அதிபர் தேர்தல் வேட்பாளர்களில் ஒருவரான திரு இங் கொக் சொங், 75, ஜிஐசி நிறுவனத்தில் நாட்டின் கையிருப்பை அதிகரிக்க உதவிய தமது அனுபவத்தையும் எக்காலத்திலும் எந்த அரசியல் கட்சியிலும் இடம்பெறாதவர் என்ற நிலையையும் தமது முதல் பிரசார ஒலிபரப்பில் வலியுறுத்தியுள்ளார்.
ஜிஐசி நிறுவனத்தின் முன்னாள் தலைமை முதலீட்டு அதிகாரியான அவர் ஆங்கிலத்தில் ஆற்றிய உரையில், அந்நிறுவனத்தை உலகத் தரம் வாய்ந்த ஒன்றாக உருவாக்கியதிலும் பல்வேறு நெருக்கடிகளின்போது அதை வழி நடத்தியதிலும் தம் வாழ்நாளின் கணிசமான பகுதி கழிந்ததாகக் குறிப்பிட்டார்.
எந்த அரசியல் கட்சியையும் சாராத, முன்னெப்போதும் சார்ந்திராத ஒருவர், சிங்கப்பூரின் அதிபராகத் தேர்ந்தெடுக்கப்படுவதற்கான காலம் இது என்றார் திரு இங்.
சிங்கப்பூர் இதுவரை ஆளும்கட்சி சார்ந்த ஒருவரையே அதிபராகத் தேர்ந்தெடுத்துள்ளது. நிறுவனங்களுக்கும் சுயேச்சையான வெளித்தரப்புக் கணக்குத் தணிக்கையாளர் இருப்பதைப்போல அரசாங்கத்திற்கு வெளித்தரப்பினரான அதிபரின் தேவையைத் திரு இங் எடுத்துரைத்தார்.
சிங்கப்பூரர்களின் நலன்களை மேம்படுத்த ஆக்ககரமாகவும் பாகுபாடு இன்றியும் அரசாங்கத்துடன் இணைந்து பணியாற்ற அவர் உறுதியளித்தார்.
அதிபர் என்பவர் சிங்கப்பூரர்களின் ஒற்றுமைக்கான அடையாளம் என்றார் அவர். திறம்படச் செயலாற்றவும் சிங்கப்பூரர்களுக்குச் சரியானதை, நல்லதைச் செய்யவும் அவர் உறுதியளித்தார்.
45 ஆண்டுகளாக பொதுச் சேவையில் ஈடுபட்டதைக் குறிப்பிட்ட திரு இங், நாட்டின் நிதிவளத்தைப் பாதுகாப்பதற்குத் தமது அனுபவம் பயன்படும் என்றார்.
இளையர், முதியோர், எளிதில் பாதிக்கப்படக்கூடியோர் ஆகிய பிரிவினருக்குக் குரல்கொடுக்க உறுதிகூறிய திரு இங், சிங்கப்பூரின் முன்னேற்றத்தில் யாரும் பின்தங்கிவிடாமல் இருப்பதை உறுதிசெய்யவிருப்பதாகக் கூறினார்.
தொடர்புடைய செய்திகள்
தமது பணிக்காலத் தொடர்புகளைப் பயன்படுத்தி சிங்கப்பூரை உலக அரங்கில் மிளிரச் செய்ய இயலும் என்றார் அவர்.

