சிங்கப்பூர் முழுவதும் உள்ள அரசாங்கக் கட்டடங்கள், தூதரகங்கள், இதர முக்கிய இடங்கள் உள்ளிட்ட 18 இடங்களுக்கு புதன்கிழமை காலையில் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டு இருப்பதாக காவல்துறைக்குத் தகவல் கிடைத்தது.
காலை சுமார் 9.10 மணிக்குத் தகவல் கிடைத்ததும் அந்தக் கட்டடங்களில் சோதனை நடத்தியதாகவும் பாதுகாப்புக்குக் குந்தகம் விளைவிக்கக்கூடிய எந்த ஒரு பொருளும் காணப்படவில்லை என்றும் காவல்துறை தெரிவித்தது.
அந்த மிரட்டல் குறித்து காவல்துறை புலன்விசாரணை நடத்தி வருகிறது. தண்டனை விதித்தொகுப்பு 1871ன் 268ஏ பிரிவின் கீழ் ஆபத்தான பொய்த் தகவலைப் பரப்பிய விவகாரம் என்று கருதி இதை விசாரித்து வருவதாக காவல்துறை தெரிவித்தது.
அந்தக் குற்றத்திற்கு ஏழாண்டு வரை சிறைத்தண்டனை, கூடினபட்சமாக $50,000 வரை அபராதம் அல்லது இரண்டும் விதிக்க முடியும்.
இதேபோன்ற மின்னஞ்சல் குண்டு மிரட்டல்கள் அண்மையில் தென் கொரியாவிலும் விடுக்கப்பட்டன. கடைசியில் அது பொய் செய்தி என்பது தெரியவந்தது. அந்த மிரட்டல் செய்தியை ஒரே நபர் அனுப்பி இருப்பதாகத் தெரிகிறது.
பாதுகாப்பு தொடர்பான அனைத்து மிரட்டல்களையும் காவல்துறை கடுமையான ஒன்றாகக் கருதுகிறது.
குண்டு மிரட்டல் பற்றிய பொய்த் தகவல்களை வேண்டுமென்றே பரப்புவோருக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்க காவல்துறை தயங்காது என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
நீடித்த நிலைத்தன்மை, சுற்றுப்புற அமைச்சு செயல்படும் ஸ்காட்ஸ் ரோட்டில் உள்ள சுற்றுப்புற கட்டடம், அதனுடைய ஆணை பெற்ற அமைப்புகளான தேசிய சுற்றுப்புற வாரியம், பொதுப் பயனீட்டுக் கழகம் ஆகியவை பாதுகாப்புச் சூழ்நிலை காரணமாக முடக்கிவைக்கப்பட்டன.
தொடர்புடைய செய்திகள்
அதன் தொடர்பில் தேசிய ஒளிபரப்பு நிறுவனமான சிஎன்ஏ கேட்ட கேள்விகளுக்குக் காவல்துறை விளக்கம் அளித்தது. அந்த விளக்கத்தில் இந்த விவரங்கள் தெரிவிக்கப்பட்டதாக அந்த ஒளிபரப்பு நிறுவனம் தெரிவித்தது.

