இங் கொக் சோங் நன்கொடைகளை ஏற்கவில்லை: சொந்தச் செலவில் தேர்தல் பிரசாரம் செய்கிறார்

1 mins read
84c5fcc2-75d2-48fd-86bc-b754a061feda
அதிபர் தேர்தல் வேட்பாளர் இங் கொக் சொங், வியாழக்கிழமை கிம் மோ சந்தை, உணவங்காடி நிலையத்தில் வாக்காளர்களைச் சந்தித்தார். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

அதிபர் தேர்தல் வேட்பாளரான இங் கொக் சொங், நன்கொடைகளை ஏற்காமல் தமது சொந்தச் செலவில் தேர்தல் பிரசாரம் செய்கிறார்.

கிம் மோ சந்தை, உணவு நிலையத்திற்கு வியாழக்கிழமை காலை வருகை தந்த திரு இங், தனக்கு ஆதரவளிக்கும் எவருக்கும் கடன்பட்டிருக்க விரும்பவில்லை என்று செய்தியாளர்களிடம் கூறினார்.

“நல்லுள்ளம் கொண்ட சிலர் எனது இயக்கத்திற்கு நிதியளிக்க முன்வந்தனர். ஆனால், அவற்றை நான் மரியாதையுடன் மறுத்துவிட்டேன். அவர்கள் விருப்பப்பட்டால், அறப்பணிக்கு நன்கொடையாக வழங்கலாம் என்று யோசனை கூறினேன்,” என்றார் அவர்.

தேர்தல் பிரசாரத்துக்கான தனது மொத்த செலவு, தேர்தல் துறை வகுத்திருக்கும் $812,822.10 வரம்புக்குக் குறைவாக இருக்கும் என்றும் 75 வயது திரு இங் கூறினார்.

சக வேட்பாளர் திரு தர்மன் சண்முகரத்தினம் அதிபருக்கும் பிரதமருக்கும் இடையிலான உறவு பற்றி புதன்கிழமை பேசியதன் தொடர்பிலும் திரு இங் கருத்துரைத்தார்.

“காப்புநிதியைப் பாதுகாப்பதும், குறிப்பிட்ட சில பொதுச் சேவை பதவிகளின் நேர்மையைக் காப்பதும், சிங்கப்பூர் மக்களின் நலனுக்காகச் செயல்படுவதும் அதிபரின் பொறுப்புகள்.

“எனவே, பிரதமருடன் அதிபருக்கு நெருக்கமான உறவு இருந்தால், அவரைச் சார்ந்திராத முறையில் தனது பொறுப்புகளை நிறைவேற்றுவது மிகவும் சிரமமாக இருக்கும் என்று நினைக்கிறேன்,” என்றார் திரு இங்.

திரு இங் இன்று ஏபிசி பிரிக்வொர்க்ஸ் சந்தைக்கும் சொம் சொம் உணவு நிலையத்திற்கும் வருகையளிப்பார்.

அவர் இணையம்வழி கூட்டம் நடத்தத் திட்டமிடுவதாகவும் தெரிவித்தார்.

குறிப்புச் சொற்கள்