சிங்கப்பூரின் தொழிற்சாலை உற்பத்தி சென்ற ஆண்டு ஜூலையுடன் ஒப்பிடுகையில் இவ்வாண்டு ஜூலை மாதம் 0.9 விழுக்காடு குறைந்திருப்பதாக சிங்கப்பூர் பொருளியல் வளர்ச்சிக் கழகம் வெள்ளிக்கிழமை வெளியிட்ட புள்ளிவிவரங்கள் காட்டுகின்றன.
பொதுவாகவே நிலையில்லாத் தன்மை கொண்ட உயிரியல் மருத்துவத் துறையை சேர்க்காமல், தொழிற்சாலை உற்பத்தி ஜூலை மாதம் 1.7 விழுக்காடு வளர்ச்சி அடைந்தது.
மாத அடிப்படையில், உற்பத்தி 4.1 விழுக்காடு அதிகரித்தது. முந்திய மாதத்தின் 3.3 விழுக்காடு வளர்ச்சியைவிட இது அதிகம். உயிரியல் மருத்துவத் துறையைச் சேர்க்காமல், மாத அடிப்படையிலான தொழிற்சாலை உற்பத்தி 6.9 விழுக்காடு அதிகரித்தது.
எண்ணெய் அல்லாத உள்நாட்டு ஏற்றுமதி தொடர்ந்து பத்து மாதங்களாகக் குறைந்து வருவதை ஜூலை மாதப் புள்ளிவிவரங்கள் பிரதிபலிக்கின்றன.
மின்னணுவியல் துறையின் உற்பத்தி சென்ற ஆண்டைவிட இவ்வாண்டு ஜூலை மாதம் 5.1 விழுக்காடு அதிகரித்தது. இந்தத் துறை, ஜூன் மாதம் 2.9 விழுக்காடு சரிவடைந்திருந்தது.
பகுதி மின்கடத்திகள், தகவல்தொடர்பு, பயனீட்டு மின்சாதனங்கள் ஆகிய துறைகளின் வளர்ச்சி, கணினி உபரிப்பொருள், தரவுக் கோப்பு போன்ற துறைகளின் சரிவை ஈடுசெய்தது.

