டான் கின் லியான்: பிரதமருடன் நல்லுறவு வளர்த்துக்கொள்ள முயல்வேன்

டான் கின் லியான்: பிரதமருடன் நல்லுறவு வளர்த்துக்கொள்ள முயல்வேன்

1 mins read
e2978f34-8061-4d12-9b81-f2362d4f52ca
கேலாங் சிராய் சந்தை மற்றும் உணவு நிலையத்தில் அதிபர் தேர்தல் வேட்பாளரான டான் கின் லியான் தம் துணைவியார் டே சியூ ஹோங்குடன் கடைக்காரர்களையும் வாடிக்கையாளர்களையும் சந்தித்துப் பேசினார். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டால் பிரதமருடன் நல்லுறவை வளர்த்துக்கொள்ள முயல்வேன் என்று தேர்தல் வேட்பாளரான டான் கின் லியான் கூறியுள்ளார். அவ்வாறு செய்வதன்வழி இரு தலைவர்களும் சிங்கப்பூரர்களின் வாழ்க்கையை மேம்படுத்தும் பொதுப்படையான லட்சியங்களை அடைவதற்கு வழிகாணலாம் என்றார் அவர்.

அதிபர் சுதந்திரமாக அறிவுரை அளிப்பதும் அது அப்படியே ஏற்றுக்கொள்ளப்படுவதும் பிரதமர், அதிபர் இருவரிடையே நிலவுகின்ற மரியாதையைப் பொறுத்தது என்று சக வேட்பாளரும் முன்னாள் மூத்த அமைச்சருமான தர்மன் சண்முகரத்னம் முன்னதாகக் கூறியிருந்த கருத்து தொடர்பில் 75 வயது திரு டான் பேசினார்.

“வேண்டியதைப் பிறரிடத்தில் வற்புறுத்தும் ஆற்றல் அதிபருக்கு உண்டு என்பதை அவரும் (திரு தர்மன்) ஒப்புக்கொள்கிறார்,” என்று கேலாங் சிராய் சந்தை மற்றும் உணவு நிலையத்தை வெள்ளிக்கிழமை வலம் வந்த திரு டான் குறிப்பிட்டார்.

இத்தகைய வற்புறுத்தும் ஆற்றல் அதிபருக்கும் பிரதமருக்கும் இடையே நல்லுறவு இருந்தால் மட்டுமே சாத்தியமாகும் என்பதைத் தாமும் ஏற்பதாகக் கூறினார் திரு டான். அதிபர் என்ற முறையில் மக்களின் ஆசைகள், லட்சியங்கள், இன்னல்கள் ஆகியவற்றைத் தெரிவிக்க முயல்வேன் என்றார் அவர். இதை அரசாங்க விரோதியாக இல்லாமல் செய்வேன் என்றும் அவர் குறிப்பிட்டார்.

அரசாங்கக் கொள்கைகளை மாற்ற நினைப்பது அதிபரின் அரசியலமைப்புப் பொறுப்புகளில் அடங்காது என்பதைத் தாம் அறிந்துள்ளதாகக் கூறினார் திரு டான். இருப்பினும் சில கொள்கைகள் மாற்றப்படுவதன் தொடர்பிலான தமது யோசனைகளை அரசாங்கத்திடமும் பிரதமரிடமும் அமைச்சர்களிடமும் முன்வைப்பதில் தாம் உறுதியாக இருப்பதாக அவர் குறிப்பிட்டார்.

குறிப்புச் சொற்கள்