ஈசூனில் உள்ள வீடமைப்பு வளர்ச்சிக் கழக (வீவக) அடுக்குமாடிக் கட்டடத்தின் முதல் மாடியில் செயல்பட்டுவந்த தேநீரகத்தை மூடிவிட்டு, அவ்விடத்தை ஆகஸ்ட் மாதக் கடைசிக்குள் திருப்பித்தருமாறு வீவக உத்தரவிட்டுள்ளது.
“ஹூட் வைப்ஸ் கஃபே” தேநீரகத்தின் வாடிக்கையாளர்கள் சத்தமாக இருப்பதாகவும், குப்பை போடுவதாகவும், அடாவடித்தனமாக நடந்து கொள்வதாகவும் குடியிருப்பாளர்கள் ஜூன் மாதம் அளித்த புகார்களைத் தொடர்ந்து, வீவக இந்த உத்தரவைப் பிறப்பித்தது.
ஈசூன் ஸ்திரீட் 43, புளோக் 468A-ல் மதுபானக்கடை திறக்கப்பட்டிருப்பதாகத் தகவல் கிடைத்ததும் அங்கு சென்று பார்த்ததாக நீ சூன் குழுத்தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் டெரிக் கோ சென்ற வாரம் ஃபேஸ்புக்கில் பதிவிட்டார்.
அந்தக் கடை தேநீரகம் நடத்துவதற்கு வாடகைக்கு விடப்பட்டதாக வீவக தெரிவித்தது. குடியிருப்பாளர்களின் புகார்களை விசாரிப்பதற்காக அங்கு சென்று பார்த்தபோது, வாடகை விதிமுறைகள் மீறப்பட்டிருந்ததை வீவக கண்டறிந்தது.
“நாள் முழுவதும் குடியிருப்பாளர்களுக்கு உணவும் பானமும் விற்பனை செய்யும் தேநீரகமாகப் பயன்படுத்த அவ்விடம் வாடகைக்கு விடப்பட்டிருந்தது. நாங்கள் அவ்விடத்தைச் சோதனையிட்டபோது, மாலை 4.30 மணியிலிருந்து இரவு 10 மணி வரை மட்டுமே அது செயல்பட்டதையும், பெரும்பாலும் மதுபானங்களே விற்கப்பட்டதையும் கண்டறிந்தோம்,” என்றும் வீவக தெரிவித்தது.
வீவக வருகையளித்தபோது, விற்பனைக்குள்ள உணவு வகைகளின் பட்டியல் எதுவும் காணப்படவில்லை. வாடிக்கையாளர்களுக்கு உணவும் பரிமாறப்படவில்லை.
வீவக பலமுறை எச்சரித்தும், வாடகைதாரர் ஒத்துழைக்காமல் தொடர்ந்து விதிமுறைகளை மீறிவந்ததாக வீவக தெரிவித்தது.
இந்நிலையில், கடையை மூடிவிட்டு இடத்தைத் திருப்பித்தர சென்ற மாதம் வீவக உத்தரவிட்டது.
ஹூட் வைஃப்ஸ் கஃபே இப்போதைக்கு மூடப்பட்டிருப்பதாக சென்ற வாரம் இன்ஸ்டாகிராமில் பதிவிட்டிருந்தது.