போதைப்பொருள் குற்றங்களில் ஈடுபட்டதாகச் சந்தேகிக்கப்படும் 130 பேர் கைது

போதைப்பொருள் குற்றங்களில் ஈடுபட்டதாகச் சந்தேகிக்கப்படும் 130 பேர் கைது

2 mins read
25d69f73-1bcb-4599-87b7-512a914992e5
பறிமுதல் செய்யப்பட்ட போதைப்பொருளின் மதிப்பு சுமார் $453,800. - படம்:

தீவு முழுவதும் நடத்தப்பட்ட திடீர் சோதனையில், போதைப்பொருள் குற்றங்களில் ஈடுபட்டதாகச் சந்தேகிக்கப்படும் 130 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களில் பதின்ம வயதினர் இருவர் அடங்குவர்.

பறிமுதல் செய்யப்பட்ட போதைப்பொருளின் மதிப்பு சுமார் $453,800.

ஆகஸ்ட் 14ஆம் தேதி முதல் வெள்ளிக்கிழமை வரை காலாங், மரின் பரேட், பாசிர் ரிஸ், உட்லண்ட்ஸ் போன்ற இடங்களில் திடீர் சோதனை நடத்தப்பட்டதாக மத்திய போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவு (சிஎன்பி) சனிக்கிழமை தெரிவித்தது.

கைது செய்யப்பட்டவர்களில் 15 வயதுச் சிறுமியும் 17 வயதுச் சிறுவனும் அடங்குவர்.

பறிமுதல் செய்யப்பட்ட போதைப்பொருளில் 1.318 கிலோகிராம் ‘ஹெராயின்’, 2.535 கிலோகிராம் கஞ்சா, 486 கிராம் ‘ஐஸ்’, 188 கிராம் ‘கெட்டமின்’, 62 கிராம் ‘எக்ஸ்டசி’, 311 ‘எக்ஸ்டசி’ மாத்திரைகள், 306 கிராம் ‘நியூ சைகோஆக்டிவ்’ ஆகியவை அடங்கும்.

மேலும் 213 ‘எரிமின்-5’ மாத்திரைகள், 51 ‘எல்எஸ்டி’ முத்திரைகள், 11 ‘வேப்பிங்’ சாதனங்கள், மூன்று ‘மெத்தடோன்’ புட்டிகள், ஆறு ‘கெம்மா-ஹைட்ரோக்சிபியூட்டிரேட்’ புட்டிகள், $1,503 ரொக்கம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.

ஆகஸ்ட் 14ஆம் தேதி உட்லண்ட்ஸ் ஸ்திரீட் 81ல் உள்ள குடியிருப்பு ஒன்றுக்குள் வலுக்கட்டாயமாக புகுந்த சிஎன்பி அதிகாரிகள், எண்மரைக் கைது செய்தனர்.

கிம் மோ சாலையில் உள்ள குடியிருப்பு ஒன்றில் கடந்த புதன்கிழமை நடத்தப்பட்ட மற்றொரு திடீர் சோதனையில் 24 வயது ஆடவர் ஒருவரும் 19 வயது மாது ஒருவரும் கைது செய்யப்பட்டனர். போதைப்பொருள் குற்றங்களில் ஈடுபட்டதாகச் சந்தேகிக்கப்படும் 29 வயது ஆடவர் ஒருவர் அதே பகுதியில் பின்னர் கைது செய்யப்பட்டார்.

கைது செய்யப்பட்டவர்களிடம் விசாரணை தொடர்கிறது.

குறிப்புச் சொற்கள்