குப்பைக்கூளத் தீயால் மேற்கு ஜாவாவில் அவசரநிலை

குப்பைக்கூளத் தீயால் மேற்கு ஜாவாவில் அவசரநிலை

1 mins read
96278a9f-a6b5-4171-84be-222cc2253dfe
குப்பைக் கிடங்கில் ஏற்பட்டுள்ள தீயை அணைக்க தீயணைப்பாளர்கள் போராடி வருகின்றனர். - படம்: ஏஎஃப்பி

பண்டுங்: இந்தோனீசியாவின் மேற்கு ஜாவாவில் நாள்கணக்காகப் பற்றி எரியும் குப்பைக்கூளத் தீயால் அவசரநிலை அறிவிக்கப்பட்டிருப்பதாக அதிகாரிகள் வெள்ளிக்கிழமை தெரிவித்தனர்.

கிட்டத்தட்ட இரண்டரை மில்லியன் மக்கள் வாழும் பண்டுங் நகருக்குப் பயன்படும் சாரிமுக்தி குப்பை நிரப்பும் நிலப்பகுதியில் செவ்வாய்க்கிழமையிலிருந்து தீப்பற்றி எரிகிறது.

அப்பகுதிக்கு அருகில் வாழும் மக்களில் குறைந்தது 67 பேர் சுவாசக்குழாய் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இருவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.

தீயிலிருந்து ஆறு கிலோமீட்டர் தூரத்தில் உள்ள இஸ்லாமியப் பள்ளியின் மாணவர்களை வீட்டிலேயே இருக்கும்படி சொல்லியிருப்பதாகப் பள்ளி முதல்வர் தெரிவித்தார்.

“தீப்புகை அதிகமாக இருந்ததால் கல்வி நடவடிக்கைக்கு இடையூறாக இருந்தது. அதோடு, மாணவர்களின் பாதுகாப்புக்கும் ஆரோக்கியத்திற்கும் மிரட்டலாக இருந்தது,” என திரு அமின் புன்யாமின் ஏஎப்பி செய்தி நிறுவனத்திடம் கூறினார்.

“தீப்பற்றி எரியும் குப்பையிலிருந்து வரும் புகை வித்தியாசமாக இருப்பதால் அவர்களின் உடல்நலன் குறித்து கவலைப்படுகிறோம். இந்தப் புகை மூச்சை அடைக்கிறது,” என்றார் அவர்.

குப்பை நிரப்பும் நிலப்பகுதி 25 ஹெக்டர் பரப்பளவு கொண்டது. குறைந்தது 30 தீயணைப்பு வாகனங்கள் தீயைக் கட்டுப்படுத்த போராடி வருகின்றன.

இந்நிலையில், அப்பகுதியில் 21 நாள் அவசரநிலை அறிவிக்கப்பட்டுள்ளது. தீயை அணைக்க ஹெலிகாப்டரிலிருந்து நீர் குண்டுகள் போடப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது.

இதற்கிடையே, ஜகார்த்தா வட்டாரத்தில் காற்றுத் தூய்மைக்கேட்டை ஏற்படுத்தியதாகக் கூறப்படும் நான்கு நிறுவனங்களையும் மூட சுற்றுப்புற, வனத்துறை அமைச்சு உத்தரவிட்டுள்ளது.

குறிப்புச் சொற்கள்