அதிபர் தேர்தலில் போட்டியிடும் மற்ற வேட்பாளர்கள் கூறுவதற்கெல்லாம் தாம் கருத்து தெரிவிக்கப்போவதில்லை என்று திரு தர்மன் சண்முகரத்னம் தெரிவித்துள்ளார்.
மாறாக, தம்மை எதிர்த்துப் போட்டியிடுபவர்கள் கூறும் கருத்துகள் குறித்து மக்களே முடிவெடுக்கட்டும் என்றார் அவர்.
சிங்கப்பூரில் பிறந்தவர்களை அதிபராகவும் அதிபரின் மனைவியாகவும் தேர்ந்தெடுக்கும் வாய்ப்பைப் பெற சிங்கப்பூரர்களுக்கு விருப்பம் இருக்கக்கூடும் என்று அதிபர் தேர்தல் வேட்பாளர் டான் கின் லியான் கூறியது தொடர்பாக திரு தர்மனிடம் கேள்வி எழுப்பப்பட்டபோது அவர் இவ்வாறு தெரிவித்தார்.
வெள்ளிக்கிழமையன்று தமது மனைவி ஜேன் இட்டோகியுடன் திரு தர்மன் அமோய் ஸ்திரீட் உணவு நிலையத்துக்குச் சென்று மக்களைச் சந்தித்துப் பேசினார்.
அதிபர் தேர்தலில் போட்டியிட விண்ணப்பம் செய்து பிறகு தகுதிபெறாத திரு ஜார்ஜ் கோவின் வாழ்க்கைக் கதையைத் திரு தர்மன் உதாரணமாகக் காட்டினார்.
“ஜார்ஜ் கோ மலேசியாவில் பிறந்தார். ஏழையாக இருந்த அவர், கடுமையாக உழைத்தார். பிறகு சிங்கப்பூருக்கு வந்தார், வாழ்க்கையில் வெற்றி பெற்றார். இது சிங்கப்பூர், சிங்கப்பூரர்களுக்கு உரிய பாணியாகும்,” என்றார் திரு தர்மன்.
மற்ற வேட்பாளர்கள் கூறும் கருத்துகளை விமர்சிப்பது தமது பாணியல்ல என்று செய்தியாளர்களிடம் அவர் தெரிவித்தார்.
“ என் வாழ்க்கை ஒரு திறந்த புத்தகம். அனைவருக்கும் என்னைப் பற்றி நன்றாகத் தெரியும்,” என்று திரு தர்மன் கூறினார்.
தொடர்புடைய செய்திகள்
வசதி குறைந்தோர், தன்னம்பிக்கை உள்ளவர்களாக உருவெடுக்க நடவடிக்கை எடுப்பது முக்கியம் என்று திரு தர்மன் வலியுறுத்தினார்.
“தன்னம்பிக்கை இயல்பாக வந்துவிடுவதில்லை. ஏழ்மையில் வாடும்போதும், போதுமான வசதி இல்லாதபோதும் பிறர் தம்மை ஏளனமாகப் பார்க்கின்றனர் என்ற எண்ணம் தோன்றும். இதனால் தன்னம்பிக்கை இல்லாமல் போகக்கூடும். இதை நாம் சாதாரணமாக எண்ணி அதன் பாதிப்பைக் குறைத்து மதிப்பிடக்கூடாது.
“எனவே, வசதி குறைந்தோரின் நம்பிக்கையைப் பெறுங்கள், அவர்களுக்கு மரியாதை தாருங்கள். சுயமாக மேம்பட அவர்களுக்கு உதவி செய்யுங்கள்,” என்று திரு தர்மன் கேட்டுக்கொண்டார்.

