குறிக்கோளை ஒருபோதும் கைவிடமாட்டேன்: தர்மன்

குறிக்கோளை ஒருபோதும் கைவிடமாட்டேன்: தர்மன்

2 mins read
0058de18-a146-4665-b52f-f175c67a76bf
அதிபர் மேற்கொள்ளும் பாரம்பரிய, நீண்டகாலப் பொறுப்புகளில் துடிப்புடன் கவனம் செலுத்த திரு தர்மன் உறுதியளித்தார். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

அதிபர் தேர்தல் வேட்பாளரும் முன்னாள் மூத்த அமைச்சருமான திரு தர்மன் சண்முகரத்னம்,66, தமது முதல் பிரசார ஒலிபரப்பில், தமது சுதந்திர மனப்போக்கையும் அனைவருக்கும் மரியாதை தரவேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்தியுள்ளார்.

வியாழக்கிழமை மாலை ஒலிபரப்பான அவரது பிரசார உரை, ஆங்கிலத்தில் அமைந்திருந்தது.

சிங்கப்பூரில் அனைவரையும் ஒன்றுபடுத்தும் ஆளுமையாக விளங்கவும் உலக அரங்கில் நாட்டின் நலனை மேம்படுத்தும் வகையில் செயல்படவும் இவற்றின் மூலம், அதிபர் மேற்கொள்ளும் பாரம்பரிய, நீண்டகாலப் பொறுப்புகளில் துடிப்புடன் கவனம் செலுத்தவும் திரு தர்மன் உறுதியளித்தார்.

நாட்டின் கையிருப்பைப் பாதுகாக்கவும் பொதுச் சேவைத்துறையின் நேர்மையைக் கட்டிக்காக்கவும் தமது அறிவாற்றலையும் சுயமாக முடிவெடுக்கும் திறனையும் பயன்படுத்த அவர் உறுதிகூறினார்.

முன்னெப்போதையும்விட சிங்கப்பூர் அதன் ஒற்றுமையை வலுப்படுத்த வேண்டிய நேரம் இது என்றார் திரு தர்மன்.

“அரசியலுக்கு அப்பாற்பட்டு, சிங்கப்பூர் மக்களின் அதிபராகச் சேவையாற்ற என்னால் இப்போது முடியும் என்று நம்புகிறேன்,” என்று அவர் குறிப்பிட்டார்.

அனைவரையும் உள்ளடக்கிய சமூகம் என்ற இலக்கை அடைவதற்கு அரசாங்கக் கொள்கைகள் உதவினாலும் அதற்கு அப்பாலும் கவனத்தில் கொள்ளவேண்டிய அம்சங்கள் உள்ளன.

இனம், சமயம் உள்ளிட்ட வேற்றுமைகளுக்கு இடையே, நாம் எந்த விதமான பின்னணியைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும், வெவ்வேறு கல்வித் தகுதியைக் கொண்டிருந்தாலும், ஒருவருக்கொருவர் வெளிப்படுத்தும் மரியாதையும் நட்பும் முக்கியம் என்று திரு தர்மன் வலியுறுத்தினார்.

உலகளவில் அடிக்கடி ஏற்படும் நெருக்கடிகள் சிங்கப்பூர் போன்ற சிறிய நாடுகளைச் சோதிக்கக்கூடும். சிங்கப்பூர் பல்வேறு கண்ணோட்டங்களை உடைய சமூகமாகி வருகிறது. இதனால் சமூகத்தில் பிளவுகள் ஏற்படாமல் காப்பதே உண்மையான சவால் என்றார் அவர்.

சிங்கப்பூரர்கள் எல்லாவிதமான திறன்களையும் வேலைகளையும் மதிக்க வேண்டும். சிறப்புத் தேவையுடையோர், வாழ்க்கையில் மறுவாய்ப்பு தேவைப்படுவோரையும் மதிக்கக் கற்றுக்கொள்ள வேண்டும். மூத்த குடிமக்கள், மனநல ஆதரவு தேவைப்படுவோர், இல்லத்தரசிகள், மாறுபட்ட கண்ணோட்டம் அல்லது அரசியல் சார்பு கொண்டோரையும் மதித்தல் அவசியம். கலைஞர்கள், விளையாட்டாளர்களை மதிக்க வேண்டும். அனைத்து சமயங்களுக்கும் மதிப்பளிக்க வேண்டும் என்று திரு தர்மன் வலியுறுத்தினார்.

தமது வாழ்க்கை முழுவதும் சுயமாக முடிவெடுக்கும் திறனை வெளிப்படுத்தி வந்துள்ள அவர், அதனை ஒருபோதும் கைவிடப்போவதில்லை என்றார்.

அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டால் தமது ஆழமான நிபுணத்துவம், நீண்டகால அனுபவம் ஆகியவற்றுடன் சுயமாக முடிவெடுக்கும் திறன் மூலம் நாட்டு மக்களுக்குச் சேவையாற்ற அவர் உறுதிகூறினார்.

குறிப்புச் சொற்கள்