தர்மன் கொடுத்த அன்னாசிப் பழத்தால் ஆச்சரியமடைந்த பானக் கடை ஊழியர்

தர்மன் கொடுத்த அன்னாசிப் பழத்தால் ஆச்சரியமடைந்த பானக் கடை ஊழியர்

படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

24 Aug 2023 - 5:32 pm

2 mins read

மதிய உணவு நேரத்தில் ஏகப்பட்டோருக்கு பானம் தயாரித்துக் கொடுக்க ஆயத்தமாகிக் கொண்டிருந்த பானக்கடை ஊழியர் இங் பூன் பிங், சிங்கப்பூரின் அதிபராகப் பதவி ஏற்கக்கூடிய ஒருவர் தனக்கு அன்னாசிப் பழம் தருவார் என்று சிறிதும் எதிர்பார்க்கவில்லை.

அதிபர் தேர்தல் வேட்பாளரான தர்மன் சண்முகரத்னம், வியாழக்கிழமை லாவ் பா சாட் உணவங்காடி நிலையத்திற்குச் சென்று, மதிய உணவருந்த வந்தவர்களைச் சந்தித்துப் பேசினார்.

அந்த வருகையின்போது, தனது தேர்தல் இயக்கச் சின்னமான அன்னாசிப் பழத்தை திரு இங்குக்கு கொடுத்தார்.

லாவ் பா சாட்டில் 20 ஆண்டுகளாக வேலை செய்துவரும் 68 வயது திரு இங், “அவரிடமிருந்து அன்னாசிப் பழம் கிடைத்தது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. எல்லோரும் சாப்பிட அதை வெட்டிக் கொடுக்கப் போகிறேன்,” என்று கூறினார்.

சக வேட்பாளரான இங் கொக் சொங், “பிரதமருடன் அதிபருக்கு நெருக்கமான உறவு இருந்தால், அவரை சார்ந்திராமல் ஒருவர் தனது பொறுப்புகளை நிறைவேற்றுவது மிகவும் சிரமமாக இருக்கும்,” என்று வியாழக்கிழமை காலை கருத்துரைத்தது பற்றி செய்தியாளர்கள் திரு தர்மனிடம் கேட்டனர்.

அது முற்றிலும் ஒருவரின் குணநலனையும், அவர்கள் எப்படிப்பட்டவர்கள், என்னென்ன செய்திருக்கிறார்கள் என்பதையும் பொறுத்தது என்று முன்னாள் மூத்த அமைச்சரான திரு தர்மன் பதிலளித்தார்.

தேர்தல் இயக்கத்திற்காக மேற்கொண்டுவரும் தொகுதி வருகை பயன்மிக்கதாக இருப்பதாகவும் திரு தர்மன் கருத்துரைத்தார்.

“அதிபர் தேர்தலில், மக்களின் வீட்டுக்கு வருகையளிக்க முடியாது. அதனால், உணவங்காடி நிலையம், சந்தை போன்ற இடங்களில் அவர்களைச் சந்திப்பதும், பல்வேறு பிரிவுகளுடன் உரையாடல் நடத்துவதும் மிகவும் பயன்மிக்கதாக இருந்தது,” என்றார் அவர்.

தேர்தலைப் புறக்கணிப்பது அல்லது வாக்குகளை செல்லாதவையாக்குவது பற்றி இணையத்தளங்களில் பேசப்படுவது குறித்து திரு தர்மனிடம் கேட்டபோது, சிங்கப்பூரின் எதிர்காலத்திற்கு இது மிகவும் முக்கியமான தேர்தல் என்று அவர் பதிலளித்தார்.

“இதை நாம் அரசியல் கண்ணோட்டத்தில் பார்க்கக்கூடாது. நாம் ஒரு தனிமனிதரைத் தேர்ந்தெடுக்கிறோம், அவர் எதைப் பிரதிநிதிக்கிறார், தனது வாழ்நாளெல்லாம் எதைப் பிரதிநிதித்திருக்கிறார், எதிர்காலத்திற்காக எதைக் கொண்டு வரப்போகிறார் என்பதை நாம் கவனிக்கவேண்டும்,” என்றார் திரு தர்மன்.

உணவங்காடி நிலைய வாடிக்கையாளர்களிடம் 66 வயது திரு தர்மன் புகைப்படங்களும் எடுத்துக்கொண்டார்.

அதைக் கண்ட உணவங்காடிக்கடை ஊழியர்கள் பலரும், அவருடன் படமெடுக்க வரிசையில் சேர்ந்துகொண்டனர்.

குறிப்புச் சொற்கள்