முதியவர் ஒருவரிடமிருந்து $160,000க்குமேல் திருடிய பணிப்பெண் ஒருவருக்கு வியாழக்கிழமை ஈராண்டு, நான்கு மாதச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.
$48,400 சம்பந்தப்பட்ட தொகையைத் திருடிய குற்றச்சாட்டை சித்தி நூர்யாந்தி, 41, முன்னதாக ஒப்புக்கொண்டார்.
அந்த 94 வயது முதியவரின் மகன், இந்தோனீசியப் பணிப்பெண்ணை வேலைக்கு எடுத்திருந்தார். அந்த முதியவரின் மூன்று பேரப்பிள்ளைகளைக் கவனிப்பதும் வீட்டு வேலைகளைச் செய்வதும் அந்தப் பணிப்பெண்ணின் பொறுப்புகளில் அடங்கும்.
2022ல் அந்த முதியவருடன் தானியக்க வங்கி இயந்திரத்துக்கு (ஏடிஎம்) சென்ற சித்தி, அவரது வங்கி அட்டையுடன் தொடர்புடைய தனிநபர் அடையாள எண்ணைக் குறித்துக்கொண்டார். அந்த முதியவர் அந்த அட்டையை தமது அறையில் வைத்திருந்ததையும் சித்தி அறிந்திருந்தார்.
பலமுறை அந்த அட்டையை எடுத்துக்கொண்டு பல்வேறு ஏடிஎம் இயந்திரங்களுக்குச் சென்ற சித்தி, அந்த முதியவருக்குத் தெரியாமல் அவரது வங்கிக் கணக்கிலிருந்து $48,400ஐ எடுத்தார்.
இவ்வாண்டு ஜனவரி முதல் ஏப்ரல் வரை சித்தி, 50 முறை பணம் எடுத்ததாக நீதிமன்ற ஆவணங்களில் குறிப்பிடப்பட்டது. ஒவ்வொரு முறையும் அவர் $50க்கும் $2,000க்கும் இடைப்பட்ட தொகையை எடுத்தார்.
அந்தப் பணத்தின் ஒரு பகுதியைக் கொண்டு சித்தி தமது கடனைச் செலுத்தினார்.
தம் தந்தையின் வங்கிக் கணக்கிலிருந்து பெரிய அளவிலான தொகை எடுக்கப்பட்டதை அந்த முதியவரின் மகன் உணர்ந்ததை அடுத்து சித்தியின் குற்றங்கள் வெளிச்சத்துக்கு வந்தன.
தொடர்புடைய செய்திகள்
ஏப்ரல் 18ஆம் தேதி அந்த முதியவரின் மகன் காவல்துறையிடம் புகார் அளித்ததைத் தொடர்ந்து சித்தி நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டார்.

