சிங்கப்பூர் காவல்துறை ஆகஸ்ட் 15ஆம் தேதியன்று நடத்திய அதிரடிச் சோதனையில் கள்ளப் பணத்தை நல்ல பணமாக்கும் விவகாரம் தொடர்பில் 10 வெளிநாட்டவர் கைது செய்யப்பட்டனர். இவர்களில் ஐவர் மீது பின்னர் குற்றச்சாட்டுகளும் சுமத்தப்பட்டன.
ஊழல், போதைப்பொருள் கடத்தல் மற்றும் பிற கடுமையான குற்றங்கள் (பலன்கள் பறிமுதல்) சட்டத்தின் கீழ் கள்ளப் பணத்தை நல்ல பணமாக்கும் குற்றமும் கையாளப்படும்.
சொத்துகளை அதிகாரிகள் உடனடியாகக் கைப்பற்றி அல்லது முடக்கி அல்லது மேற்கொண்டு பரிவர்த்தனைகள் நடக்காதவாறு தடுக்கும் அதிகாரத்தை இந்தச் சட்டம் வழங்குகிறது.
தற்போதைய விவகாரத்தில் கிட்டத்தட்ட $1 பில்லியன் மதிப்பிலான சொத்துகளைக் காவல்துறையினர் சிங்கப்பூரில் கைப்பற்றினர். இவற்றில் 105 வீடுகள், 50 வாகனங்கள், 270க்கும் மேற்பட்ட நகைகளுடன் 250க்கும் மேற்பட்ட ஆடம்பரப் பைகளும் கடிகாரங்களும் அடங்கும்.
இவ்வாறு பறிமுதல் செய்யப்பட்ட பொருள்களின் நிலை என்ன என்று ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் கண்டறிந்ததில் குற்றம் சுமத்தப்பட்டவர் இறுதியில் நிரபராதி எனத் தீர்ப்பளிக்கப்படலாம் என்ற சாத்தியத்தில் அப்பொருள்கள் சேமிப்பகத்தில் இருக்கும் என்று தெரியவந்தது.
குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின்படி மின்னியல் சாதனங்கள், தனிநபர் உடைமைகள் போன்றவை காவல்துறையினரின் கட்டுப்பாட்டில் இருக்கும் என்று வழக்கறிஞர் இயூஜீன் துரைசிங்கம் தெரிவித்துள்ளார்.
வங்கிக் கணக்குகளிலும் பங்குகளிலும் உள்ள பணத்தைக் கையாள்வதைப் பண நிதியங்களும் வங்கிக் கணக்கு உரிமையாளர்களும் தடுப்பதற்கு காவல்துறை ஆணை ஒன்றைப் பிறப்பிக்கும்.
வழக்கில் தீர்ப்பளிக்கப்படும் வரை சொத்துகள் அதிகாரிகள் கட்டுப்பாட்டில் இருக்கும்.
தொடர்புடைய செய்திகள்
கைப்பற்றப்பட்ட நிலையிலும் பொருள்களின் தரத்தைக் கட்டிக்காக்கும் வகையில் பராமரிப்பு வழங்கப்படும்.
வழக்கின் முடிவில் குற்றம் நிரூபிக்கப்பட்டுப் பொருள்கள் பறிமுதல் ஆவது உறுதியானால் பொருள்களை அகற்றுவது தொடர்பில் நீதிமன்றம் விசாரணை ஒன்றை நடத்தும்.
இந்நிலையில் பொருள்களின் நிலை என்னவாகும் என்ற நிபந்தனைகள் ஏதும் தற்போது சட்டத்தில் இடம்பெறவில்லை.

