ஆர்ச்சர்ட் ரோட்டில் அக்டோபர் 28ஆம் தேதி, பனிச்சறுக்கு, அலைச்சறுக்கு உள்ளிட்ட விளையாட்டுகளுக்கான டிரிஃபெக்டா எனும் புதிய விளையாட்டு அரங்கு திறக்கப்படவிருக்கிறது.
கொவிட்-19 கிருமிப் பரவலுக்குப் பிறகு சுற்றுப்பயணத் துறையின் மீட்சிக்கு உதவும் நோக்கில் 2022 ஏப்ரலில் அறிவிக்கப்பட்ட $500 மில்லியன் நிதி ஒதுக்கீட்டின் ஒரு பகுதி டிரிஃபெக்டாவிற்குப் பயன்படுத்தப்பட்டுள்ளது.
‘சாமர்செட் ஸ்கேட் பார்க்’ற்கு அருகில் அது அமைந்திருக்கும். ஆசியாவில் இத்தகைய முதல் அரங்காக அது விளங்கும்.
அலைச்சறுக்கு, பலகைச்சறுக்கு என இருவகை விளையாட்டுகளுக்குமான உலகின் முதல் அரங்கமாகவும் விளங்கவிருக்கும் டிரிஃபெக்டா, அலைச்சறுக்கு உள்ளிட்ட நீர் விளையாட்டுகளைப் புதிதாக விளையாடத் தொடங்குவோருக்கும் ஏற்கெனவே தேர்ச்சி பெற்றோருக்கும் சேவை வழங்கும்.
கோடைக்கால விளையாட்டுகள், குளிர்கால விளையாட்டுகள் என இருவகை விளையாட்டுகளுக்கும் ஆர்வலர்கள் நாடக்கூடிய ஒரே இடமாகவும் அது விளங்கும்.
அன்றாடம் காலை ஏழு மணி முதல் நள்ளிரவு வரை அது சேவை வழங்கும் எனத் தெரிவிக்கப்பட்டது.
சிங்கப்பூரின் ‘த ரைட் சைட்’ நிறுவனம், 4,609 சதுர மீட்டர் பரப்பளவில் டிரிஃபெக்டா அரங்கை வடிவமைத்துக் கட்டுகிறது. ஏறத்தாழ நான்கு ஒலிம்பிக் நீச்சல் குளங்களின் அளவிற்கு அது சமம்.
பலகைச்சறுக்கு, அலைச்சறுக்கு போன்ற விளையாட்டுகளில் ஆர்வமுள்ளோர், www.trifectasingapore.com என்ற இணையத்தளத்தின்மூலம் வகுப்புகளுக்குப் பதிந்து கொள்ளலாம்.
தொடர்புடைய செய்திகள்
ஒரு மணி நேர பலகைச்சறுக்கு வகுப்புக்கு $54, பனிச்சறுக்கு வகுப்புக்கு $90, அலைச்சறுக்கு வகுப்புக்கு $108 கட்டணம் செலுத்த வேண்டும்.
செப்டம்பர் 4ஆம் தேதி வரை 10 விழுக்காட்டுச் சலுகையில் பதிந்து கொள்ள இயலும். செப்டம்பர் 5ஆம் தேதி முதல் பொது விற்பனை தொடங்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. வருகையாளர்கள் உச்ச நேரம் அல்லாத நேரத்திற்கு அப்போது முதல் நுழைவுச்சீட்டுகளை வாங்கிக்கொள்ளலாம்.
மெய்நிகர் தொழில்நுட்பத்தின் உதவியோடு, பனிச்சறுக்கிற்கான வேகம், திசை ஆகியவற்றை மாற்றியமைக்கும் வசதிகள் டிரிஃபெக்டா அரங்கில் இடம்பெற்றிருக்கும்.
விளையாட்டாளர்கள், பாதுகாப்பான சூழலில் இத்தகைய விளையாட்டுகளில் திறன்களை மேம்படுத்திக்கொள்ள இது உதவும்.
அலைச்சறுக்கிற்கான பகுதி ஆசியாவில் ஆகப் பெரியதும் ஆக ஆழமானதுமாக விளங்கும். 10 மீட்டர் அகலம் உள்ள அதில் 1.5 மீட்டர் உயரமான அலைகள் உருவாகும் எனக் கூறப்பட்டது.
டிரிஃபெக்டா அரங்கின் பனிச்சறுக்கு, அலைச்சறுக்கு, பலகைச்சறுக்குப் பகுதிகளுக்கு ஆறு வயது அல்லது அதற்கு மேற்பட்ட வயது நிரம்பியவர்களுக்கு மட்டுமே அனுமதி உண்டு. அரங்கின் இதர பகுதிகளுக்கு வயதுரீதியான கட்டுப்பாடு ஏதுமில்லை.
வகுப்பு தொடங்குமுன், முதலுதவிப் பயிற்சி பெற்ற பயிற்றுவிப்பாளர்கள் நடத்தும் பாதுகாப்பு அங்கத்தில் அனைத்துப் பங்கேற்பாளர்களும் கலந்துகொள்வது கட்டாயம்.
டிரிஃபெக்டா அரங்கிற்குள் ‘பட்டர்’ எனும் உணவகம் அமைந்திருக்கும். அதில் 70 பேர் அமர்ந்து உண்ணக்கூடிய வசதிகள் இடம்பெற்றிருக்கும். காலை, பிற்பகல், இரவு வேளைகளுக்கான தானிய உணவு வகைகள், காப்பி, இனிப்பு வகைகள் போன்றவை அங்கு விற்கப்படும்.

