பள்ளிப் பேருந்துக் கட்டணங்கள் 2024ல் மீண்டும் உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஏற்கெனவே நடப்பிலிருக்கும் ஒப்பந்தங்களின்கீழ் விதிக்கப்படும் பள்ளிப் பேருந்து கட்டணங்களை 13 விழுக்காடு வரை உயர்த்த நிறுவனங்களுக்கு அனுமதி அளித்திருப்பதாகக் கல்வி அமைச்சு வியாழக்கிழமை அறிவித்தது.
அதிகரித்துவரும் நடைமுறைச் செலவுகளுக்கு இடையில் பள்ளிப் பேருந்து சேவைகளைத் தொடர்ந்து நடத்துவதற்கு இது உதவியாக இருக்கும் என்று அமைச்சு குறிப்பிட்டது.
நடப்பிலிருக்கும் ஒப்பந்தங்களின் கட்டண வரம்பு ஆகக் கடைசியாக 2023 ஜனவரியில் ஏழு விழுக்காடு வரை உயர்த்தப்பட்டிருந்தாலும், செலவின அதிகரிப்பின் காரணமாக புதிய உயர்வு அவசியம் என்றும் அமைச்சு குறிப்பிட்டது.
“ஏற்கெனவே சேவை வழங்கிவரும் நிறுவனங்களால் தொடர்ந்து செயல்பட இயலாதுபோனால் குடும்பங்கள் எதிர்நோக்கக்கூடிய இடையூறையும் சிரமத்தையும் இது பெருமளவு குறைக்கும்,” என்றது அமைச்சு.
பள்ளிப் பேருந்துக் கட்டணத்தில் நிறுவனங்கள் ஏதாவது திருத்தம் செய்தால், செப்டம்பர் மாதத்திலிருந்து பெற்றோரிடமும் பிள்ளைகளின் காப்பாளர்களிடமும் அதுபற்றி தெரியப்படுத்தும்.
கல்வி அமைச்சின் நிதி உதவித் திட்டத்தில் இடம்பெறும் தொடக்கப்பள்ளி மாணவர்கள் மாதாந்தர கட்டணத்திற்கு 65 விழுக்காடு உதவி நிதி பெறுவார்கள்.
ஓட்டுநர் பற்றாக்குறையால் பள்ளிப் பேருந்து சேவைத் துறை பாதிக்கப்பட்டுள்ளது. இதனால், கம்ஃபர்ட் டெல்குரோ பஸ் போன்ற சில நிறுவனங்கள், பள்ளிகளுடன் செய்திருந்த ஒப்பந்தங்களை முன்கூட்டியே ரத்து செய்ததாக மே மாதம் செய்தி வெளிவந்தது.
இதற்கான ஒரு தீர்வாக, அதிகமான வெளிநாட்டு ஊழியர்களை வேலைக்கு எடுக்க கல்வி அமைச்சு ஜூன் மாதம் அனுமதியளித்தது.

