வேலை இழந்தோருக்கான ஆதரவுத் திட்டத்தின் மூலம் பயிற்சி, வேலைவாய்ப்பு ஆலோசனை ஆகியவற்றைப் பெறலாம்: டான் சீ லெங்

வேலை இழந்தோருக்கான ஆதரவுத் திட்டத்தின் மூலம் பயிற்சி, வேலைவாய்ப்பு ஆலோசனை ஆகியவற்றைப் பெறலாம்: டான் சீ லெங்

படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

24 Aug 2023 - 3:36 pm

1 mins read

வேலை இழப்பால் பாதிக்கப்பட்ட ஊழியர்களுக்கான புதிய தற்காலிக நிதியாதரவுத் திட்டத்தின்கீழ் பெரும்பாலும் பயிற்சி, வேலைவாய்ப்பு ஆலோசனை, வழிகாட்டுதல் ஆகியவை வழங்கப்படும் என்று மனிதவள அமைச்சர் டான் சீ லெங் கூறியுள்ளார்.

புதன்கிழமை ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சுக்கு அளித்த நேர்காணலில் அவர் இதைத் தெரிவித்தார்.

புதிய ஆதரவுத் திட்டம் குறித்த மேல்விவரங்கள், இந்த ஆண்டு இறுதியில் ஃபார்வர்ட் சிங்கப்பூர் பொதுக் கருத்துத் திரட்டு நிறைவடைந்தபின் வெளியிடப்படும் என்றார் அவர்.

கொவிட்-19 நெருக்கடி, புவிசார் அரசியல் பதற்றங்கள், புதிய தலைமைத்துவம் போன்ற அம்சங்களால் வேலை இழந்த ஊழியர்களுக்கு மறுவேலைவாய்ப்பு ஆதரவு வழங்கும் திட்டத்தை அரசாங்கம் அறிமுகப்படுத்துவதாக அமைச்சர் குறிப்பிட்டார்.

பல ஆண்டுகளாகவே பல்வேறு குழுக்கள் ஏதாவது ஒரு வகையான வேலையின்மைக் காப்பீடு வழங்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தி வந்துள்ளன. இருப்பினும் பெருந்தன்மையோடு வழங்கப்படும் அத்தகைய தொகையால், புதிய வேலை தேடாமல் வேலையில்லாமலே தொடரக்கூடிய மனப்போக்கு ஏற்படக்கூடும் என்ற சிக்கலை அமைச்சர்கள் சுட்டிக்காட்டி வந்துள்ளனர்.

தற்போது அறிவிக்கப்பட்டுள்ள புதிய திட்டத்தை வேலையின்மைக் காப்பீடு என்று கருதக்கூடாது. இது, வேலை இழந்தோர் புதிய வேலையைத் தேடுவதற்கும் அதற்கான திறன்களை அடையாளம் காண்பதற்கும் உரிய நேரத்தையும் சுதந்திரத்தையும் வழங்கும் திட்டம் எனக் கருதவேண்டும் என்று அமைச்சர் டான் வலியுறுத்தினார்.

குறிப்புச் சொற்கள்
ஆதரவுஆலோசனைஊழியர்கள்