந்த முன்னோடித் திட்டத்திற்காக தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ள 31 தாதிமை இல்லங்கள் ஒவ்வொன்றிலும் 50க்கும் மேற்பட்ட வாக்காளர்கள் இருக்கிறார்கள்.
தாதிமை இல்லங்களில் நடமாட முடியாமல் இருப்பவர்கள் அல்லது படுத்த படுக்கையாக இருப்பவர்கள் வாக்களிக்க ஏதுவாக வாக்குப் பெட்டியும் வாக்குச்சீட்டும் அவர்கள் இருக்கும் இடத்திற்கே கொண்டு செல்லப்படும். இதை நடமாடும் தேர்தல் குழு செய்யும்.
வாக்களிக்க இயலாத முதியோர், அத்தக் குழுவைச் சேர்ந்த தேர்தல் அதிகாரியின் உதவியுடன் வாக்களிக்கலாம்.
அதற்கு இரண்டாவது அதிகாரி ஒருவர் சாட்சியமாக இருப்பார் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
தங்களை அடையாளம் கூற முடியாத அளவுக்கு நினைவிழந்த நிலையில் இருப்பவர்கள், அதிகாரிகளின் கேள்விகளுக்கு விளக்கம் அளிக்க முடியாமல் இருப்பவர்கள் ஆகியோருக்கு வாக்குச்சீட்டு கொடுக்கப்படமாட்டாது.

