தேசிய சேவைக்குச் செல்லாத இளையரைத் தேடிவந்த மத்திய மனிதவளத் தள அதிகாரிகளில் ஒருவரை தாக்கிய குற்றத்திற்காக அந்த இளையரின் தாயாருக்கு 18 வார சிறைத் தண்டனை விதிக்கப்பட்டு உள்ளது.
கே.சாந்தி ஏ.கிருஷ்ணசாமி எனப்படும் அந்த 58 வயது மாது மீது பொது சேவை ஊழியருக்கு வேண்டுமென்றே காயம் விளைவித்ததாகவும் பொது சேவை ஊழியருக்கு எதிராகக் குற்றச் செயலில் ஈடுபட்டதாகவும் குற்றங்கள் சுமத்தப்பட்டு இருந்தன.
வெள்ளிக்கிழமை மாவட்ட நீதிபதி கிறிஸ்டபர் கோ தண்டனை விதித்து தீர்ப்பு அளித்தபோது அந்த மாது பலமுறை குறுக்கிட்டார். தண்டனைக்கான காரணத்தை நீதிபதி விளக்கிக்கொண்டு இருந்தபோது மாது குறுக்கிட்டுப் பேசியதால் நீதிபதி உரக்கப் பேச வேண்டியதாயிற்று.
குற்றச்சாட்டுகள் தொடர்பில் அரசு வழக்கறிஞரின் வாதத்தை ஏற்றுக்கொள்வதாக நீதிபதி கூறினார்.
மேலும், கே. சாந்தி தொடர்ந்து முரட்டுத்தனத்தில் ஈடுபட்டதற்குச் சாட்சியாக அதிகாரி அணிந்திருந்த கேமராவில் பதிவான படங்கள் இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
அதிகாரியை அந்த மாது பலமுறை வலுக்கட்டாயமாகப் பிடித்து இழுத்ததை அந்தப் படங்கள் காட்டின. அவரது செயலை நிறுத்துமாறு பல தடவை விடுக்கப்பட்ட எச்சரிக்கைகளையும் மீறி அவர் நடந்துகொண்டதும் கேமராவில் பதிவாகி இருந்தது.
அவற்றை எல்லாம் நீதிபதி விளக்கியபோது குறிக்கிட்ட கே. சாந்தி, “அவை எல்லாம் உண்மை அல்ல,” என்று கூறினார்.
“நான் தீர்ப்பு சொல்லி முடிக்கும்வரை அமைதியாக இருங்கள்,” என்று நீதிபதி தெரிவித்தார்.
தொடர்புடைய செய்திகள்
சம்பவம் நிகழ்ந்த அன்று தாம் நடந்துகொண்ட விதத்திற்கு சோதனை அதிகாரிகளிடம் அந்த மாது மன்னிப்புக் கேட்கத் தவறியதாக நீதிபதி சுட்டிக்காட்டினார்.
மாதுக்கு எதிரான மேலும் ஐந்து குற்றச்சாட்டுகள் தண்டனை விதிக்கப்பட்டபோது கவனத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டன.

