புதிய பிரதமர் ஸ்ரேத்தாவுடன்ஜெனரல் பிரயுத் சந்திப்பு

புதிய பிரதமர் ஸ்ரேத்தாவுடன்ஜெனரல் பிரயுத் சந்திப்பு

2 mins read
edf119ba-bf0a-470c-9b65-f530e3b5e541
புதிய பிரதமர் ஸ்ரேத்தா தவிசின் முன்னாள் பிரதமர் ஜெனரல் பிரயுத் சான்-ஓ-சாவை சந்தித்து வியாழக்கிழமை சந்தித்தார். - படம்: தாய்லாந்து அரசாங்க மாளிகை

பேங்காக்: தாய்லாந்தின் புதிய பிரதமர் ஸ்ரேத்தா தவிசின், வியாழக்கிழமை அரசாங்கக் கட்டடத்தில் ஜெனரல் பிரயுத் சான்-ஓ-சாவை சந்தித்து மரியாதை செலுத்தினார்.

பியூ தாய் கட்சியைச் சேர்ந்த திரு ஸ்ரேத்தா, காலை 11.05 மணியளவில் அரசாங்கக் கட்டடத்தைச் சென்றடைந்தார். முன்னாள் சொத்துத்துறை தொழிலதிபரான திரு ஸ்ரேத்தா, தாய்லாந்தின் 30வது பிரதமராகப் பதவி ஏற்க அரசபூர்வ அங்கீகாரம் கிடைத்ததைத் தொடர்ந்து இந்த வருகையை அவர் மேற்கொண்டார்.

புதிய பிரதமருடன், முன்னாள் பிரதமர் யிங்லக் ‌ஷினவாத்வின் முன்னாள் காவல்துறை காவலரான கர்னல் வதன்யு வட்ச்சரபலொதாய் உடன் சென்றிருந்ததாகத் தெரிவிக்கப்பட்டது.

ஐக்கிய தாய் தேசக் கட்சியின் தலைவரான பிரபோன் சலிரதவிபகாவும் இந்தச் சந்திப்பில் கலந்துகொண்டார்.

இந்தச் சந்திப்பு 40 முதல் 45 நிமிடம் நீடித்ததாகக் கூறப்படுகிறது.

திரு ஸ்ரேத்தா தாய்லாந்து நாடாளுமன்றத்தில் 482 வாக்குகளுடன் புதிய பிரதமராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவருக்கு எதிராக வாக்களித்த 165 பேரில் கிட்டத்தட்ட அனைவருமே முன்னேற்றக் கட்சியைச் சேர்ந்தவர்கள். மே மாதப் பொதுத் தேர்தலில் வெற்றிபெற்ற இக்கட்சியின் தலைவர் பிட்டா, பிரதமராகப் பதவியேற்க நாடாளுமன்றம் ஆதரவளிக்கவில்லை.

திரு ஸ்ரேத்தா அரசியல் களத்தில் அதிக பிரபலமானவராக இல்லாவிட்டாலும், முன்னாள் பிரதமர்களான தக்சின், யிங்லக் ஆகியோருடனும், பியூ தாய் கட்சியின் முக்கிய பிரமுகர்களுடனும் நெருக்கமானவர்.

ஆனால், யிங்லக் அரசாங்கத்திற்கு எதிராக சுதிப் தக்சுபானும் மக்கள் ஜனநாயக சீர்திருத்தக் குழுவும் நடத்திய போராட்டத்தை திரு ஸ்ரேத்தா வெளிப்படையாகக் கண்டித்திருந்தார்.

ஜெனரல் பிரயுத் 2014ல் நடத்திய ராணுவப் புரட்சிக்குப் பிறகு, “மனப்பான்மையை சரிசெய்ய” நேரில் வருமாறு உத்தரவிடப்பட்ட முக்கிய பிரமுகர்களில் இவரும் ஒருவராக இருந்தார்.

குறிப்புச் சொற்கள்